ஐ.பி.எல் 2017இன் ஆட்டங்கள் மூன்றாவது
வாரத்தை கடக்கையில் எதிர்பார்த்தது போல் மும்பை மற்றும் கொல்கொத்தா அணிகள் தலா பத்து
மற்றும் எட்டு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த அணிகளுடன் play offs எனப்படும்
இறுதிப் போட்டிக்கான தேர்வுப் போட்டிகளில் பங்கு பெறப் போகும் அணிகள் எவை என்பது தான்
இப்போதுள்ள ஒரே கேள்வி. தொடரின் துவக்கத்தில் கச்சிதமான கட்டுப்பாட்டான அணியாக தென்பட்ட
பூனே எதிர்பாராத விதமாய் படுபாதாளத்துக்கு சென்று விட்டது. எப்போதுமே திறமையை விட திட்டமிடலையும்
உழைப்பையும் அணி ஒற்றுமையையும் முதன்மையாய் கருதும் ஹைதராபாத் அணி இந்த இயல்புகள் காரணமாய்
மூன்றாவது இடத்தில் உள்ளது.
தாஸ்மாக்கில் இருந்த வெளிப்பட்ட குடிமகன் போல தட்டுத்தடுமாறி
தொடரை ஆரம்பித்த தில்லி அணி இப்போது நிதானமாய் (சின்ன தலைவலியுடன்) நடை போட ஆரம்பித்துள்ளது.
தில்லி இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மூன்றாவது நான்காவது இடங்களை வரும்
வாரங்களில் பஞ்சாப், பங்களூர், பூனே, குஜராத் ஆகிய அணிகளில் இரண்டு அணிகளில் பிடிக்கலாம்.
சரி இவ்வாரத்து ஆட்டங்களில் ஹைலைட் என்னென்ன? பார்ப்போம்.
ஆட்டம் 18:
தில்லி முதலில் ஆடி 168 அடித்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கொத்தா 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து திருமணத்தன்று
மாப்பிள்ளை ஓடிப் போன மணப்பெண் போல் தவித்தது. அப்போது ஆட வந்த மனீஷ் பாண்டே தன் கூட்டாளியான
யூசுப் பதானுடன் புத்திசாலித்தனமாய் நிதானமாய் ஆடி49 பந்துகளில் 69 அடித்தார். பதான்
39 பந்துகளில் 59 அடித்தார். பதான் மத யானை போல் பிளிறிய ஓவர்களில் பாண்டே நிதானம்
காத்தார். ஆனால் பதான் வெளியேறிய பின் பாண்டே இறுதி வரை நின்றாடி ஆட்டத்தை வென்று கொடுத்தார்.
கடைசி ஓவரில் கொல்கொத்தா வெல்ல 9 ரன்கள் தேவை. தில்லி அணிக்காக அமித் மிஷ்ரா கால்சுழல்
பந்து வீச வருகிறார். வோக்ஸ் பேட்டிங் செய்கிறார். (பண்டே மறுமுனையில்) ஒரு காற்றில்
மிதக்கும் கால்சுழல் மூலம் வோக்ஸை முறியடித்து ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றுகிறார்
மிஷ்ரா. அடுத்து ஆட வரும் நரைன் ஒரு சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு செல்ல பாண்டே ஆட
வருகிறார். மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் வேண்டும். மிஷ்ரா தன் பந்துகளை off ஸ்டம்பில்
முழுநீளத்தில் வைடாக வீசுகிறார் என்பதை கவனித்த பாண்டே தயாராகிறார். அதே போல் பந்து
வருகிறது. அதை பாண்டே சற்றும் துவளாமல் கிட்டத்தட்ட நேராக ஒரு சிக்ஸர் அடிக்கிறார்.
அடுத்த பந்தில் கூலாக இரட்டை ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை வெல்கிறார். இப்படி நிதானமாய்
ஆடுவதில் பாண்டே ஓரளவு தோனிக்கு நிகரானவர். ஒரு சிறந்த பேட்ஸ்மேனை ஒரு நல்ல பேட்ஸ்மேனில்
இருந்து வித்தியாசப்படுத்துவது முதிர்ச்சியும் நிதானமும். பாண்டேவிடம் இந்த இரண்டும்
ஏராளமாய் உள்ளன.
பாண்டேவின் பேட்டிங் ஸ்டான்ஸ்
(பேட்டிங்கின் போது நிற்கும் பாணி) வித்தியாசமானது. அவருக்கு கிட்டத்தட்ட காலாட்டமே
இல்லை. ஆனால் அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கிரீஸில் இடம் வலமாய் நகர்ந்தபடி இருப்பார்.
கால் பக்கம் நிற்பவர் பந்து வரும் போது off ஸ்டம்பில் நிற்பார். இதனால் அவருக்கு திட்டமிட்டு
பந்து வீசுவது சிரமம். பவுன்சரைக் கூட அவர் நேராக பவுண்டரை அடிப்பதுண்டு; இது பார்க்க
டென்னிஸ் ஷாட் போல இருக்கும்.
ஆட்டம் 19
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங்
செய்து 159 அடித்த ஹைதராபாத் அணி வென்றது. ஆனாலும் இலக்கை விரட்டி ஆடிய பஞ்சாப் அணிக்காக
அதன் துவக்க வீரர் மனன் வோரா அபாரமாய் ஆடி 95 அடித்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள்
சரிய இன்னொரு பக்கம் அவர் எதிர்த்தடித்தபடியே இருந்தார். எட்டு விக்கெட்டுகள் விழுந்த
பின்னர் கூட பஞ்சாப் வெல்லும் சாத்தியம் இருந்தது. ஆனால் ஒன்பதாவதாக வந்த கரியப்பா
சமயோஜிதமின்றி ஆடியதால் ஆட்டம் பஞ்சாபின் கைநழுவிப் போனது.
