ஒரு பெண் தன்னை, தன் உடலை, அழகாய், கவர்ச்சியாய், மனதை கொக்கி போட்டு இழுக்கும்படியாய்,
காட்டும் போது அதன் நோக்கம் என்ன? ஆணை கவர்வது என இன்று சுலபமாய் நாம் சொல்லி விட முடியாது.
கணிசமான பெண்கள் அதை ஏற்க மாட்டார்கள். தம்மை வெளிப்படுத்துவது, தன்னம்பிக்கையுடன்
தன்னை கட்டமைப்பது, தனக்காகவே தன்னை அலங்கரிப்பது, சுதந்திரமாய் இருப்பது என பல கோணங்களில்
பெண்கள் தமது உடல் வசீகரத்தை அர்த்தப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு முரண் உள்ளது:
தன்னை அலங்கரித்து அழகாய் காட்டிக் கொள்வதோ தனது உடல் வடிவை, நெளிவை, நளினத்தை, தோலின்
மிளிர்வை புலப்படுத்தி தன்னை கவர்ச்சியாய் காட்டுவதோ ஒருவித காட்சிப்படுத்தல் தானே?
அதாவது இன்னொருவர் காண அன்றி நாம் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட விதமாய் காட்டிக் கொள்கிறோம்?
இது சரி என்றால் ஆண் பார்ப்பதற்கு அன்றி (லெஸ்பியன் எனில் மற்றொரு பெண் கவனிப்பதற்கு
அன்றி) வேறு எதற்காய் பெண்ணுடல் காட்டப்படுகிறது?
இதையும் ஏற்றுக் கொண்டோம் என்றால் “அழகாய் தெரியும்” ஒரு பெண்ணை ஒரு ஆண் இச்சையுடன்
”பார்க்கலாமா”? “ரசிக்கலாமா?” பெரும்பாலான பெண்கள் ஆண்கள் தம்மை உற்றுப் பார்த்தால்
எரிச்சலும் அருவருப்பும் அடைவார்கள். இது தான் நான் சொல்ல வரும் பெண்ணுடலின் முரண்போலி
(paradox). பெண்கள் தம்மை ஆண்கள் உடல்ரீதியாய் ரசிப்பதையும் விரும்புகிறார்கள். அதே
நேரம் நேரடியாய் ரசிப்பதில் உறுத்தலும் அருவருப்பும் கொள்கிறார்கள். இதைப் பற்றி நேரடியாய்
அல்ல எனிலும் பிராயிட் பேசியிருக்கிறார்.
உடலுறவின் போது எதிர்ப்புணர்வு சுகத்தை அதிகப்படுத்துகிறது என்கிறது. ஆடை நீக்கப்படும்
போது தன்னிச்சையாய் அதை மறுத்து உடலை கைகளால் மறைக்கும் அல்லது ஆடையை இறுகப் பிடித்துக்
கொள்ளும் பெண் அந்த முரண்-எதிர் நிலையின் போது உச்சபட்ச களிப்பை, உன்மத்த மகிழ்ச்சியை,
கிளர்ச்சியை பெறுவதாய் பிராயிட் சொல்கிறார்.
ஆனால் பெரும்பாலான சமயங்களில் ஒரு பெண் தன்னை அழகாய் காட்டிக் கொள்வது பாலியல்
நோக்கத்தில் அல்ல. இங்கு தான் நாம் பிராயிடிடம் இருந்து விலகி யோசிக்க வேண்டும். பாலியல்
ஈர்ப்பு நம்மிடம் எப்போதும் ஒரு வாசனை போல் நீடிக்கிறது. ஆனால் பாலியல் நோக்கம் எப்போதும்
இருப்பதில்லை.
பெண்கள் தமது சுயத்தை உடல் மூலமாய் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களுக்கு உடல்
ஆதி மொழியாக, முதன்மை மொழியாக உள்ளது. அதனாலே பெண்கள் மத்தியில் கைகளைப் பற்றுவது,
தோளைத் தழுவுவது, கூந்தலை வருடுவது, தொட்டுப் பேசுவது மிக இயல்பாக உள்ளது. அதே போன்று,
யார் பேச்சையாவது கவனிக்கையில் அவர்கள் தம் கூந்தலை சரிசெய்தபடி, காலாட்டியபடி, நகங்களை
நீவியபடி, முகத்தை, முழங்கையை தொட்டபடி இருப்பார்கள். ஆண்களோ தமக்கும் உடலுக்கும் சம்மந்தமே
இல்லை எனும்படி இருப்பார்கள்.
