ஐ.பி.எல் கோயில் விழாவை ஒட்டின
திருவிழா போல. கோயிலுக்கும் திருவிழாவுக்கும் சம்மந்தம் இருப்பதில்லை. திருவிழாவுக்கு
வேடிக்கை பார்க்கிறவர்கள், வாடிக்கையாளர்கள், பொழுதுபோக்காளர்கள் என கூட்டம் கூட்டமாக
வருவார்கள். கடந்த வருடத்தில் இருந்து இந்தியா தொடர்ந்து பல்வேறு டெஸ்ட் தொடர்களை ஆடி
வந்தது. அதற்கு வந்து ஆதரவு வந்த பார்வையாளர்களும் இப்போது ஐ.பி.எல்லுக்காக குழுமும்
பார்வையாளர்களும் முழுக்க வேறு. ஐ.பி.எல்லில் குழந்தைகள், பெண்கள், குடும்பங்கள் அதிகம்
வருகிறார்கள். கிரிக்கெட்டை நுணுகி ஆராய்ந்து விவாதித்து ரசிப்பதற்கான ஆட்டம் அல்ல
ஐ.பி.எல். ஐ.பி.எல்லில் பார்வையாளர்களுக்கு பல சமயம் என்ன ஷாட் ஆடப்படுகிறது, ஆட்டம்
என்ன நிலையில் இருக்கிறது என யோசிக்க நேரம் இருக்காது. அவர்கள் நொறுக்குத்தீனி தின்று,
கோக் குடித்து, செல்பி எடுப்பதற்குள் பாதி ஆட்டம் முடிந்து விடும். மீதி ஆட்டம் அவர்கள்
எழுந்து நின்று துள்ளி ஆரவாரிப்பதற்கானது. இதனாலே சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாய் ஐ.பி.எல்
முழுக்க முழுக்க தீபாவளியாக இருக்கிறது. ஐ.பி.எல் 2017உம் அப்படித் தான்.
இரண்டாவது ஆட்டத்தில் மும்பை அணியை
பூனே அணி தோற்கடித்தது. மூன்றாவது ஆட்டத்தில் கொல்கொத்தா அணி குஜராத் அணியை முறியடித்தது.
இரண்டுமே பேட்டிங் சொர்க்கபுரிகளில் நடந்தன. இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாய் பேட்டிங்
ஆடிய அணிகள் ஆதிக்கம் செலுத்தின. சுலபத்தில் வென்றன. ஹைதராபாதுக்கும் பங்களூருக்கும்
இடையிலான முதல் ஆட்டம் மட்டுமே இவ்விசயத்தில் விதிவிலக்கு.
ஆனால் மூன்று ஆட்டங்களிலும்
180க்கு மேல் அணிகள் ரன்கள் விளாசின. முதல் ஆட்டத்தில் இரண்டாவதாய் ஆடித் தோல்வியுற்ற
பங்களூர் அணி கூட 172 அடித்தது. அந்த ஆட்டத்தில் கேதார் ஜாதவ் ஒரு முக்கியமான சந்தர்பத்தில்
ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் பங்களூர் ஹைதராபாதின் டார்கெட்டை இன்னும் அருகே நெருங்கி
வந்திருக்கும். ஆக இவ்வருட ஐ.பி.எல்லில் ரன்கள் மலை மலையாய் குவியப்போகின்றன. பவுண்டரி,
சிக்ஸர்களுக்கு துள்ளி குதித்து ஆர்ப்பரித்தே பார்வையாளர்கள் களைப்படைய போகிறார்கள்.
மேலும் இரு விசயங்களை இவ்வருட ஐ.பி.எல் குறித்து ஆருடம் சொல்லலாம்.
1)
அடித்தாடும் பராக்கிரம பேட்ஸ்மேன்கள் கொண்ட அணிகள்
தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை குவித்து ஜெயிக்க போகின்றன. இடைநிலையாக ஆடும் அணிகள் கொஞ்சம்
சிரமப்பட போகின்றன.
2)
ஆட்டத்தொடர் கோடையில் நடக்கிறது. பொதுவாக இந்திய
ஆடுதளங்கள் கோடையில் சுழலுக்கு சாதகமாக இருக்கும். ஆதலால் என்னதான் ஆடுதளங்கள் பேட்டிங்
சொர்க்கபுரியாக இருந்தாலும் சுழல் வீரர்களால் முதல் 10 ஓவர்களுக்குள் விக்கெட் எடுக்கவும்
கட்டுப்பாடாய் வீசவும் முடியும். இதுவரையிலான ஆட்டங்களில் பூனேவின் இம்ரான் தாஹிர்,
ஸாம்பா, கொல்கொத்தாவின் குல்தீப் யாதவ் ஆகிய கால்சுழலர்கள் முக்கியமான சமயங்களில் கொத்தாய்
விக்கெட் வீழ்த்தி சோபித்திருக்கிறார்கள். ஆடுதளங்கள் ஒரு பக்கம் பேட்ஸ்மேனுக்கு சாதகமாய்
இருந்தாலும் சற்றே மெத்தனமாய் இரண்டுவித வேகம் கொண்டதாய் (double paced) இருக்கப் போகின்றன.
