“ஸ்ரீதேவி மறைந்தது மறைந்தது போலவே இல்லை. ஒரு அழகான பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு சென்று
கதவை சாத்திக் கொண்டது போல இருக்கிறது” என ஒரு ஸ்ரீதேவி ரசிகர் என்னிடம் சொன்னார். நான் கவனித்த வரையில் பல ரசிகர்களின் மனநிலையும் இப்படித்
தான் இருக்கிறது. ஒரு பக்கம் மனம்
உடைந்தாலும் இன்னொரு பக்கம் இது ஒரு பொய் செய்தி என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் வயதாகி நம் கண்முன்னே உருமாறி சட்டென மறையும்
போது அவரைப் பற்றி நினைவில் மீட்டி சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கிறது. நடிப்பு வாழ்வின் உச்சத்தில் ஒருவர் சட்டென மாய்ந்தால் அப்போது
நம்மால அரற்றி அழ முடியும். ஆனால் ஸ்ரீதேவியோ
இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக உருவாகி நீண்ட காலம் அரியணையை அலங்கரித்த
பின் தானாகவே அதை விட்டகன்று மனைவியாக தாயாக எளிய வாழ்க்கை வாழ்ந்து ஒருநாள் English Vinglish (2011) எனும் படம் மூலமாக மீண்டும் திரையுலகில் கோலோச்ச
திரும்பினார். அவரது திரைவாழ்வின் இந்த இறுதிக் கட்டம் கூட வெகு
அட்டகாசமாய் ஆர்ப்பாட்டமாய் பெரும் வெற்றியாய் அமைய இதை இறுதி கட்டம் என நினைக்கவே
நமக்குத் தோன்றவில்லை.
ஆக அவரது இந்த எதிர்பாராத விடைபெறல் ஒரு மரணம்
போலவே இல்லை பல ரசிகர்களுக்கும். படம் முடிந்து
திரை விழுந்து அவர் தற்காலிகமாய் மறைந்தது போன்றே உள்ளது. துக்கத்தை விட விம்மல்களும் ஏக்கமும் வியப்புமே இப்போது நம்மை
ஆக்கிரமிக்கும் உணர்ச்சிகள். இன்னும் சற்று
காலம் நாம் அத்திரையையே வெறித்துப் பார்த்து அமர்ந்திருக்கப் போகிறோம்!
அழகும் திறமையும்
ரஜினி, கமல் போன்ற அபாரமான நடிகர்களுடன் ஒரே திரையில் நடிக்கையில்
தன்னை இணையாக ஸ்தாபிக்க முடிந்த ஒரே நடிகை ஸ்ரீதேவி தான். அதாவது, சிம்ரன், ஜோதிகா, ஊர்வசி போன்றோர்
திறமையாளர்களே. ஆனால் ஆண் நடிகர்களுடன் போட்டியிட்டு அவர்களை
ஓரங்கட்டும் ஆளுமை அவர்களுக்கு இருந்ததில்லை. இதுவே ஸ்ரீதேவியின் தனித்தன்மை. ஒருவிதத்தில் இந்திய சினிமாவின் ஜெயலலிதா என அவரை அழைக்கலாம். படக்கருவி முன் நின்றதும் தன்னிச்சையாக அவர் நடிக்க துவங்கி
விடுவார் என்கிறார் அவரை இயக்கியவர்கள். வேறு எந்த நடிகையையும் விட தயக்கமற்ற தன்னம்பிக்கை மிக்க நடிகையாக அவர் இருந்தார். இவ்விசயத்தில் அவரது திரை ஆதிக்கம் பானுமதியுடன் ஒப்பிடத்தக்கது.
300க்கும் மேற்பட்ட படங்கள். ஸ்ரீதேவி தோன்றினால் போதும் படம் ஓடும் எனும் உத்திரவாதம்
தரும் அளவுக்கு நீண்ட காலம் பாலிவுட்டில் கோலோச்சியவர். 2013இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்.
ஸ்ரீதேவியின் அப்பா தமிழர்; அம்மா ஆந்திராவை சேர்ந்தவர். நான்கு வயதில் துவங்கி தன் மரணம் வரை நடித்துக் கொண்டே இருந்த
அவருக்கு சினிமா கிட்டத்தட்ட சுவாசிப்பதைப் போன்றது.
தொண்ணூறுகளில் மிக அதிகமாய் ஊதியம் பெற்ற நடிகையாக
இருந்தார். 2013இல் சி.என்.என் ஐ.பி.என் நட்ததிய தேசிய
கருத்துக்கணிப்பில் கடந்த நூறு வருடங்களில் இந்தியாவில் தோன்றிய ஆகச்சிறந்த நடிகை எனும்
விருதைப் பெற்றார்.
