நண்பர் சரவணகார்த்திகேயன் முகநூலில் எழுதியுள்ள ஒரு ஆர்வமூட்டும்
பதிவு “கேரள நன்னாட்டிளம் பெண்கள்”. நமது இலக்கியவாதிகளோ அறிவுஜீவிகளோ எடுத்துக் கொள்ளாத ஒரு
முக்கியமான விசயத்தை இதில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் கேரளத்துப் பெண்களை நோக்கி தமிழர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்?
ஆரம்பத்தில் கேட்க ஏதோ விடலைத்தனமான கேள்வி எனத் தோன்றினாலும், நமது கூட்டு மனம் எப்படி செயல்படுகிறது, அதிலுள்ள விசித்திரங்கள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத்
தூண்டும் முக்கியமான (அதே நேரம் விளையாட்டுத்தனமான) பதிவு இது. தமிழ் மனதின் கேரள சபலத்துக்கு அவர் கூறும் காரணங்களில் எனக்கு ஏற்புடையவை இவை.
1) கேரளப் பெண்களின் பொன்னிறம்
2) அவர்களின் வெளிப்படையான பேச்சும் நட்பார்ந்து
பழகும் போக்கும் (துணிச்சல்) – இது தமிழ் மனத்துக்குள் உருவாக்கும் கிளர்ச்சி.
3) அவர்களின் உடல்மொழியில் உள்ள குழந்தைமை
4) தம்மை தொடர்ந்து அழகிகளாய் காட்டிக் கொள்ள் அவர்கள்
காட்டும் முனைப்பு
5) மலையாளிகள் நம் அண்டை மாநிலமாய் இருப்பதும், அவர்கள் மொழியும் நம் மொழியும் ஒட்டுறவாடும் தன்மை கொண்டதாய்
இருப்பதும்.
இதில் எனக்கு கூடுதலாய் சொல்ல இரு விசயங்கள் உள்ளன. இவற்றை சரவணகார்த்திகேயனின் அவதானிப்புகளின் மீதான எனது கூடுதலான
பார்வைகள் எனலாம்.
தமிழர்கள் கறுப்பானவர்களையும் அதிகப்படியான வெள்ளை
நிறம் கொண்டவர்களையும் விரும்புவதில்லை. உ.தா, வடக்கத்திப் பெண்கள், மார்வாரிகளின்
மைதா மாவு நிறம் பற்றின கிண்டல் கேலிகள். இரண்டு நிறங்களுக்கும் இடைப்பட்டதாய் மலையாளப் பெண்களின் நிறம் உள்ளது. அதே போல் தமிழர்கள் ரொம்ப ஒல்லியானவர்களையோ ரொம்ப பருமனானவர்களையோ
விட இடைப்பட்ட பூசீனாற் போன்ற தோற்றம் கொண்ட மலையாளிப் பெண்களால் கவரப்படுகிறார்கள். இக்கருத்துக்கு மாறுபடும் விதமாய், தமிழ் சினிமாவில் வடக்கத்திய பெண்கள் ஆதிக்கம் செலுத்துவதையும், பருமனான நாயகிகள் ஒரு காலத்தில் தமிழர்களின் உள்ளத்தை கொள்ளை
கொண்டதையும் சொல்லலாம். ஆனால் இவர்களை
எல்லாரையும் விட மலையாளிப் பெண்களுக்கு தனி மவுசு உண்டு என சரவணகார்த்திகேயன் சொல்வதை
ஏற்கிறேன்.
சரவணகார்த்திகேயன் சொல்லும் இக்காரணம் முக்கியம். மலையாளிப் பெண்கள் நம் அண்டை மாநிலத்தவர்கள், மார்வாரிகளையோ பஞ்சாபியரையோ போல் வெகு தொலைவானவர்கள் அல்ல. இப்பெண்களின் சிறப்பு இவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல, அதேநேரம் முழுக்கவே நம்மில் இருந்து மாறுபட்டவர்கள் அல்ல
என்பது. இதுவே அழகு சம்மந்தமான நமது அடிப்படை அளவுகோல். ஏமி ஜேக்ஸனின் மவுசும் இப்படித் தான் ஏற்படுகிறது. அவர் நம்மைப் போன்று கரிய கூந்தல் கொண்டவர், ஆனால் வெள்ளைக்காரி. நம்மைப் போன்றவர், ஆனால் நம்மைப் போல் அல்லாதவர்.
