
என் மூதாதை, இமயத்து பனியினாலான
ஒருவன்,
சமர்கந்தில் இருந்து
காஷ்மீருக்கு வந்தான்,
கடல் சமாதிகளில்
சேகரித்த தன் குடும்ப சொத்தான
திமிங்கல எலும்புகளை
பையில் சுமந்து கொண்டு.
அவன் முதுகெலும்பு
பனிக்கட்டி ஆறுகளில்
இருந்து செதுக்கப்பட்டது,
அவன் மூச்சு
ஆர்க்டிக் துருவத்திலிருந்து புறப்பட்டது,
ஆகையால் தன்னைத்
தழுவும் பெண்களை உறையச் செய்தான்.
அவன் மனைவி
கல் போன்ற நீராக உருகினாள்,
அவளது முதுமை
ஒரு தெள்ளிய
நீராவியாதல் ஆனது.
இந்த குடும்ப
சொத்து,
என் தோலுக்கடியில்
அவனது எலும்புக் கூடு,
மகனில் இருந்து
பேரனுக்கு கடத்தப்பட்டது,
என் முதுகின்
மீது பனிமனிதர்களின் தலைமுறைகள்.
மௌனமாக்கப்பட்ட அவர்களின் பனிக்குரல்களுடன்,
ஒவ்வொரு ஆண்டும்
என் ஜன்னலை அவர்கள் தட்டுகிறார்கள்.
இல்லை, என்னை
அவர்கள் பனிக்காலத்தில் இருந்து வெளியேற விட மாட்டார்கள்,
மேலும் நான்
எனக்கே உறுதிமொழி எடுத்துள்ளேன்,
நான் இறுதி
பனிமனிதன் என்றாலும் கூட,
அவர்களின் உருகும்
தோள்களில் ஏறி
நான் வசந்தத்திற்குள்
பயணிப்பேன் என.
(தமிழில் ஆர். அபிலாஷ்)