“ரசம்
களன்ற
கண்ணாடி
தெளிவாக
குயில்
ஓசை மட்டும்”
·
பாஷோவின் தவளைக்
கவிதையை நினைவுபடுத்தும் ஹம்ஸித்தின் ஹைக்கூ இது.
ரசம் நீங்கின, பிம்பங்களை தெளிவுற காட்டாத நிலைக்கண்ணாடியில்
ஓசையின் பிம்பம் மட்டும் தெரிகிறது. குயிலின் ஓசையை கேட்டு மயங்கி
மரக்கிளைகளின் இருண்மைக்குள் எவ்வளவு முறை அக்குரலின் சொந்தக்காரியை, அந்த மாய வித்தைக்காரியை தேடியிருக்கிறோம்? அடர்ந்த இருளின்
மாந்திரிக தொண்டையில் இருந்து அக்குரல் கசிந்து வருகிறது என நான் குழந்தையாய் இருக்கையில்
நம்பி இருக்கிறேன். ஆக, ரசம் அழிந்த கண்ணாடியின்
தெளிவற்ற உருவங்களில் இருந்து சட்டென குயிலின் பாடல் ஒலிப்பது ஒரு சிலிர்ப்பூட்டும்
அனுபவமாய் இருக்கிறது. அது அப்படித்தான் இருக்க முடியும் எனத்
தோன்றுகிறது. ஜம்ஸித்தின் சிறந்த ஹைக்கூ (நான் வாசித்தவரையில்) இது தான்.
“கோடை அந்தி
மறைகிறது
ஒரு குழந்தை”
·
அந்தி என்பது ஒரு
நாளின் முடிவுக்கு முன்பான தருணம், திரை விழும் முன்பான மேடைக்காட்சி, கதவு மூடப்படும் முன்பான
தலையசைப்பு, கைகுலுக்கல், வழியனுப்பும்
உபசரிப்பு, மறக்கப்படுவதற்கு முன்பான புன்னகை. குழந்தை சென்று மறைவது இங்கு ஒரு முடிவுறாத செயலாக இங்கு உள்ளது. தொடுவானம் நோக்கி நடந்து செல்லும் ஒரு குழந்தை. ஒரு ஆள் – ஒரு வளர்ந்த ஆள் – நடந்து செல்கிறார் என்றால் அது ஒரு வழக்கமான காட்சி. குழந்தை என்பது இங்கு அதிர்ச்சியாகவும், பதற வைப்பதாகவும் உள்ளது. ஆனால் இது வெறும் அதிர்ச்சி அல்ல – அந்த அந்தியே ஒரு குழந்தை தானே. அதுவே தன் மரணத்தை நோக்கித்தான் காலடி எடுத்து வைக்கிறது. விடியல் ஒரு குழந்தைமை என்றால், பகல் வளர்ந்த பருவம் என்றால், அந்தி முதுமையின் குழந்தைப் பருவம் – மீண்டும் குழந்தையாகி தாய் வாசலுக்கு – கருவறை நோக்கி - செல்லும் பருவம். ஆனால் இப்படியான
விளக்கமே ஹைக்கூவுக்கு எதிரானது. நான் இந்த விளக்கத்தை
உதறி விட்டு, இதிலுள்ள முரணை – ஜீரணிக்க முடியாத அந்த முரணை – மட்டும் தொடர்ந்து கண்ணுக்குள் சிறைவைக்க விரும்புவேன்.
சிக்கலானவை:
“பாதையின்
பக்கம்
வளைந்த
மூங்கில்
அமைதியாக
ஒரு
துளை”
·
“அமைதியாக” என்பதில் ஆசிரியரின் கூற்று வெளியாகி விடுகிறது. “பாதையின்
பக்கம் / வளைந்த மூங்கிலில் ஒரு
துளை / அமைதி” என சற்றே திருத்தினால் இது
ஒரு நல்ல ஹைக்கூவாகி விடுகிறது.
“மத்தியான
வெயில்
உரித்த
மாட்டுத் தோல்
புற்களுக்கு நிழல்
குடை”
·
காயும் மாட்டுத்
தோல் புற்களுக்கு நிழற்குடை எனும் போது அது உருவகமாகிறது (”நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா” என்பதில் போல்). ஹைக்கூவில் உருவகம், உவமை ஆகியவை காவலர் கையில் லத்தி போல. இது இந்த ஹைக்கூவின்
பிழை.
“பழைய
விளக்கு
திரியில்
ஒளியேற்றும்
மின்
மினி”
·
இதிலும் சிக்கல்
மின்மினி ஒரு சுடரின் உருவகமாக வருவது தான்.
“தேர்ந்தெடுக்கிறேன்
கைபிடி
உடைந்த
குவளை
பிறை
நிலா”
·
இங்கும் அதே பிரச்சனை
தான். மறைமுகமாய், பிறை நிலவும் கைப்பிடி
உடைந்த குவளையும் ஒப்பிடப்படுகிறது.
“சுழல்
நாற்காலி
திரும்பும்
திசையெல்லாம்
நான்
நான் நான் நான்”
·
நகுலன் பாணியிலான
இக்கவிதையின் “திரும்பும் திசையெல்லாம் நான்”
எனும் சித்திரம் சுவாரஸ்யமானது: ஒருவர் சுழலும்
போது பார்க்கும் பொருட்கள் மயங்கி கிட்டத்தட்ட காணாமல் ஆகின்றன; அப்போது நம் பார்வை (ஆபத்தில் இருக்கும்) நம் சுயத்தை நோக்கி திரும்புகிறது; எங்கெங்கும் நாமே
இருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த “சிந்தனையை
தூண்டும் தன்மை” நவீன கவிதையின் சிறப்பாக இருக்கலாம்.
இதை இன்னும் நீட்டித்தால் ஒரு அற்புதமான நகுலத்தனமான கவிதையாகலாம்;
ஆனால் ஹைக்கூ ஆகாது.
நமது வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ
அல்ல என இப்போது புரிந்திருக்கும். அவற்றில் ஜென் மனநிலை இல்லை. ஜப்பானிய
பௌத்த மரபில் இருந்து வெகுவாக விலகி நிற்பவை அவை. நமது நவீன
கவிதையிலும் முழுக்க அம்மனநிலை நோக்கின எத்தனிப்பு இல்லை என்பதால் தீவிர
இலக்கியத்திலும் ஹைக்கூ அதிகம் படைக்கப்படவில்லை.
ஜம்ஸித்
போன்ற கவிஞர்கள் தொடர்ந்து அசலான ஹைக்கூ எழுதி வருகிறார்கள் என்பது
உற்சாகமூட்டுவது. ஹைக்கூ என்றும் தமிழில் ஒரு ஒற்றையடிப் பாதையாகவே
இருக்கும். அது தீவிர
இலக்கியத்தின் மையப் பரப்புக்குள் இடம்பெறாது விளிம்பில் தான் இருக்கப் போகிறது. ஆனால் நம்
படைப்பாளிகள் ஹைக்கூவை அணுகி அறிந்து அதிலிருந்து இதுவரை உரம் பெற்றிருக்கிறார்கள்; தொடர்ந்தும்
பயனடைவார்கள். அதற்கு
சரியான ஹைக்கூவை அடையாளம் காணத் தெரிந்திருப்பது அவசியம்!