ஆட்டம் 20
குஜராத்துக்கு எதிராக பெங்களூர்
வென்ற இந்த ஆட்டத்தின் சிறப்பு கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் அடித்த 77. கடந்த ஐ.பி.எல்லில்
இருந்து தொடர்ந்து சொதப்பலாகவே ஆடி வந்த கெயில் இந்த ஆட்டத்தில் ராமாயண கும்பகர்ணன்
போல் விழித்துக் கொண்டார். அவர் இடது கை சுழலர் ஜடேஜாவை தோலுரித்து தொங்க போட்டது காண
உண்மையிலேயே பரிதாபமாய் இருந்தது.
அதே ஆட்டத்தில் குஜராத்துக்காக
இஷான் கிஷன் 16 பந்துகளில் அடித்த 39 ஒரு முக்கியமான இன்னிங்ஸ். கிஷான் ஒரு அற்புதமான
இளம் திறமையாளர். பார்க்க பானிபூரி விற்கும் ஒல்லிப் பையன் போல் தெரிந்தாலும் உள்ளூர்
ஆட்டங்களில் அபாரமான சிக்ஸர்களை ஒற்றைக் கையில் அடிக்கக் கூடியவர். வருங்கால இந்திய
அணியில் இடம்பெற்று நிச்சயம் கலக்கப் போகிறவர் இவர்.
ஆட்டம் 21
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய
ஹைதராபாத அணி வென்றது. அதற்கு அடித்தளம் இட்டது வில்லியம்சன் 51 பந்துகளில் அடித்த
89. வில்லியம்சம் புஜபராக்கிரம பேட்ஸ்மேன் அல்ல. குழந்தை முகமும் மெல்லிய உடலும் கொண்டவர்.
தனது டைமிங் மற்றும் அபாரமான காலாட்டம் மூலம் துல்லியமாய் களத்தடுப்பை பிளந்து பவுண்டரிகள்
வீசுபவர். பூங்கொத்தால் அடித்தே கொல்வது போல் மென்மையான நளினமாய் சிக்ஸர்களால் நாசம்
செய்யக் கூடியவர். அவரது 89 ஒரு அழகிய சூறாவளி.
இதே ஆட்டத்தில் இரண்டாவதாய் ஆடிய
தில்லி அணி வெல்லும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஒரு முக்கியமான கட்டத்தில் கருண் நாயர்
ரன் அவுட் ஆக ஆட்டம் தலைகீழானது. இதை அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்துகளில் 50 அடித்து
இறுதி வரை போராடினார். ஆனாலும் ஹைதராபாத் 15 ரன்களில் வென்றது.
ஷ்ரேயாஸ் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் ஆடும்
இளம் நட்சத்திரம். மும்பையில் வளர்ந்த தமிழர். உள்ளூர் போட்டிகளில் ரன்களை மலை மலையாய்
குவிப்பவர். சமீபமாய் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வானவர். இவரது தனித்தன்மை புத்திசாலித்தனமான
ஆட்டம் மற்றும் போராட்ட குணம்.
இந்த ஆட்டத்தில் ஹைதராபாதுக்காக
வீசும் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் முகமத் சிராஜின் பந்து வீச்சை
தனியாக பாராட்ட வேண்டும். இந்த ஐ.பி.எல்லில் புவனேஷ்வர் அபாரமான ஆட்டநிலையில் இருக்கிறார்.
யார்க்கர், மெதுவான பந்து, முழுநீளப்பந்து என மிகுந்த கட்டுப்பாட்டுடன் வீசுகிறார்.
ஹைதராபாதுக்காக ஒவ்வொரு ஆட்டத்திலும் இவர் பந்து வீசிய ஓவர்கள் திருப்பு முனையாய் அமைந்தன.
இதே போல் சித்தார்த் கவுலின் யார்க்கர்களும் சிராஜின் வேகமும் ஆக்ரோஷமும் மிகவும் கவர்ந்தன.
சிராஜ் ஹைதராபாதை பூர்வீகமாய் கொண்டவர். ஏழை. கடுமையாய் போராடி மேலே வந்தவர்.இவர் மேலும்
உழைத்து ஒரு நாள் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
ஆட்டம் 22
இந்த ஆட்டத்தின் சிறப்பு பஞ்சாபின்
198 ரன்களை வெறும் 15. 3 ஓவர்களில் மும்பை அணி தவிடு பொடியாக்கி எட்டியது தான். பஞ்சாப்
அணிக்காக ஹஷிம் ஆம்லா 60 பந்துகளில் அடித்த சதமும் ஒரு அபாரமான இன்னிங்ஸ்.
ஆட்டம் 23
இந்த ஆட்டத்திலும் கொல்கொத்தாவின்
187 ரன்களை குஜராத் 18.2 ஓவர்களில் சுலபத்தில் எட்டியது. தொடர்ந்து சறுக்கி வரும் குஜராத்தின்
முக்கியமான வெற்றி இது. குஜராத்துக்காக ரெய்னா 46 பந்துகளில் 84 அடித்தார்.
இப்போட்டியில் பஸில் தம்பி எனும்
இளம் வேக வீச்சாளர் மிகவும் கவர்ந்தார். சிராஜைப் போல் இவரும் ஒரு நம்பிக்கையூட்டும்
திறமையாளர்.
நன்றி: கல்கி