இதனாலே உடல்ரீதியாய் சமூகம் தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதில் பெண்கள் அதீத
கவனம் கொள்வார்கள். சில பெண்களிடம் உடல் பிரக்ஞை குறைவாக இருக்கலாம். ஆனால் தன் உடல்
பற்றின சுய-எண்ணம் இல்லாத பெண்களே இல்லை எனலாம். பெண்களின் மனநிலை அவர்களின் உடலில்
– பௌதிகமாகவே – வெளிப்படுவதை நான் அருகிருந்து கவனித்திருக்கிறேன். ஒருநாள் அவர்களின்
கூந்தலும், தோலும், கண்களும் மிளிரும். இன்னொரு நாள் வறட்சியாய் இருப்பார்கள். ஒரு
நாள் பூரிப்பாகவும் இன்னொரு நாள் உலர்ந்து சுருங்கியும் இருப்பார்கள். அவர்கள் அகம்
என்பது புறத்தின் – உடலின் – நீட்சி மட்டுமே.
ஆக ஒரு பெண் தன்னை யார் எனக் காட்டிக் கொள்வது பிரதானமாய் உடலால் தான். இயல்பாகவே
இதில் பாலியலும் கலந்து கொள்கிறது. ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றும் போதும், பாராளுமன்றத்தில்
காரசாரமாய் விவாதிக்கும் போது பெண்ணிடம் அவளது பாலியல் உடல் தகதகத்தபடி இருக்கிறது.
ஆனால் பால் இச்சை இருப்பதில்லை. இந்த நுணுக்கமான வேறுபாடு முக்கியம். இதை ஆண்கள் பெரும்பாலும்
அறிவதில்லை. ஏனெனில் உயிரியல் சார்ந்து அவர்கள் தம்மை பாலியல் ஜொலிக்க உடலால் வெளிப்படுத்துவதில்லை.
முரண்பாடுகள் மத்தியில் இயல்பாய், எளிதாய், சுலபமாய் சிந்திக்கவும், செயல்படவும் ஆண்களால்
முடிவதில்லை. ராமாயணத்தில் சீதா ஏன் சிறைபட்ட நிலையில் அவ்வளவு பொறுமையாய் காத்திருக்கிறாள்?
அவள் தனது கற்பின், விரதத்தின் சக்தியால் ராவணனை சாம்பலாக்கி இருக்க முடியும் என சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் ராமனுக்காய் ஏங்குகிறாள். ராவணனிடம் இருந்து விடுபட்டுப் போக தவிக்கிறாள்.
ஆனால் தானாகவே விடுபட்டுச் சென்றால் அது ராமனின் ஆண்மைக்கு இழுக்கு என பொறுக்கிறாள்.
வெறுப்பையும் ஏக்கத்தையும் அனுபவித்தபடியே, தன் அக உந்துதலுக்கு முற்றிலும் மாறாக அவளால்
நீண்ட காலம் இருக்க முடிகிறது. ராமனால் மீட்கப்பட்டு, பின்னர் அவனாலே நெருப்பில் இறங்கி
தன்னை நிரூபிக்க நிர்பந்திக்கப்படும் போதும் அவள் கொதிப்பதில்லை. நெருப்பின் ஊடாய்
ஒரு தெய்வத்தை போல் வெளிவந்த பின்னரே அவள் பூமிக்குள் மறைகிறாள். ஏன் அதை முன்னரே செய்திருக்கலாமே?
இது தான் பெண்ணின் அடிப்படையான உளவியல். சிவப்பு விளக்கின் போது பொறுமையாய் காப்பார்கள்.
பச்சை விளக்கின் போது வாகனங்கள் நெருக்கி ஒலி எழுப்ப ஒதுங்கி வழிவிடுவார்கள். ஆனால்
அடுத்த முறை சிவப்பு விளக்கு எரியத் துவங்கும் போதே அவசரமாய் பாய்ந்து சென்று மறைவார்கள்.
