மேற்சொன்ன விசயம் பற்றி ஒரு சுவாரஸ்யமான
தெளிவான கட்டுரை இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளியாகி உள்ளது (Triple Talaq and the Constitution).
தில்லியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம் பாட்டியா எழுதியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இவ்வழக்கு
விசாரணையை இன்று ஆரம்பிக்க இருக்கிறது. மோடி இவ்வழக்கு பற்றி கருத்து சொன்னது (இஸ்லாமிய
சகோதரிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்) இஸ்லாமிய தனிப்பட்ட சட்டங்களுக்கு எதிரான
பா.ஜ.க நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினருக்கு என்று தனிப்பட்ட உரிமைகள்
இருக்கக் கூடாது, அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இந்நாட்டில் இருக்க வேண்டும் எனும்
பா.ஜ.க வாதத்தின் பின்னால் உள்ள துர்நோக்கம் இஸ்லாமியருக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரத்தையும்
வாய்ப்புகளையும் காங்கிரஸின் முற்போக்கு ஆட்சி அளித்து விட்டது; அவர்களை நாங்கள் வழிக்கு
கொண்டு வருவோம் எனும் சேதியை பெரும்பான்மை இந்துக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
அதற்கு அவர்கள் இந்த மும்முறை தலாக் விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் பா.ஜ.க
ஆட்சி நடந்த மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களில் இஸ்லாமியர் கொல்லப்பட்டு ஒடுக்கப்பட்ட
நிகழ்ச்சிகளை மூடி மறைத்து இஸ்லாமியர் ஒடுக்கப்பட்டோர் அல்ல அத்துமீறி வசதிகளை, சுதந்திரத்தை
அனுபவிக்கும் தரப்பினர் எனும் பிம்பத்தையும் ஏற்படுத்த இவ்வழக்கு பா.ஜ.கவுக்கு உதவும்.
இஸ்லாமியர் பிற்போக்கானவர்கள் எனும் தோற்றத்தை ஏற்படுத்தவும் பயன்படும். எப்படி நோக்கினும்
இந்துத்துவர்களுக்கு லாபம் அதிகம். இந்த அரசியல் சூழலில் சட்டம் இவ்வழக்கை எப்படி நோக்க
முடியும் என கௌதம் விவாதிக்கிறார்.
அவர் இரண்டு கோணங்களை முன்வைக்கிறார்:
1)
நீதிமன்றம் இஸ்லாமிய தனிச்சட்டங்களை தன்னளவில் அங்கீகரித்து,
அவற்றுக்குள் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி நவீனப்படுத்துவது. ஆனால் விவாகரத்து வழங்கும்
ஏற்பாடுகளை நிர்வகிக்கும் உரிமையை சமூகத் தலைவர்கள், மூத்தோர் மற்றும் மத அறிஞர்களிடம்
விட்டு விடுவது. இக்கோணத்தில் அணுகினால், இஸ்லாமிய சட்டமே மும்முறை தலாக்கை ஏற்கவில்லை
என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும்.
2)
1951இல் பம்பாய் உயர்நீதிமன்றம் இது குறித்து ஒரு
தீர்ப்பு வழங்கிய போது எழுதப்படாத இஸ்லாமிய தனிச்சட்டங்களை சட்டமாய் அங்கீகரிக்க முடியாது.
ஆகையால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என பட்டும்படாமல் ஒரு தீர்ப்பளித்தது.