இது என்னை எப்போதுமே வியக்க வைக்கிற ஒரு விசித்திரம். நம் ஆண்கள் மிக மிக அரிதாகவே வடகிழக்குப் பெண்களை காதலிக்கிறார்கள். இந்திப் பெண்கள், மலையாளிப் பெண்களுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம்? வடகிழக்கத்தவர்கள் பார்க்க சீனத் தோற்றம் கொண்டிருப்பது தான். அவர்கள் என்னதான் நம்முடன் இணக்கமாய் பழகினாலும் நம்மில்
இருந்து பெரிதும் வேறுபட்டிருக்கிறார்கள். (இக்கருத்தையும் பெருவாரியான மவுசு என்ன எனும் விதத்தில் தான்
கூறுகிறேன்.)
ஒரு மாநிறத்துப் பெண்ணை நோக்கி நம் ஆண்கள் ஈர்க்கப்படலாம். மாநிறத்துப் பெண்கள் மத்தியில் வளர்ந்த ஒரு ஆண் கூடுதல் கறுப்பான
பெண்ணிடம் தன் மனத்தை பறிகொடுக்கலாம். ஆனால் ஆப்பிரிக்கப் பெண்களிடம் இச்சை கொள்வது அரிதிலும் அரிது. ஏனெனில் அவர்கள் நம்மில் இருந்து மிக அதிகமாய் வேறுபட்டிருக்கிறார்கள்.
(இந்த கருத்துப் போக்கில் ஒத்து வராத சங்கதி வெள்ளையினப் பெண்கள்
மீது சிலநேரம் நாம் கொள்ளும் ஈர்ப்பு மட்டுமே. அது ஏன் என எனக்குப் புரியவில்லை.)
சாதி மீறிய திருமணங்களை எடுத்துக் கொண்டாலும்
இந்த லாஜிக் செல்லுபடியாகும். பிராமணர்-மத்திய சாதியினர்-தலித்துகள் என ஒரு சமூக அதிகார படிநிலை உள்ளது. இதில் இடப்பக்கம் உள்ளவர் மத்தியை நோக்கியும், இறுதியில் உள்ளவர் மையத்தை நோக்கியுமே அதிகம் ஈர்க்கப்படுவதைக்
காண்கிறேன். மிக அரிதாகவே பிராமண-தலித் காதல் திருமணங்களைக் காண்கிறேன்.
இன்றைய நகரச்சூழலில் முன்பு போல் சாதிகள் நில
அமைப்பு, விவசாய அடிப்படையிலான அருகாமை என ஒரு குறிப்பிட்ட
கட்டமைப்பில் இருப்பதில்லை. ஒரு கல்லூரியில், அடுக்குமாடிக் குடியிருப்பில், வேலையிடங்களில் கிட்டத்தட்ட எல்லா சாதியினரும் பரஸ்பரம் பழக
இன்று வாய்ப்புள்ளது. முழுமையாக அல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது தலித்துகளும்
இஸ்லாமியரும் நமது நகர சமூக உறவாடல் பரப்பில் தமக்கான ஒரு இடத்தை பெற்று வருகிறார்கள். ஆனாலும் ஈர்ப்பு கொள்வது என்பது முழுக்க எதிர்சாரியில் இருப்பவர்கள்
மீது என்றில்லாமல், அதிகமும் அருகருகே, ஓரளவு தோற்ற, கலாச்சார, பொருளாதார ஒற்றுமை கொண்டவர்கள் மீதே அதிகம் நடக்கிறது. அதாவது வேறுபட வேண்டும், ஆனால் மிகத்தீவிரமாய் வேறுபடக் கூடாது. (இது என் எளிய அனுபவப் பின்னணியிலான பார்வை மட்டுமே. தவறிருந்தால் திருத்தவும்.)
