
இந்த அந்தியைக் கூட இழந்து விட்டோம்
நீல வெளிச்சம் உலகின் மீது கவியும்
இம்மாலையில் யாரும் காணவில்லை கையோடு கைகோர்த்து நம்மை
என் ஜன்னலில் இருந்து கண்டேன்
தொலைதூர மலைமுகடுகளில் அஸ்தமனத்தின் விழா கோலாகலத்தை
சிலநேரம் என் கைகளுக்கு இடையே சூரியனின் ஒரு துண்டு
ஒரு நாணயத்தைப் போல கனன்றது
உன்னை நினைவுகூர்ந்தேன் என் ஆன்மா
நீயறிகிற அத்துயரத்தின் கிடுக்கிப் பிடியில் தவித்திட.
அப்போது எங்கிருந்தாய் நீ?
வேறு யாரெல்லாம் இருந்தார்கள் அங்கே?
என்ன சொன்னார்கள்?
நான் துக்கத்தில் ஆழ்ந்திருக்க, நீ வெகு தொலைவில் இருப்பதாய்
உணர
அப்போது பார்த்து ஏன் காதல் முழுமைமாய் வந்து என்னை பிடித்தாட்ட
வேண்டும்?
அந்தியில் நான் எப்போதும் சரணடையும் அப்புத்தகம் கீழே விழுந்தது
எனது தளர் அங்கி காயமுற்ற ஒரு நாயைப் போல என் காலடியில்
உருள்கிறது.
எப்போதும் எப்போதும்
நீ பின்னோடி மறைகிறாய் மாலைபொழுதுகளின் ஊடே
சிலைகளை மாய்க்கும்
அந்தியை நோக்கி.
(தமிழில் - ஆர். அபிலாஷ்)