1997இல் போனி கபூரை மணந்த பின் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற
அவர் 2004இல் திரும்பினார். பெப்ரவரி 24, 2018இல் துபாயில்
ஒரு உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது மாரடைப்பில் மரணமடைந்தார்.
குழந்தைப் பெண்: பேபி ஸ்ரீதேவியில் இருந்து விஜி வரை
இயக்குநர் ஷேகர் கபூர் ஒரு முறை ஸ்ரீதேவியை திரையில்
ஜொலிக்கும் ஒரு குழந்தைப்பெண் என வர்ணித்தார். ஸ்ரீதேவி ஏன் இந்திய ரசிகர்களின் மனக்`கவர் நாயகியாக இரு பத்தாண்டுகள் திகழ்ந்தார் எனும் கேள்விக்கு
உடனடி பதில் தரும் அவதானம் இது. ஸ்ரீதேவி கச்சிதமான
ஒரு அழகி அல்ல. மாதுரி தீக்ஷித்தோ ஐஷ்வர்யா ராயோ அவரை விட சீரான பெண்மை நளினமும் கொண்டவர்கள். ஆனால் ஸ்ரீதேவியிடம் வேறொரு தனித்துவம் இருந்தது: ஒரே சமயம் பெண்மையின் கவர்ச்சியும் அதற்கு பொருத்தமற்ற குழந்தைத்தனமான
முகபாவனைகள், உடலசைவுகள் மற்றும் குரல் அவரிடம் இருந்தன. மனதை கொள்ளை கொள்ளும் இரண்டு எதிர் குணங்களின் ஒரு அற்புதமான
கலவையாக அவர் அமைந்தார். ”மூன்றாம் பிறையின்” விஜியை ஸ்ரீதேவியை விட சிறப்பால் வேறு யாரால் நடித்திருக்க
இயலும்? ஸ்ரீதேவிக்கு அப்பாத்திரத்தின் அடிப்படையான இயல்பு
மிக சுலபமாக கைவந்ததற்கு அதுவே அவரது ஆளுமையின் அடிப்படை என்பதும் ஒரு காரணமா?
ஒரு குழந்தையின் நினைவுகள் மட்டுமே கொண்ட வளர்ந்த
பெண்ணாக மாறும் விஜி பெண்மையின் பூரணத்துவமும் குழந்தைமையின் விளையாட்டுத்தனமும் களங்கமின்மையும்
அபூர்வமாய் இணையும் புள்ளியாக இருக்கிறாள். இதே பாத்திரத்தை தான் வெவ்வேறு வகைகளால் ஸ்ரீதேவி தன் ஒவ்வொரு
அழகு சொட்டும் கதாபாத்திரங்களிலும் இந்தியிலும் தமிழிலும் நிகழ்த்தினார் எனலாம். ஸ்ரீதேவிக்கு இது மிக இயல்பாக வந்தது – பெண்மையின் சீண்டும் கவர்ச்சி ஒரு புறமும், அதே உடலில் தொடர்ந்து ஒருவித குழந்தைத்தனத்தையும் அவர் அழகாய்
இடறல் இன்றி தக்க வைத்தார். இதுவே ஆண்களை
பெருமளவில் ஈர்க்க காரணமானது எனலாமா? ஆம் எனில் ஏன், எப்படி?
உளவியலாளர் டெஸ்மண்ட் மோரிஸ் உலகம் முழுக்க ஆண்களிடம்
பெண்களை ஈர்க்க செய்யும் அம்சங்கள் எவை என ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருகிறார்: வளர்ந்தும் தம்மை குழந்தையாக காட்டும் பெண்களே ஆண்களை அதிகமாக
தூண்டுகிறார்கள். அவர்கள் பாதுகாக்கவும்
அரவணைக்கவும் அவர்கள் தூண்டப்படுகிறார்கள். தம்மை அறியாது பெண்ணுடலிலும் உடல்மொழியிலும் ஒரு குழந்தையின்
பல சுபாவங்கள் வளர்ந்த பின்னும் நிலைக்கின்றன. உலகம் முழுக்க பெண்களின் கூந்தல், சருமம், குரல் மற்றும்
உடலசைவுகள் குழந்தைகளை ஒத்திருப்பதை மோரிஸ் குறிப்பிடுகிறார். எஸ்டிரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரோன் எனும் பெண்மை ஹார்மோன்கள்
அதிகமுள்ள பெண்கள் தம்மை விஜிகளாய் காட்டிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள் என்கிற ஒரு
ஆய்வு. சதா ஒரு முதிர்ச்சியற்ற விளையாட்டுத்தனம், படபடவென எதையாவது விதவிதமாய் வெளிப்படுத்தும் மிகை ஆற்றல், கொஞ்சலான சிரிப்பு என ஸ்ரீதேவித்தனம் கொண்ட பெண்கள் ஆண்கள்
தயங்காமல் மண்டியிடுவார்கள். இந்த எஸ்டுரோஜென்
கனவுப்பெண்ணாக தான் ஏற்ற ஒவ்வொரு நாயகி பாத்திரத்தின் ஊடும் ஸ்ரீதேவி வெளிப்பட்டார். இது ஒரு சாதாரண நிகழ்வல்ல. நூறாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புதம் இது. ஒரு பண்பாட்டு அதிசயமாக மலர்ந்த ஸ்ரீதேவி இவ்வாறாக இந்திய
கூட்டுமனத்தின் ரகசிய கடவுச்சொல்லை கண்டடைந்தார்.
