சமீபத்தில் சசிகலாவை சிறைவைக்கப்பட்டுள்ள
பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் ஊழல்களை டி.ஐ.ஜி ரூபா மீடியா முன்பு அம்பலப்படுத்த
பெரும் சர்ச்சையானது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும்,
சசிகலாவுக்கு நட்சத்திர சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். சசிகலாவுக்கு என்று
தனியாக வரவேற்பாளர் அறை, சமையலறை, ஏஸி வசதி கொண்ட இடம், அங்கு அவருக்கு சமைக்கவும்
பணி செய்யும் வேலையாட்களாக சிறைக்கைதிகள், டிவி, மொபைல் போன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதாகவும்,
தினமும் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் ரூபா
குற்றம் சாட்டினார். ரூபா இது குறித்து விசாரணை நடத்தும் போது பதிவு செய்த காணொளிகளை
சிறை அதிகாரிகளே அழித்து விட்டதாகவும், சி.சி டிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களையும் அழித்து
விட்டதாகவும் சாடினார்.
ரூபாவின் மீடியா பேட்டிகள் அவர் சிறைக்குள் சசிகலாவை
விட அதிகாரமற்றவராக தனிமைப்படுத்தப்பட்டவராக உள்ளதை காட்டின. ரூபா தன் உயரதிகாரி ராவே
ஊழலில் பங்குபெற்றதாய் கூறிய நிலையில் அவருக்கு பெரும் சிக்கல்கள் வரப் போகின்றன என
நான் ஊகித்தேன். எதிர்பார்த்தது போல இன்று அவர் போக்குவரத்துத் துறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக
செய்தி வந்துள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் சீதராமையாவே ரூபாவை கண்டித்துள்ளார். ஏனாம்?
அதிகாரபூர்வ சேதிகளை மீடியாவிடம் கொண்டு சென்றதற்கு. அவர் இத்தகைய விபரங்களை தன் உயரதிகாரிகளிடம்
எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். ஆனால் உயரதிகாரியே லஞ்சம்
பெறும் போது யாரிடம் செல்வதாம்?
மும்பை குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட
குற்றவாளிகளே தனி மரியாதையுடன் செல்வாக்குடன் சிறைக்குள்ளும் வெளியிலும் செயல்படும்
காலம் இது. அப்படி இருக்க சசிகலாவின் படோப நிலையில் எந்த வியப்பும் இல்லை. இது ஆதாரமான
இன்னொரு சிக்கலை காட்டுகிறது.
பெரும்பணக்காரர்களுக்கு அபரிதமான அந்தஸ்தும் செல்வாக்கும்
அந்தஸ்தும் அளிக்கும் சமூகம் நமது. அப்பணக்காரர் சிறை சென்றால் மட்டும் அவரை எப்படி
வேறுவிதமாய் நடத்த முடியும்? அப்போதும் அவர் பணக்காரர் தானே? சிறையில் மட்டும் அவரை
எப்படி ஏழைக் கைதிகளுக்கு இணையாக நடத்த இயலும்? இது முரண் இல்லையா? குற்றம் எப்படி
அனைத்துக் கைதிகளையும் சமமாக்கும்? அது சாத்தியம் எனில் ஒழுக்க அடிப்படையில் தானே இங்கு
சமூகத்தில் அனைவரும் நடத்தப்பட வேண்டும்? மதுவே அருந்தாத, உபத்திரம் செய்யாத ஏழை இருக்கிறார்,
இன்னொரு பக்கம் மது அருந்தும், அடுத்தவர்களை வம்புக்கிழுக்கும் பணக்காரர் இருக்கிறார்
(ஒரு பேச்சுக்கு). எங்காவது ஏழையை கும்பிட்டு போற்றி விட்டு பணக்காரரை கண்டித்து ஒதுக்குவோமா?
நிச்சயமாய் மாட்டோம். அம்பானிக்கும் விஜய் மால்யாவுக்கும் இவ்வளவு மதிப்பையும் கவனத்தையும்
சமூக அதிகாரத்தையும் நாம் அளிக்க காரணம் என்ன? அவர்கள் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்கள்
என்பது. இதே மதிப்பு ஒரு சமூகப் போராளிக்கோ தொண்டாளனுக்கோ நம் சமூகம் அளிக்காது. செல்வத்தை
உற்பத்தி செய்கிறவன் சமூகத்தின் மையத்திலும் சமூகத்தின் மேம்பாட்டுக்காக பாடுபடுகிறவன்
விளிம்பிலும் இருக்கிறான்.