எதையும், கறுப்பு-வெள்ளையாக பார்க்கும்,
நேராக தர்க்கரீதியாய் புரிந்து கொள்ளும் ஆணுக்கு பெண்களின் இந்த தலைகீழ் லாஜிக் புரியாது.
பிரச்சனை அது அல்ல. இதுவரையிலும் ஆண்களும் அப்படி தம் எதிர்பாலினத்தை புரிந்து கொள்வதற்கான
முயற்சிகள் எடுத்ததில்லை. ஆனால் இன்று அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
முன்பு எப்போதையும் விட பெண்கள் இந்த
உலகை ஒரு வெல்லக்கட்டியை சுற்றி வரும் எறும்புகள் போய் மொய்க்கிறார்கள். எங்கள் பல்கலையில்
மாணவர் சேர்க்கையின் போது பெண்களுக்கான cut-off ஆண்களை விட அதிகம். ஏனென்றால் ஆண்கள்
குறைவாகவே மதிப்பெண் பெறுகிறார்கள். அவர்களால் பெண்களுடன் மோதி ஜெயிக்க முடிவதில்லை.
ஒரே cut-off வைத்தால் பல்கலையில் ஆண்-பெண் சதவீதம் 20-80 என இருக்கும். ஆக, ஆண்களுக்கு
என்றே ”இட-ஒதுக்கீடு” வைத்திருக்கிறார்கள். கல்வியில் மட்டுமல்ல வேலைத்தேர்விலும் மனிதவள
அதிகாரிகள் பெண்களுக்கே முன்னிரிமை அளிக்கிறார்கள். ஆண்களை விட அவர்களால் திறமையாய்
பல வேலைகளை ஒரே சமயம் செய்ய முடிகிறது. மேலான தொடர்பாடல் திறன் இருக்கிறது. பொறுப்பாய்
இருக்கிறார்கள். மெல்ல மெல்ல எதிர்காலத்தில் உலகம் எனும் வெல்லக்கட்டியை முழுக்க பெண்களே
கவர்ந்து விடுவார்கள். அப்போது ஆண்கள் தம்மை பெண்களுக்கு ஏற்ப தகவமைக்க நேரிடும்.
இப்போதே அதற்கான நெருக்கடி ஆண்களுக்கு ஆரம்பித்து விட்டது. தன்னிச்சையாய், சுதந்திரமாய்
வாழ முயலும் ஒரு இளம் தாயின் கதையை உக்கிரமாய் பேச முயலும் “தரமணி” எப்படியான சர்ச்சைகளை
எல்லாம் சந்திக்கிறது பாருங்கள்! பெண்களின் கொதிப்பு நிலை உயர்ந்து கொண்டே வருகிறது.
பத்து வருடங்களுக்கு முன் இந்நிலை இல்லை என்பதை நான் உறுதியாக கூற முடியும். என் நண்பர்
ஒரு புள்ளிவிபரம் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விவாகரத்து ஏற்படுத்திய
மனச்சோர்வால் பெண்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஆண்கள் தற்கொலை புரிந்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், காதலர்களும் கணவர்களும் தம் துணைகளை கொடூரமாய் தாக்குவதும் கொல்லுவதும்
கணிசமாய் அதிகரித்திருக்கிறது. சினிமாவில் பெண்களை கேலி செய்யும் பாடல்கள் முன்பு பிரசித்தம்.
இப்போதோ பெண்களை பழிக்கும் பாடல்கள்! ஏன்?
இன்றைய பெண்களை எதிர்கொள்ள முடியாத
நெருக்கடியில் ஆண்கள் வன்முறை மிக்கவர்களாய் மாறுகிறார்கள். இது பெண்களின் பாலுள்ள
சிக்கல் அல்ல. அவர்களை புரிந்து கொள்ள இயலாமையின் சிக்கலே. நாம் காதலுக்கும் திருமணத்துக்கும்
பிறகான வன்முறையை ஒதுக்கி விட்டு, இப்போதைக்கு தெரியாத ஒரு பெண்ணை ஒரு ஆண் அணுகுவதில்
உள்ள அடிப்படையான சிக்கலுக்கு, அதனால் விளையும் stalking போன்ற அடுத்து குற்றங்களுக்கு
வருவோம்.
(தொடரும்)