காலம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில்
போகிறது. நான் பெங்களூர் வந்த பிறகான இரு மாதங்களில் ஊரில் எவ்வளவோ பரபரப்பான விசயங்கள்
நடந்து விட்டன. குறிப்பாக பிக் பாஸ். பிக் பாஸ் ஏற்படுத்தும் சலசலப்புகள் கூட எனக்கு
பேஸ்புக்கில் மேய்வதன் மூலம் மட்டுமே தெரிய வந்தது. அதனால் ஒரு அத்தியாயம் பார்த்தேன்.
ரொம்ப அலுப்பு. அதன் பிறகு தொடரவில்லை.
சற்று முன் என் மனைவியிடம் பேசும் போது அவள் பிக்பாஸின்
தீவிர ரசிகையாகி இருப்பதை அறிந்தேன். ஓவியாவுக்கு என்று ரசிகப் பட்டாளமே உருவாகி இருப்பதையும்,
வேறு பிக்பாஸ் சங்கதிகளையும் பகிர்ந்து கொண்டாள். எவ்வளவு சீக்கிரம் ஓவியாவும் காயத்ரியும்
மீடியா ஆகிருதிகள் ஆகி விட்டார்கள் என்பது நினைக்க வியப்பாக இருக்கிறது. தமிழ்நாடே
பித்துபிடித்தாற் போல் இவர்களை பற்றி விவாதிக்கிறது. ஆனால் துவங்கின வேகத்தில் இவர்களை
கடந்தும் மறந்தும் போய் விடுவோம். என்றாலும் கூட இந்த வேகம் ஆச்சரியம் அளிக்கிறது.
ரெண்டு நாள் டிவி பார்க்காமல், பேஸ்புக்கை சரிவர
கவனிக்காமல் இருந்தால் நாம் “பின்தங்கி” போய் விடுகிறோம். என் மனைவி என்னை அதற்காக
கடிந்து கொண்டாள். ரொம்ப காலாவதியாகி விட்டாயே, சாரு “ஓவியா ஒரு ஞானி” என எழுதியதை
படிக்கவில்லையா என கேட்டாள். நான் ஒத்துக் கொண்டேன். காலத்தின் வேகத்தோடு பிளாட்பார்மில்
ஓடி தாவி குதித்து ஏற என்னால் முடியாது. ரயில் நின்ற பின் பொறுமையாய் ஏறிக் கொள்கிறேன்.
எனக்கென்று ஒரு வேகம், போக்கு,
ரிதம் உள்ளது. அதற்கு ஏற்ப தான் செயல்படுவேன். இப்போதைக்கு என் ஆர்வம் கவிதை வாசிப்பிலும்,
ஒரு ஆய்வு நூல் எழுதுவதிலும் உள்ளது. ஆகா ஷாஹித் அலி எனும் காஷ்மீரக் கவிஞரின் முழுத்தொகை
நூலை படிக்க நேர்ந்தது. அட்டாகாசமான கவிஞன். அரசியலையும் வரலாறையும் மண்ணை இழந்த துயரத்தையும்
கைவிடப்பட்ட நிலையையும் இவ்வளவு உருக்கமாய் நுணுக்கமாய் யாரும் எழுதிப் படித்ததில்லை.
அவரது சில கவிதைகளை மொழியாக்கினேன். சில நாட்கள் கழித்து திருத்தியபின் வெளியிடலாம்
என இருக்கிறேன்.
சமகால ஐரோப்பிய சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றையும்
கொஞ்சம் படித்தேன். Best European Fiction 2015. Dalkey Archive Press வெளியீடு. பிரஞ்சு,
ஜார்ஜியா ஆகிய நாட்டுக் கதைகளை படித்தேன். சமகால கவிதைகளில் மீடியாவும் கண்காணிப்பும்
முக்கிய பேசுபொருட்கள் எனத் தோன்றுகிறது. கச்சிதமாய், இலக்கியத்ததனமாய் எழுதுவதை விடுத்து
லகுவாய், சரளமாய் அதே நேரம் தீவிரமாய் எழுத முயல்கிறார்கள். எகெதெரினா தொகொனிட்ஸெ எழுதிய
It’s Me அழகுசாதனங்கள், அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை முழுக்க இன்னொருத்தியாக மாற்றிக்
கொண்டு பிரபலமான டிவி ரியாலிட்டி ஷோ நட்சத்திரத்தின் கதை. படக்கருவி முன்பும், வாழ்க்கையின்
பல்வேறு தளங்களிலும் ஒரு பெண் தான் யாரென்றே அறியாத விதம் உருமாறிப் போகிற அவலத்தை
பேசுகிறது இக்கதை.
நிகலஸ் பொயஸ்ஸியின் An Unexpected Return ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
நடக்கிறது. அங்கே குடியிருக்கும் ஒருவர் ஒருநாள் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல்
போகிறார். மனிதர்கள் சகமனிதர்கள் மீது அக்கறை இழந்து விட்டார்கள் என்றும் வருந்தும்
அவர் இதை கண்டிக்கும் விதமாய் தன் உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றாய் துண்டித்து அங்கு
வாழ்பவர்களுக்கு அனுப்பப் போவதாய் அவன் தெரிவிக்கிறார். அவ்விதமாய் தன் கால், இமை,
உதடு என ஒவ்வொன்றாய் நறுக்கி குடியிருப்பின் பல பகுதிகளிலாய் ஒரு குறிப்புடன் இடுகிறார்.
இது அங்குள்ள மக்களிடையே பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. அவரை
கடுமையாய் வெறுப்பவர்களும் ஆதரிக்கிறவர்களும் இரு சாரிகளாய் பிரிந்து செயல்படுகிறார்கள்
(பிக்பாஸை பின் தொடர்பவர்கள் போல). அனைவரும் அவரைப் பற்றியே சிந்திக்கிறார்கள், அஞ்சுகிறார்கள்,
அருவருப்படைகிறார்கள். அவர் செத்து விட மாட்டாரா என ஏங்கிறார்கள். ஒருநாள் அவர் திரும்பி
வருகிறார். இது தான் திருப்பம். இன்றைய மீடியா கண்காணிப்புச் சூழல், மனிதர்கள் வெற்று
பிம்பங்களாய் மாற்றப்படும் அவலம் ஆகியவற்றை கர்த்தரின் சிலுவையில் அறைதல், உயிர்த்தெழும்பல்
ஆகியவற்றுடன் இணைத்து புதுவிதமாய் கற்பனை செய்ய முயலும் கதை இது.
முழுத்தொகுப்பையும்
படித்தபின் மற்ற கதைகள் பற்றி விரிவாய் எழுதுகிறேன்.