துணைவன் படத்தில் நான்கு வயதில் முருகனாக ஸ்ரீதேவி தன்
நடிப்பு வாழ்வை ஆரம்பித்த ஸ்ரீதேவி தொடர்ந்து கந்தன் கருணை, நம் நாடு, வசந்த மாளிகை என பல
படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். 1971இல் பூம்பாற்றா எனும் மலையாள படத்திற்காக
சிறந்த குழந்தைப் பாத்திர தேசிய விருதைப் பெறுகிறார். பாலசந்தரின் மூன்று
முடிச்சு படத்தில் நாயகி ஆகும் போது ஸ்ரீதேவிக்கு 13 வயது. காயத்ரி மற்றும் பதினாறு வயதினிலே ஆகிய வெற்றிப்
படங்களில் ரஜினி மற்றும் கமலுக்கு நாயகி ஆகும் போது அவருக்கு வயது 14. அக்காலத்தில் இது வழமை என்றாலும் ஸ்ரீதேவியின் பதின் தோற்றம்
அப்போதில் இருந்தே குழந்தைமைக்கும் பெண்மைக்கும் நடுவில் உறைந்து போன ஒன்றாக இருந்தது. அவருக்கு கிடைத்த பாத்திரங்களும் அவ்வாறே அமைந்தன. வளர்ந்து முதிர்ந்த பின்னரும் ஸ்ரீதேவி மனதளவில் தன்னுள்ளும்
ரசிகர், ரசிகைகளின் மனதிலும் மலர்ந்தும் மலராத பாதி மலராகவே
நீடித்தார்.
எழுபதுகலில் சூடா மலராக துவங்கி ரெண்டாயிரத்தில்
ஒரு முதிர்கன்னியான பின்னரும் பார்வையாளர்களின் இதயத்துடிப்பை அவர் தொடர்ந்து எகிற
விட்டதன் ரகசியம் ஒரு குழந்தையாகவும் பெண்ணாகவும் ஓருடலில் நீடிக்க முடிந்தது தானா?
பாலு மகேந்திராவுக்கு முன்னரே, ”பதினாறு வயதினிலே” படத்தில் மயிலாகத் தோன்றி விஜியை முதலில் நமக்கு திரை அகற்றிக்
காட்டியவர் ஸ்ரீதேவி அல்லவா? ”பதினாறு வயதினிலே” விஜி குழந்தைப் பெண்ணாக இருந்து டாக்டரிடம் தன் பெண் மனதைக்
கண்டடைந்து, அந்த கன்னிமையை இழந்து, ஒரு முழுப்பெண்ணாக மலர்ந்து கமலிடம் தன்னை ஒப்புக் கொடுக்க
முடிவெடுத்து அதிலும் தோற்கிறார். “மூன்றாம் பிறையில்” முழுப்பெண்ணில் இருந்து குழந்தைப்பெண்ணாக பின்னால் செல்கிறார். பெண்ணாக தன்னை மீட்டெடுக்கும் இடத்தில் அவர் மீண்டும் கமலை
கைவிடுகிறார். இந்திய ரசிகர்கள் எழுபதுகளில் இருந்தே இந்த கமலைப்
போன்றல்லவா இருந்தார்கள்? இந்த இரண்டு எதிர்நிலைகளிலும்
அவர்கள் ஸ்ரீதேவியை தேடித் தேடி தோற்கவில்லையா? குரங்காக நடித்து தம்மை நிரூபிக்க முயன்று பரிதவிக்கவில்லையா?
