:origin()/pre00/a29a/th/pre/i/2016/269/4/c/pumawoman_by_gaudibuendia-daiyp24.png)
உன் உதடுகளுக்காய், உன் குரலுக்காய், உன் கூந்தலுக்காய் இச்சையில்
தவிக்கிறேன்.
மௌனமாய், பட்டினியில் காய்ந்து, வீதிகளில் பதுங்கித் திரிகிறேன்.
ரொட்டி என்னைத் தணிப்பதில்லை, விடியல் என்னை தடுப்பதில்லை,
நாள் முழுக்க
உன் நீரலை காலடிகளின் சப்தத்தை வேட்டையாடுகிறேன்.
உன் மிளிரும் சிரிப்புக்காக.
கட்டுமீறிய ஒரு அறுவடையின் நிறத்திலான உன் கைகளுக்காக எச்சில்
ஊறுகிறது எனக்குள்,
உன் விரல் நகங்களின் வெளிறிய கற்களுக்கான பசி என்னைக் கொல்லுகிறது,
உன் தோலை ஒரு முழு வாதம் பருப்பைப் போல தின்ன வேண்டுமடி எனக்கு.
உனது இனிய தேகத்தில் பட்டு சுடர்விடும் அந்த
ஒளி பிம்பத்தை,
உன் திமிரான முகத்தின் அந்த அதிகாரம் சொட்டும்
மூக்கை
தின்ன வேண்டுமெனக்கு,
உன் கண்ணிமைகளின் தோன்றி மறையும் நிழலை புசிக்க
வேண்டுமெனக்கு,
ஆக நான் நடைபோடுகிறேன், பசியாய், அந்தியை மோப்பம்
பிடித்தபடி,
உன்னை வேட்டையாட, உன் சூடான இதயத்துக்காக,
குவாட்ராட்டூவின் பாலையில் ஒரு பூமா சிறுத்தை
போல.
(தமிழில் ஆர். அபிலாஷ்)