இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது?
1) ஏன் சமகாலத்தில் முன்பு போல பெரும் இலக்கிய சண்டைகள்
நடப்பதில்லை? ஏன் திடீரென எல்லாரும் காந்தியாகி விட்டார்கள்?
முகநூல் தோன்றிய புதிதில் தினமும் ஒரு வம்பு,
அடிதடி என படைப்பாளிகள் பிஸியாக இருந்தார்கள். ஆனால் காலம் போக போக முகநூலின் நோக்கம்
அதுவல்ல என அவர்கள் புரிந்து கொண்டார்கள். எல்லாரும் ஸ்நேகமாய் அரவணைத்துப் போக வேண்டும்
என்பதே ஸுக்கர்பெர்க்கின் கொள்கை. சமூகமாக்கலின் உச்சாணிக் கொம்பில் நாம் இப்போது வாலைத்
தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறோம். சமீபத்தில் எனது நண்பர் ஒரு பெரிய கார்ப்பரேட்
நிறுவனத்தில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து சொன்னார், “மச்சான்
நான் சொன்னால் நீ நம்ப மாட்டே. அங்கே எல்லாரும் அவ்வளவு நட்பா இருக்காங்க.”
நான் கேட்டேன், “எப்படிடா எல்லாருமே நல்லவங்களா
இருக்க முடியும்?”
“அப்படி இல்ல. நம்மை பிடிக்காதவங்க தான் அங்க
பலரும். ஆனால் காட்டிக்க மாட்டாங்க. நம்மை பிடிக்காதவங்க தான் பார்த்ததும் கட்டித்
தழுவி பாராட்டுவாங்க, நலம் விசாரிப்பாங்க.”
“ஏன் அப்படி போலியா இருக்காங்க?”
“அதான் வசதி. பரஸ்பரம் எல்லாரும் உதவியா இருக்கலாம்.
ஈகோ உரசல் இன்றி சேர்ந்து வேலை செய்யலாம்.”
ஜெயமோகன் தன் அமைப்பின் உறுதிமொழியாய் முன்வைப்பது
இந்த கார்ப்பரேட் தத்துவத்திற்கு எவ்வளவு இணக்கமாய் உள்ளது பாருங்கள். நானும் நீங்களும்
இன்று இந்த நிலைப்பாட்டுக்குத் தான் நகர்ந்திருக்கிறோம்: நானும் இப்போதெல்லாம் யாருடனும்
அதிகம் முரண்படுவதில்லை; எல்லாரையும் கனிவாய் அன்பாய் நடத்துகிறேன். கூட்டங்களில் பிடிக்காதவர்களைக்
கண்டால் உடனடியாய் அரவணைத்து நலம் விசாரிக்கிறேன். பேஸ்புக்கில் அவர்களுக்கு லைக் போடுகிறேன்.
விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் இன்று ஒரு கார்ப்பரேட் சித்தாந்தத்துக்கு நகர்ந்து
விட்டோம்!
ஆனால் இந்த சூழலிலும் நாம் தனியர்களாய் தொடர்கிறோம்
என்பதே முக்கியம். அதுவே நம்மை இலக்கிய வாசகர்களாய், எழுத்தாளர்களாய் வைத்திருக்கிறது.
இல்லையென்றால் தமிழகமே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகி விடும்.