இப்போதெல்லாம் மாலை நான்கு மணிக்கு
வேலை முடிந்த பின் நூலகம் சென்று விடுகிறேன். இந்த வாரம் முழுக்க நூலகத்திலே கூடுகட்டினேன்.
ஆங்கிலத்தில் ஒரு ஆய்வு நூலுக்கான ஆரம்ப கட்ட பணியில் இருக்கிறேன். வீடு, அறை ஆகிய
உருவகங்கள் தமிழ் கவிதை மற்றும் கதைகளில் கடந்த முப்பதாண்டுகளில் எப்படி மாறி வந்துள்ளன,
இம்மாற்றங்களின் சமூக, அரசியல் பின்னணி என்ன, உளவியல் என்ன என்பது ஆய்வுத் தலைப்பு.
எந்த ஆய்வின் துவக்கத்திலும் அத்தலைப்பில் அதுவரையில் வெளிவந்த விமர்சன / ஆய்வு நூல்களைப்
படித்து சாராம்சப்படுத்தி எழுத வேண்டும். இதை literature survey என்பார்கள். இங்கே
பல்கலையில் சேர்ந்த இரண்டாம் வாரத்தில் இதை துவங்கினேன். அதன் பிறகு மூன்று வாரங்கள்
தடைபட்டு மீண்டும் ஆரம்பித்தேன். குறிப்பாய் கடந்த பத்து நாட்களும் முழுமூச்சாய் இவ்வேலை
தான்.
வீடு எனும் உருவகம் பற்றி வந்துள்ள
ஆய்வுகளைப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். குறிப்பாய் கேஸ்டன் பேக்கிலர்ட் (Gaston
Bachelard) என்பவரின் Poetics of Space எனும் நூல். மனித பிரக்ஞைக்கும் வீட்டுக்குமான
உறவு என்ன என்பது தான் இந்நூலின் மையப்புள்ளி. மிக கவித்துவமான மொழியில் வீடு குறித்த
தன் மனப்பதிவுகளை, அவதானிப்புகளை, தத்துவ புரிதல்களை மாய்ந்து மாய்ந்து சொல்லிப் போகிறார்.
வேறெந்த தத்துவ, ஆய்வு நூலும் இவ்வளவு சிலாக்கியமாய்
இருந்து நான் கண்டதில்லை. சதா புன்னகையும் நெகிழ்வுமாய் இந்நூலைப் படித்தேன். (யாராவது
இந்நூலின் ஒரு பகுதியையாவது தமிழில் மொழியாக்க வேண்டும்.)
வீடு நமக்கு ஏன் அவசியம்? உறைவிடமாக
மட்டுமல்ல. நம் சுயத்தை கட்டமைக்க வீடு எனும் வடிவம் கட்டாயம் தேவை. மனிதனால் உண்மையில்
எங்கும் தங்க முடியும். நடைபாதையில் கூடாரம் அமைத்து கூட வாழலாம். ஒன்றும் குறைந்து
விடாது. ஆனால் நம்மைச் சுற்றி நான்கு சுவர்கள் அவசியம். அதுவே நம்மை வெட்டவெளியில்
இருந்து தனிமைப்படுத்தி நமது தனிப்பட்ட சுயத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
நான் முன்பு வேலைக்கு போகும் வழியில் நடைபாதையில்
கடை போட்டிருப்பவர்கள் மதிய வேளையில் சுவரை நோக்கி திரும்பி அமர்ந்து சாப்பிடுவதை பார்ப்பேன்.
ஏன் அவர்கள் அப்படி அமர்கிறார்கள்? சுவருக்கு எதிரே அமரும் போது தான் ஒரு அறையில் இருப்பதான
பிரமை ஏற்படுகிறதா? திரும்பி ரோட்டை நோக்கி இருந்து உண்டால் அந்தரங்கமான நேரமாய் உணவு
வேளை இல்லாமல், ஒரு பொதுவெளியில் செய்யும் சடங்கு போல் ஆகி விடும். ஒரு சுவர் ஒரு வீட்டை
உருவாக்க போதும் நமக்கு. அதே போல் ஆழ்வார்பேட்டை சிக்னல் தாண்டியதும் ஒரு ஓட்டல் வாசலில்
இரண்டு சிறுமிகள் பொம்மை விற்பார்கள். ஒருநாள் அதில் ஒருவள் சட்டென நடைபாதையில் திரும்பி
அமர்ந்து ஒன்றுக்கு போகத் துவங்கினாள். அவளுக்கு அப்போது வெட்டவெளியில் ஆடையை அவிழ்க்கிறோம்
எனும் உணர்வில்லை. திரும்பி அமர்ந்ததும் அவள் முன் சுவர் இருக்கிறது. தான் ஒரு மூலையில்
இருப்பதாய் கற்பித்துக் கொள்கிறாள். அது அவளுக்கு ஒரு கழிப்பறையாக மாறுகிறது. பல சமயங்களில்
நமது வீடும், அறையும், அதன் அந்தரங்கமும் நம் மனதுக்குள் தான் உள்ளது. பேக்கிலர்ட்
இதைப் பற்றி பல இலக்கிய உதாரணங்களுடன் விவரிக்கிறார்.