பெண் சாப்ளின்
நட்சத்திரங்களை எண்ணுவதை விட சிரமமான காரியம் எது தெரியுமா? ஸ்ரீதேவி நடித்த சில பாடல்களில் அவரது மாறும் முகபாவனைகளை
எண்ணுவது. குறிப்பாக அந்த “ஹவா ஹவாய்” இந்திப் பாடல். சட்சட்டென மாறும்
அந்த வேகம், ஒரு சின்ன காட்சிக்குள் நூறு சிறு நுணுக்கங்களை
காட்டும் லாவகம், சற்றும் தயங்காத
நடிப்பின் சரளத்தன்மை, எந்த வித உணர்ச்சிக்கும்
தன்னுடலை ஒப்புக் கொடுக்கும் அர்ப்பணிப்பு இவையெல்லாம் ஸ்ரீதேவியை இரு பெரும் நடிகர்களுடன்
நம்மை ஒப்பிடத் தூண்டுகிறது: சார்லி சாப்ளின்
மற்றும் கமல்.
சாப்ளினை ஸ்ரீதேவியும் கமலும் போலச் செய்திருக்கிறார்கள். இக்காட்சிகளை கண்டோமானால் இருவருக்குமான வித்தியாசமும் ஒற்றுமையும்
புலப்படும்.
கமலின் ”சாப்ளின் செல்லப்பா” (புன்னகை மன்னன்) உங்களுக்கு நினைவிருக்கும். கண்ணசைவில், முகபாவனைகளில், பாதங்களை வெளிப்புறமாய்
திருப்பி நடப்பதில், மின்னல் சைகைகளில்
என அங்குலம் அங்குலமாய் கமல் அதில் சாப்ளினை போல செய்திருப்பார். அபாரமான நடிப்பு அது. “மிஸ்டர் இந்தியா” இந்திப் படத்தில் ஸ்ரீதேவி இதே போல் சாப்ளின் வேடத்தில் ஒரு
சூதாட்ட கிளப்புக்கு செல்வார். வெகுபிரசித்தமான்
நகைச்சுவை காட்சி அது. இதில் ஸ்ரீதேவி
கமலைப் போல சாப்ளினை போலச் செய்ய மாட்டார். தனக்கு வெகுஇயல்பாக வரும் குழந்தைத்தனமான வெகுளியான சுபாவத்தை
சாப்ளினின் சேஷ்டைகளுடன் சேர்த்து வெளிப்படுத்தி இருப்பார். எந்த பாத்திரத்திலும் அவர் தன்னை இழப்பதில்லை. அவர் ஜெயலலிதாவாக ஒருவேளை நடித்திருந்தாலும் அதை ஒரு ஸ்ரீதேவித்தனமான
ஜெயல்லிதாவாகவே வெளிப்படுத்தி இருப்பார். இவ்விசயத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு பாணி மோகன்லால், அமிதாப் பச்சன், நஸ்ருதீன் ஷா, விஜய் சேதுபதி ஆகியோருடையது. கமல், சூர்யா, சிவாஜி ஆகியோர்
பிரக்ஞைபூர்வமாய் தம்மை இன்னொருவராய் மாற்றும் நடிப்பு பாணியை சேர்ந்தவர்கள்.
இந்த சாப்ளின் காட்சியை பார்க்கையில் ஸ்ரீதேவிக்கும் கமலுக்குமான
ஒரு முக்கிய ஒற்றுமை தனித்து தெரியும். ஒரு காட்சியில் இருபதுக்கு மேற்பட்டோர் வந்தாலும் ஸ்ரீதேவி தனி ஒருவராக அத்தனை
பேரையும் ஓரம் கட்டி விடுவார். பார்வையாளர்களின்
கவனம் முழுக்க அவர் வசமே இருக்கும். அவ்வளவு துடிப்பாக, முகபாவத்தில், உடல்மொழியில் தொடர்ந்து புதுப்புது நுணுக்கங்களை காட்டியபடி இருப்பார். கமல் மௌனமாக நடிக்க வேண்டிய காட்சியில் கூட எப்படியாவது பார்வையாளனை
தன் வசம் கட்டிப் போட்டு விடுவார்.
ஸ்ரீதேவியைப்
போன்ற திறமையும் அழகும் கொண்ட மற்றொரு நடிகை இனிமேலும் தோன்றலாம். ஆனால் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனும்
நம் கற்பனையை அவரளவுக்கு தூண்டி ஒரு பெரும் ஜுவாலையாய் வளர விடும் நடிகை இனி வர வாய்ப்பே
இல்லை! ஸ்ரீதேவியுடன் கவர்ச்சியும் களங்கமின்மையும் ஒரு சேர இணைந்த
ஒரு பெண் பிம்பமும் இந்திய மனதில் இருந்து மறைந்து விட்டது.