நாற்பது, ஐம்பதுகளில் நிலைமை நேர்மாறாக இருந்தது. இன்று இந்த போக்குக்கு
ஒரு நல்ல உதாரணம் தமிழில் கடந்த 20 வருடங்களில் வெளிவரும் வாழ்க்கைக்கதை நூல்கள். கார்ப்பரேட்
முதலாளிகள், வியாபார காந்தங்கள், செல்வத்தை பெருக்கும் வித்தை கற்றவர்களின் வாழ்க்கையை விளக்கும்
நூல்கள் இவ்விரு பத்தாண்டுகளில் மிக அதிகமாய் வெளிவந்துள்ளன. விற்றுள்ளன. கிழக்குப் பதிப்பக நூல்கள்
ஒரு சிறந்த உதாரணம். மாறாக, எண்பதுகளுக்கு முன்பு நாம் சிந்தனையாளர்கள், ஞானிகள், அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கையைப் பற்றி படிக்க விரும்பினோம்.
இப்படியான ஒரு சமூகத்தில் ஒரு
செல்வந்தர் சிறைக்கு செல்லும் போது அவர் திடுமென ஏழையாவதில்லை (ஒரு மத்திய வர்க்க ஆள்
சிறை சென்றால் வேலையை இழந்து ஆண்டியாகி விடுவார்.) செல்வந்தர் சிறையிலும் செல்வந்தர்
தான். சிறை அதிகாரிகள் அவருக்கு வெளியில் உள்ள மதிப்பை தானே உள்ளேயும் அளிப்பார்கள்.
மேலும் அவரை அண்டி, கையூட்டு பெற்று தாமும் “வளர” விரும்புவார்கள். சிறை என்பது சமூகத்தின்
ஒரு பிரதிபலிப்பு தானே. பொதுப்போக்குகளில் இருந்து அது மட்டும் எப்படி விடுபட்டிருக்க
வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியும்? இது ஊழல் சம்மந்தமான ஒரு பிரச்சனை அல்ல. விழுமியங்களை
முழுக்க துறந்து, செல்வத்தை மட்டுமே வழிபடும் ஒரு சமூகத்தின் கண்மூடித்தனத்தின் பிரச்சனை
இது.
பெரும் நிறுவனங்களை கட்டியமைத்து
நிதியை பெருக்கி லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கிற முதலாளிகளை நான் குறைத்து
மதிப்பிடவோ சிறுமைப்படுத்தவோ முயலவில்லை. பணம் சம்பாதிப்பதோ தொழில்வளத்தை பெருக்குவதோ
குற்றம் என நான் கருதவில்லை. ஆனால் ஒரு சமூகத்தின் பிரதானப் போக்கே பணத்தை வழிபடுவதாய்
மாறக் கூடாது என்கிறேன். அப்படி மாறும் போது சசிகலாக்களையும் மால்யாக்களையும் குற்றவாளிகள் என பழிப்பது
சிக்கலாகும். பண்புகளை புறமொதுக்கும் சமூகம் சசிகலா என வரும் போது மட்டும் நல்லத்தனமாய்
நடந்து கொள்ள முடியாது. இத்தனை நாட்கள் மால்யாவை கொண்டாடி விட்டு இன்று அவரை சிறையில்
தள்ளு என கோர முடியாது.
சீதராமையாவே தலையிட்டு ஊழல்வாதிகளை
காப்பாற்றியிருப்பது இன்னொரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது. அதிகார படிநிலையை பேணுவது முதல்வருக்கு
அவசியம். சிறை எனும் பிரம்மாண்ட அமைப்பு ஒரு அரசின் இடது கை எனலாம் (காவல் துறை வலது
கை). ஆக சிறைத்துறையை கேவலப்படுத்துவது முதல்வரையே காறித்துப்புவதற்கு சமம். சிறைத்துறையின்
செங்கற்களை அசைத்தால் அது முதல்வரின் நாற்காலியின் கால்களை ஆட வைக்கும். அல்தூசர் இந்த
அமைப்பை Repressive State Apparatus என்றார். அரசின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையும்
அச்சமும் சிறைத்துறையின் செயல்பாடு சம்மந்தமான கருத்தமைவுகளில் தான் உறைகின்றன. மக்கள்
சிறையை மதிக்கவில்லை, அஞ்சவில்லை என்றால் முதல்வரையும் மதிக்கவோ அஞ்சவோ மாட்டார்கள்.