உங்கள் ஜன்னலுக்கு வெளியே அந்த
மரம்
இலைகளை உதிர்க்க துவங்கி விட்டது.
அதைக் காண விருப்பமில்லையா,
திரையை விலக்கி,
ஜன்னல் கதவை சற்றே திறந்து?
விளிம்புகளில் வேர்பிடித்த காட்டுச்செடிகள்
சொல்கின்றன நீங்கள் அதைத் திறந்தே
நீண்ட காலம் ஆகிறது என;
அல்லது எல்லாவற்றையும் ஒரு மறைவான
ஓட்டை வழி காண்கிறீர்களா?
உங்கள் இஷ்டப்படி ஆகட்டும்!
நான் ஒரு வழிப்போக்கன் மட்டுமே.
உங்களையும் உங்கள் உலகையும் கடந்து
போகும் ஒருவன் மட்டுமே.
ஆனால் அந்த மரம் தன் முழுபரிமளிப்பில்
எப்படி இலைகளை பொழிந்து
பூமியில் கம்பளம் விரிக்கிறது
எனப் பாருங்களேன்,
வானுக்கு அப்பாலிலிருந்து ஏதோ
புலப்படாத மரத்தின் இலைகளைப் போல!
ஆங்கிலத்தில் இருந்து தமிழில்: ஆர். அபிலாஷ்