இப்படியான தனிச்சட்டங்கள் அல்லது வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் பின்பற்றப் படுவது
ஒரு தனிமனிதனின் உரிமைகளை பறிப்பதாக மாறினால் என்ன செய்வது எனும் சிக்கலான கேள்வியை
இத்தீர்ப்பு எழுப்புகிறது. உதாரணமாய், ஒரு சமுதாயத்தில் பதினைந்து வயதானவுடன் பெண்களை
திருமணம் முடித்து விடும் வழக்கம் இருக்கலாம். இது எழுதப்படாத எங்கள் தனிச்சட்டம் என
அச்சமுதாய அறிஞர்கள் வாதிடலாம். அப்போது சட்டம் என்ன செய்யும்? இது பற்றி பேசும் கௌதம்
இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பான பிரிட்டிஷ் அரசு பல மதச்சட்டங்களை தன் கோணத்தில்
அர்த்தப்படுத்தி எழுதப்பட்ட சட்டமாக மாற்றி உள்ளதை குறிப்பிடுகிறார். அதாவது நம் நீதிமன்றங்கள்
(சுதந்திரத்துக்கு முன்பு) எழுதப்படாத தனிச்சட்டங்களளில் தலையிட்டுள்ளன. இதை ஒரு முன்மாதிரியாய்
கொண்டு உச்சநீதிமன்றம் தலாக் விவகாரத்தில் தீர்ப்பளிக்கலாம் எனவும், 1951 தீர்ப்பை
முன்மாதிரியாய் கொண்டு தலையிட மறுக்கலாம் என்றும் இரு சாத்தியங்களை சுட்டுகிறார். இவ்விரண்டில்
எது சரி?
மும்முறை தலாக் அபத்தமானது என
அனைவரும் அறிவோம். விவாகரத்து பெறுவதற்கு குரான் பரிந்துரைக்கும் முறை நடைமுறை சார்ந்தது;
நவீனமானது. அது பல முறை இரு தரப்பினருக்கும் இடையில் சமரசங்கள் செய்வதற்கான வாய்ப்பை,
கால அவகாசத்தை அளிக்கிறது. கர்ப்பமாய் இருக்கும் பெண்ணை விவாகரத்து செய்வதை தடை செய்கிறது.
மும்முறை தலாக் இஸ்லாமிய தனிச்சட்டத்தில் வந்துள்ள ஒரு மாற்றம்; ஒரு புதுமை. இதை தடை
செய்ய இஸ்லாமிய அறிஞர்களும் சமூகத்தலைவர்களும் முன்வராத பட்சத்தில் நீதிமன்றம் தலையிடுவது
தவிர்க்க முடியாது.
ஆனால் நீதிமன்றம் இத்தலையீட்டை
செய்யும் அதே வேளையில் திருமணம் மற்றும் விவாகரத்தை அந்த சமூகத்தின் தனிசட்டங்கள் வழிநடத்த
தொடர்ந்து அனுமதிப்பதே நல்லது. அதாவது, பொதுச்சட்டங்களுக்குள் இஸ்லாமியரையும் திணிக்கும்
நிலை ஏற்படக் கூடாது. ஏனென்று சொல்கிறேன்.
திருமணம் என்பது ஒரு செயற்கையான
உறவு. பல பத்தண்டுகள் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது இயற்கையானது அல்ல. மனித இயல்பே
சில மாதங்களில் துணை மீது அலுப்பு கொண்டு வேறு துணையை நாடுவது. ஒரு அப்பாவுக்கு தன்
குழந்தை மீது நீடித்த அன்பு இயல்பாகவே இருக்கும். ஆனால் மனைவி மீது இயல்பான நீடித்த
ஈர்ப்பு இருக்காது. வேறு பெண்கள் மீது ஆர்வம் ஏற்பட்டபடியே இருக்கும். இதையே ஒரு பெண்ணுக்கும்
சொல்லலாம். நமது மரபணுக் குட்டையை விரிவாக்குவதற்கான இயற்கை நமக்கு அளிக்கும் தூண்டுதலே
இதற்கு காரணம். அதாவது தலாக் சொல்லத் தூண்டுவது ஒரு ஆணின் (அல்லது பெண்ணின்) இச்சை
(அல்லது வெறுப்பு) அல்ல; இயற்கையின் ஆதிமனம் தான்.