எத்தனையோ நாட்கள் ஜன்னல் கம்பிகளை
பற்றி நின்றபடி மழை கொட்டுவதையும் மின்னல் வெட்டுவதையும் புயலில் மரங்கள் தலைவிரிக்
கோலமாய் ஆடுவதையும் பார்த்து சிலாகித்திருக்கிறோம். ஆனால் இதே மழையை நாம் வீட்டுக்கு
வெளியே நின்று நனைந்தபடி நின்று ரசிக்க இயலாது. சொல்லப் போனால் பெருமழையின் போது தான்
வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் அவ்வளவு ரசனையாக, சிலாகிப்பாக, சுகமாக இருக்கிறது.
வீட்டை அழகாய் மாற்றுவது வீடு அல்ல; வீட்டுக்கு வெளியே உள்ள வெட்டவெளி, இயற்கை, அதன்
அகன்ற, நிலையற்ற, ஆபத்தான சூழல். இதைப் பற்றி பேசும் பேக்கிலர்ட் எப்படி பனிக்காலத்தில்
வீட்டுக்குள் இருக்கும் ஒருவன் வெளியே மழையும் புயலும் அடிக்க வேண்டும் என ஏங்குகிறான்
என விவரிக்கிறார். இந்த இடம் அபாரமாய் உள்ளது.
பொதுவாக காதலர்கள் தம் எதிர்காலம்
பற்றி பேசும் போது ”நமக்கு என ஒரு கூடு கட்ட வேண்டும்” என சொல்வார்கள் என கூறும் பேக்கிலர்ட்
இது எவ்வளவு அபத்தமானது என விளக்குகிறார். கூடு என்பது பறவைகள் ஜோடியாய் வாழ்வதற்கானது
அல்ல. ஜோடி சேர்ந்த பின் முட்டையிடுவதற்கான, குஞ்சுகள் பொரிந்து வளர்வதற்கான ஒரு தற்காலிக
அமைப்பு. மனிதர்களைப் போல் அல்லாது பறவைகள் வெட்டவெளியில் தான் புணர்கின்றன. அப்படி
இருக்க, காதல் அந்தரங்கத்துக்கான ஒரு வீடாக எப்படி கூடை நாம் புரிந்து கொள்கிறோம் என
அவர் கேட்கிறார். கூடுகள் மீது மனிதனுக்கு பல நூற்றாண்டுகளாய் தனி ஆர்வமும், வியப்பும்
உள்ளது என சொல்கிறார். கூடுகளை நம் கற்பனையில் புதுவிதமாய் கட்டியெழுப்புகிறோம். வீடு
ஒரு உருவகம் என்றால் கூடு ஒரு ஆதி பிம்பம் (primal image) என்கிறார். கூட்டை அடிப்படையாய்
வைத்து தான் வீடு குறித்த சித்திரத்தை மனதில் எழுப்புகிறோம்.
ஓடு என்பது கூட்டை போன்றே ஒரு
ஆதி பிம்பம் எனக் கூறுகிறார் பேக்கிலர்ட். ஒரு முடிவை எடுக்கும் முன், ஒரு புது அனுபவத்தை
எதிர்கொள்ளும் போதும் நமது மனம் கொள்ளும் தடுமாற்றம், தத்தளிப்பு ஆகியவற்றை ஒரு நத்தையோ
ஆமையோ தன் ஓட்டில் இருந்து எட்டிப் பார்த்து உள்ளே சட்டென இழுத்துக் கொள்ளும் காட்சியை
அடிப்படையாய் கொண்டே கற்பனை செய்கிறோம் என்கிறார். இது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அவதானிப்பு.
ஒரு அழகான பெண் உங்களுக்கு சற்று பின்னே ஒரு இருக்கையில் இருக்கிறார். அவ்வப்போது நாசுக்காய்
அவளை கவனிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் எப்படி செயல்படுகிறது எனக் கேட்டால் எப்படி
விளக்குவீர்கள்? அடிக்கடி எட்டிப் பார்த்து தலையை உள்ளே இழுத்து மீண்டும் திரும்பிப்
பார்த்து … உங்கள் மனம் ஒரு நத்தையை போன்றே இருக்கிறது. வேறெப்படியும் நம்மால் இதை
கற்பனை செய்ய இயலாது. நமது பிரக்ஞை குறித்த நம்பிக்கைகள் இது போன்ற ஆதி உருவகங்களில்
பதிந்து போயுள்ளன. பறவையை, நத்தையை, ஆமையைக் கண்டு தான் ஆதிமனிதன் தன் பிரக்ஞையை வடிவமைத்திருக்கிறான்
எனலாம்.
நான் என் வாழ்க்கையில் படித்த
மிகச்சிறந்த நூல்களில் ஒன்று Poetics of Space என்பேன்.