ஆதலால் புத்திசாலித்தனமான சுழலர்களும், அடிக்கடி வேகத்தை மாற்றும் மீடியம் பேஸ் பவுலர்களும்
ஜொலிக்கப் போகிறார்கள்.
இன்னொரு ஆச்சரியமான விசயம் வலுவான
அணிகளின் சறுக்கல். மும்பை மற்றும் பங்களூர் அணிகள் தோல்வியுடன் இந்த ஐ.பி.எல்லை ஆரம்பித்திருக்கின்றன.
முக்கியமான வீரர்கள் காயம் காரணமாய் விலகியுள்ளது பெரும்பாலான ஐ.பி.எல் அணிகளை பாதித்துள்ளது.
பங்களூர் அணி கேப்டன் கோலியை இழந்தது ஒரு மிகப்பெரிய அடியாக இருக்கும். தோள் காயத்தினால்
அவதிப்படும் கோலி ஐ.பி.எல்லின் பிற்பகுதி ஆட்டங்களில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிக்கு அடுத்தபடியாக ராகுலும் விலகியிருக்கிறார். கோலியின் இடத்தில் பங்களூர் அணியை
தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸும் இறுதி
கட்டத்தில் முதுகு வலி காரணமாய் விலகியிருக்கிறார். எதிர்பாராமல் கேப்டனாக்கப்பட்ட
வாட்ஸனால் முதல் ஆட்டத்தில் சமாளிக்க முடியவில்லை. ஆக இவ்வருட ஐ.பி.எல்லில் பங்களூர்
அரை இறுதிக்கு முன்னேறுவது ஏதாவது அதிசயம் நிகழ்ந்து அணிக்குள் புத்துணர்வு ஏற்பட்டு
போராட்ட குணம் தூண்டப்பட்டாலே சாத்தியம்.
இவர்களைப் போன்று அஷ்வின், முரளி
விஜய், பிராவோ, ஸ்டார்க், டுமினி, டி கோக் ஆகிய நட்சத்திரங்களும் காயம் காரணமாய் இவ்வருட
ஐ.பி.எல்லில் ஆடப் போவதில்லை. பங்களூரைப் போன்றே தில்லி, குஜராத் ஆகிய அணிகளும் இந்த
காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பை, பங்களூர் அணிகளை பூனே,
ஹைதராபாத் ஆகிய எளிய அணிகள் வீழ்த்தி ஒரு எதிராபாராத துவக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
ஆனால் ஐ.பி.எல் ஒரு நீண்ட தொடர் என்பதால் இதே நிலை தொடரும் என கூற முடியாது. இரண்டாவது
மூன்றாவது வாரங்களில் அணிகளின் ஜாதக நிலை முழுக்க மாறவும் கூடும்.
இரண்டாவது ஆட்டத்தில் மும்பைக்கு
எதிராக 184 ரன்கள் இலக்கை விரட்டி ஆடிய பூனேவுக்காக கேப்டன் ஸ்மித் அடித்த 84 ஐ.பி.எல்
வரலாற்றில் ஆடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ் எனலாம். ஸ்மித் முழு ஆட்டத்தையும் கட்டுப்படுத்திய
விதம், தேவையான நேரத்தில் அடித்தாடவும் மிச்ச நேரத்தில் தடுத்தாடவும் காட்டிய புத்திசாலித்தனம்
அபாரம். அதே போல் மும்பைக்கு எதிராக இம்ரான் தாஹிர் 28 ரன்களுக்கு வீழ்த்திய மூன்று
விக்கெட்டுகளையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தாஹிர் வேகமாய் வீசும் கால் சுழலர்.
நேராக வரும் பந்து, உள்ளே வரும் பந்து ஆகிய அவரது வெரைட்டியை இன்னும் பேட்ஸ்மேன்களால்
ஊகித்து ஆட முடியவில்லை என்பதால் இத்தொடரில் அவர் மேலும் சோபிப்பார் என எதிர்பார்க்கலாம்.
மூன்றாவது ஆட்டத்தில் குஜராத்தின்
183 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல் 15 ஓவர்களுக்குள் எட்டியது கொல்கொத்தா அணி.
இந்த உளவியல் தாக்குதலில் இருந்து குஜராத் மீண்டு வருமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.
வரும் வாரங்களில் பார்ப்போம்!