இந்த தூண்டுதலை மீறி பல்லாண்டுகளாய்
கோடிக்கணக்கான ஜோடிகள் இங்கே இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். சட்டத்தின் தூண்டுதலாலா?
இல்லை. முழுக்க முழுக்க சமுதாய கட்டாயம், ஆதரவு, மதிப்பு தாம் காரணம். அதே போல சொத்தை
பாதுகாக்கும் விழைவு, பிள்ளைகளை வளர்த்து நிலைப்படுத்தும் நோக்கம் ஆகியவையும் திருமண
உறவை பாதுகாக்கின்றன. ஆனால் இன்று நாம் நவீனப்பட்ட பின், ஆணும் பெண்ணும் வேலை செய்து
சுதந்திரமாய் வாழும் சூழலில் சமூக மதிப்பு, அழுத்தம், சொத்து ஆகிய கட்டாயங்கள் பின்னடைவு
கொள்கிகின்றன. தனிமனிதனின் மகிழ்ச்சி, நிம்மதி, உரிமை ஆகியவையே அதிக முக்கியம் என மக்கள்
நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். விளைவாக இன்று விவாகரத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு
ஆகியிருக்கிறது. முப்பதுகளில் விவாகரத்தாகி தனியாக வாழ்கிறவர்களை நான் இன்று அதிகமாய்
பார்க்கிறேன். இது திருமணத்தை வெறுமனே ஒரு சட்டரீதியான ஒப்பந்தமாய் மட்டுமே பார்ப்பதன்
விளைவே. (இன்னொரு காரணம் நகரமயமாதலும், திருமண ஜோடி உறவினர், சமூகத்தினரிடம் இருந்து
விலகி தனிக்குடும்பமாய் வெளிமண்ணில் வாழ்வது.) இந்த விவாகரத்துகள். வரும் ஆண்டுகளில்
இந்து சமூகத்தில் திருமண அமைப்பே கடும் உருக்குலைவை சந்திக்க போகிறது. இதைத் தடுக்க
முதல் தேவை திருமணம் ஒரு சமூக நிகழ்வாய் நீடிப்பதே.
அதாவது திருமணம் செய்வதில் இருந்து
மணமுறிவு வரை சமூகத்தில் மூத்தோர், உறவினர், நண்பர்களின் ஆகியோரின் தலையீடு இருக்க
வேண்டும். வெறுமனே நீதிமன்றத்தில் சென்று கோரிக்கை விடுத்து ரத்து செய்கிற விவகாரமாய்
இருக்க கூடாது.
இஸ்லாமிய சமூகங்களில் தனிமனித
விவகாரங்களில் பொது சமூக பங்களிப்பு அதிகமாய் உள்ளது ஒரு நேர்மறையான விசயம். என் அடுக்ககத்தில்
ஒருமுறை ஒரு இஸ்லாமியரின் மரணம் நடந்த போது துக்கம் அனுசரிக்க வந்த பல நூறு மக்கள்
எங்கள் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதே ஒற்றுமையை நீங்கள் ஒரு இந்து மரிக்கும்
போது காண முடியாது. பக்கத்தில் வீட்டில் உள்ளோர் கூட பல சமயங்களில் மரணத்துக்கு துக்கம்
விசாரிக்க வருவதில்லை. இஸ்லாமியர் இந்த ஒற்றுமையை தக்க வைக்க வேண்டும். நவீனப்படும்
சாக்கில் அவர்கள் பொதுச்சட்டங்களுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது. தனிமனிதனுக்கும்
சமூகத்துக்கும் இடையில் ஒரு உடைக்க முடியாத பந்தம் இருக்க வேண்டும். அதற்கு மத தனிச்சட்டங்கள்
உதவும். தனிமனித வாழ்வில் மதத்தின் குறுக்கீடும் உதவும். இதை இஸ்லாமியர் பாதுகாக்க
வேண்டும்! இந்துக்கள் செய்த தவறை அவர்கள் செய்யக் கூடாது!