இதை நாம் மொழியைக் கற்றுக் கொள்ளும் லாவகத்திலும்
பார்க்கலாம். ஆங்கிலத்தின் வாக்கிய அமைப்பு நமது தமிழ் உரைநடைக்கு
வெகுவாக நெருக்கமானது. ஆக, ஒன்றை அறிந்தவர்கள் இன்னொன்றை அறிவது சுலபமாய் உள்ளது. மலையாளம் சமிஸ்கிருத சாயல் கொண்டது. ஆக, சமிஸ்கிருதத்தில்
இருந்து உருவான இந்தியை மலையாளிகள் சுலபத்தில் ஆர்வத்துடன் கற்கிறார்கள். தமிழ் பேசுவதிலும் தனி ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் சீன மொழி கற்கும் போது வெகுவாய் போராடுவீர்கள். ஏனெனில் அதன் அடிப்படை அமைப்பு நம் மொழியில் இருந்து மிகவும்
அந்நியமானது.
அடுத்து நாம் ஆடையணியும் விதத்தைப் பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறத்தில், ஸ்டைலில் ஆடை அணிந்து அலுவலகம் போகிறோம். டி ஷர்ட் ஜீன்ஸில், பார்ட்டிக்கு என்றே தயாரிக்கப்பட்ட ஆடைகளைக் கூட சில அலுவலகங்களில்
அனுமதிக்கிறார்கள். ஆனால் லுங்கி, நைட்டியில் போக முடியாது. அல்லது ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு போக முடியாது. ஏனெனில் ஜீன்ஸ் கூட அலுவலகத்தில் அனுமதிக்கப்படும் ஆடைக்கு
சற்றே அருகாமையில் இருக்கிறது. ஆனால் லுங்கி
ரொம்பவே அதற்கு மாறுபட்டிருக்கிறது. அதனால் நீங்கள்
லுங்கியில் சென்றால் நிச்சயம் எல்லாரும் சிரிப்பார்கள். ஜீன்ஸுக்கு சிரிக்க மாட்டார்கள். ஒன்று வெளியூர் ஆடை, இன்னொன்று உள்ளூர் என்பதனால் மட்டும் அல்ல. ஒருவேளை உங்கள் அலுவலகத்தின் அனுமதிக்கப்பட்ட ஆடை வேட்டி
சட்டை என்றால் நீங்கள் லுங்கி அணிவதை கூட அவ்வப்போது அனுமதிப்பார்கள். ஆனால், பாரம்பரியமாய், நூற்றாண்டுகளாய், வேட்டி சட்டையை மட்டுமே ஊழியர்கள் அணிந்து வந்த ஒரு அலுவலகத்தில்
ஒருவர் திடீரென பேண்ட் போட்டு வந்தால் நிச்சயம் அது வேடிக்கையாக இருக்கும். கேரளாவின் பேண்ட் புழக்கத்தில் வந்த காலத்தில் அதைப் பற்றி
எழுந்த ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன.
ஒரு விசயம் அதனுடன் சற்றே வித்தியாசப்பட்ட இன்னொன்றுடன்
ஒப்பிடப்படும் போது தான் அது என்ன என்ற அர்த்தமே பிறக்கிறது. ஆனால் அதுவே மிக அதிகமாய் வித்தியாசப்பட்டால் வேடிக்கையாய், அபத்தமாய் மாறும். கேரளப் பெண்களின் அழகும் இப்படியே கட்டமைக்கப்படுகிறது.
அடுத்த காரணத்துக்கு வருவோம். கேரளப் பெண்களின் துணிச்சல், துடுக்குத்தனம், வெளிப்படைத்தன்மை, நட்பார்ந்த குணம். இவ்விசயத்தை நானே தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். கேரளா ஒரு தாய்வழி சமூகம் என்பது அப்பெண்களுக்கு அபரிதமான
தன் முனைப்பை, துணிச்சலை வழங்குகிறது. இதுவே கேரள ஆண்களின் உடல் மொழியிலும் தோற்றத்தில் ஒரு பெண்மையை
கொணர்கிறது. அதே சமயம், தமது ஆண்மை இத்துணிச்சல் மிக்க பெண்களால் கேள்விக்கு உள்ளாவதை
உணரும் இந்த ஆண்கள் பெண்களை ஒடுக்குவதிலும் மட்டம் தட்டுவதிலும் கட்டுப்படுத்துவதிலும்
தனி முனைப்பு காட்டுகிறார்கள்.
கேரளாவில் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை எனும்
பேச்சு இப்படித் தான் கிளம்புகிறது. அங்கு பெண்கள்
வலுவாக இருப்பதனாலேயே அவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகான மலையாள சினிமாவில் ஆண்மை கர்ஜனை
மிக அதிகமாகி இருப்பதும் அவர்களின் ஆண்மை இன்னொரு பக்கம் கடும் அச்சுறுத்தலில் இருப்பதனால்
தான். தமிழிலும் இது நடந்தது. எண்பது தொண்ணூறுகளுக்குப் பிறகு, பெண்கள் சற்றே துணிச்சலாய், சுதந்திரமாய் மாறின பின்பே நாயகியை நாயகன் கன்னத்தில் அறையும்
ஒரு காட்சியாவது நமது படங்களில் இடம்பெற்றது.
பெண் அதிகாரத்தின் நீட்சி தான் துணிச்சல், தன்முனைப்பு, சுய அலங்கார விழைவு, ஆணுடன் நட்பு
கொள்ள காட்டும் ஆர்வம் ஆகியவை. இந்த மாறுபட்ட
தன்மை நிச்சயம் தமிழர்களை ஈர்க்கிறது. நான் வங்காளப் பெண்களிடம் இந்த குணத்தைக் கண்டிருக்கிறேன். அவர்களின் தாய்வழி சமூகத்தில் இருந்து வந்தவர்களே. ஆனால் நீங்கள் வங்காளிப் பெண்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்பட
மாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் நம்மில் இருந்து வெகுவாய் வேறுபடுகிறார்கள். நம் அர்த்த சட்டகத்துக்கு வெளியே இருக்கிறார்கள்.
உடல்மொழியை பொறுத்தமட்டில், கார்ப்பரேட்மயமான நகரத்து வடக்கத்திய பெண்கள் சற்றே ஆண் தன்மை
மிக்கவர்களாய் இருப்பதைக் காணலாம். காரணம் அவர்களின்
சமூகம் ஆண்வழிப்பட்டது. இப்பெண்கள் கல்வியும்
பொருளாதார சுதந்திரமும் கொண்டிருந்தாலும், சதா ஆண்-மைய சூழலில் இன்னொரு
புறம் வாழ நேர்கிறது. ஆக, தம்மையறியாமல் இவர்கள் முழுக்க ஆண்களைப் போல் இருக்க முயல்கிறார்கள். உடல்மொழியில் ஆண்களை – தம் தகப்பனை – பிரதிபலிக்கிறார்கள். அமெரிக்கா, பிரான்சு போன்ற ஐரோப்பிய தேசங்களின் பெண்களுக்கும் இதுவே
நடக்கிறது.
கேரளா போன்ற பெண்வழி சமூகங்களிலோ பெண்களின் பண்பாட்டு
அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அதைத் தக்க வைக்க ஆண்களுடன் மோத வேண்டியிருக்கிறது. ஏனெனில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புகள் ஆண்களின் வசம்
உள்ளன. ஆக, அப்பாவை போல் இருக்காமல், அம்மாவைப் போல்
இருக்கவே இவர்கள் முனைகிறார்கள். ஆண்களுடன் மோதும்
போது மேலும் அதிகமாய் தம் பெண்மை சிருங்காரத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள். தன் மாநிலத்துப் பெண்களை விட பக்கத்து மாநிலப் பெண்கள் பெண்மை
எழில் மிக்கவர்களாய் தமிழனுக்கு தெரிவதன் ஒரு சமூக உளவியல் காரணம் இதுவே.
இப்பெண்களின் குழந்தைமையையும் நான் மேற்சொன்ன
வாதத்தின் அடிப்படையிலேயே புரிந்து கொள்கிறேன். குழந்தையாய் ஒரு பெண் தன்னை சித்தரிக்கையில் அவள் தன்னை பலவீனமானவளாய்
மறைமுகமாய் தோற்றம் காட்டுகிறாள். அவளது துணிச்சல்
கண்டு சற்றே மிரண்டு போகும் ஆணை ஈர்ப்பதற்கான ஒரு மாற்று தந்திரம் இது. இதையெல்லாம் கேரளப் பெண்கள் தம்மை அறியாது செய்கிறார்கள்
என்பதே வேடிக்கை.