எழுத்தாளர்கள் mood பற்றி பேசுவார்கள். நல்ல மூட் அமைய அவர்கள்
தவமிருப்பார்கள். நீங்கள் எழுத்தாளன் என்றால், எழுதுவதற்கான ஊக்கமிக்க அந்த மனநிலையில்
உணர்ச்சிகளால் ததும்பியபடி அதேவேளை உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். ஒரு
காதலைப் பிரிந்த வேதனையில் எழுத முடியாது; ஆனால் காலம் கடந்த பின் அந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கான
ஒரு தவிப்பு உங்களுக்கு ஏற்படுகையில் நீங்கள் அதை சிறப்பாய் எழுத முடியும்.
ஒரு நண்பரிடம் இதைப் பற்றி மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது இமையம் பற்றி குறிப்பு வந்தது. அவரது மகன் நலமற்றிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில்
சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழித்திருக்கிறார். அதை விட முக்கியமாய் அவர் எந்தளவு
உக்கிரமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருப்பார்! அவநம்பிக்கையின் நம்பிக்கையின் எல்லைகளுக்கு
இடையில் எந்தளவு ஊசலாடியபடி தவித்திருப்பார்!
இந்த நிலையிலும் இமையம் எழுத்தில் ஊக்கம் குறையாமல் அதி தீவிரமாய்
எழுதியபடி இருப்பார். அதனால் தான் அவர் மாமனிதர்.
எல்லா மனிதர் வாழ்விலும் இது போன்ற சோகங்கள், வேதனைகள் வரும்
என்றாலும் எழுத்தாளர்களே இவற்றால் மிக அதிகமாய் கலங்கி உளம் குலைந்து போகிறவர்களாய்
இருப்பார்கள்.
இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாய் பெரிய விபத்துகள் இன்றி
நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தாலும் எழுத்து வாழ்வில் தொடர்ந்து உன்னிப்பாய் செயல்பட
முடியாது. மனதுக்குள் ஏதோ ஒரு ஸ்விட்ச் இருக்கிறது; அதை கடவுள் அணைத்து விடுவார். மனம்
இருண்டு விடும். வாழ்க்கை இருண்டு விடும். தத்தளிப்பே அன்றாட வாழ்க்கைப் போராட்டமாக
இருக்கும்.
பிரச்சனைகள் இப்படி புறமிருந்தும் உள்ளுக்குள் இருந்தும்
தோன்றி நம்மை தாக்கி நிலைகுலைய செய்யும். இதன் நடுவில் ஒரு எழுத்தாளன் தன்னை தக்க வைப்பது
தான் ஆகப்பெரிய சவால் என்றார் நண்பர்.
நான் உடன்பட்டேன். ஆனாலும் உண்மையான சவால் இது கூட அல்ல.
போனில் battery saving mode இருப்பது போல படைப்பாளிக்குள்ளும்
ஒன்று உண்டு. அவன் சில ஆண்டுகள் முக்கியமாய் தீவிரமாய் எதையும் எழுதாமல் வெறுமனே படிப்பது,
கூட்டங்களுக்கு சென்று நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, முகநூலில் கிறுக்குவது என மிதமாய்
இருப்பான். சட்டென சிலர் இந்த மிதநிலையில் இருந்து மீண்டு வந்து முக்கியமான நூல்களாய்
– ஒரு அட்டகாசமான கவிதைத் தொகுப்பு, நாவல் என – எழுதுவார்கள். ஆனால் பலரும் இதில் இருந்து
மீள மாட்டார்கள். அதனாலே கணிசமான எழுத்தாளர்களின் படைப்பு வாழ்வில் உச்சம் என ஒரு வருடமோ
சில வருடங்களோ மட்டுமே இருக்கும். முப்பது வருட எழுத்தாள வாழ்வில் நான்கு ஐந்து வருடங்களுக்கு
மேல் வெறியுடன் எதையும் எழுதவோ இயங்கவோ மாட்டார்கள். ஒருவர் நாவல் எழுதுவதை நிறுத்தி
விட்டு வெறும் கூட்டங்களாய் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தால் எனக்கு அவரைக்
கண்டு வருத்தமாய் இருக்கும். இது எழுத்தாளனுக்கு சாபக்கேடான பருவம்.
துயரக் கடலை நீந்தி வருவதை விட இந்த மிதநிலையை தாண்டி வருவதே
ஆகப்பெரிய சவால் என நண்பரிடம் சொன்னேன். நம் முன்னோடிகளில் பிரமிள், கா.ந.சு, ஆத்மாநாம்,
தி.ஜா, லா.ச.ரா, சு.ரா என பலரும் எண்ணெய் வற்றாத சுடர் விளக்காய் நீண்ட காலம் எரிந்திருக்கிறார்கள்.
புயலிலும் மழையிலும் கெடாத சுடராய் நிலைத்திருக்கிறார்கள்.
சரி, அது வேறொரு காலம். இன்றைய காலம் நிரந்தரமின்மையின் காலம்
என்றார் நண்பர். அவர்களை நம்முடன் ஒப்பிட முடியாது என்றார். இல்லை நம் காலத்திலும்
எஸ்.ரா, ஜெயமோகன் ஆகியோர் இப்படியான சாதனையாளர்களே என்றேன்.
கட்டுரைகளைக் கூட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியும்.
ஆனால் சிறுகதை மற்றும் நாவலில் தொடர்ந்து இயங்குவது மிக மிக சிரமம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது
போல மனித மனத்தால் தொடர்ந்து உக்கிரமான நடவடிக்கைகளில் தோய முடியாது. தொடர்ந்து எழுத்தில்
கவனத்தை தக்க வைத்து, நம்மை மீளுருவாக்கம் செய்வதற்கு துணிந்தால் மட்டுமே கால் நூற்றாண்டுக்கு
மேலாக நாவல்கள் எழுத முடியும்.
வெறுமனே எழுத்துப் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. மட்டுப்படாத
அபாரமான மன ஆற்றல், தளராது ஓடும் ஆற்றல் வேண்டும். பெரும் கொந்தளிப்பான சிக்கல்கள்
ஏற்படும் போது முழுக்க தடுமாறி நம் எழுத்தாளுமையை அதில் இழந்து விடாமல் தக்க வைத்துக்
கொள்ளும் திறமை வேண்டும்.
நமது அன்றாட வாழ்க்கை எழுத்துப் பணிக்கு நேர் எதிரான களத்தில்
இயங்கும் ஒன்று. இங்கு செல்லுபடியாகும் உணர்ச்சிகள், கருத்துக்களுக்கு அங்கு சற்றும்
மதிப்பிராது. ஆக, நீங்கள் இரண்டு மனிதர்களாக ஒரே சமயம் இருக்க முடிய வேண்டும். ஒரு
சின்ன அலுவலக வேலைக்காக ஐந்து மணி நேரத்துக்கு மேல் உழைத்து விட்டு, உங்கள் நாவலில்
அதை விட உக்கிரமான ஒரு விசயத்துக்காக - அலுவலக வேலைக்கான மனநிலையில் இருந்து முழுக்க
மாறி - மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்.
நீங்கள் பத்து வருடங்களில் ஐந்து நாவல்கள் எழுதுவது என்பது
வெறுமனே 2500 பக்கங்களை தட்டச்சு செய்வது மட்டும் அல்ல; பக்கம் பக்கமாய் சொற்களை வடிப்பது
மட்டும் அல்ல; கற்பனை செய்வதும் மனதை ஒருமுகப்படுத்தும் மட்டும் அல்ல. பத்து வருடங்களும்
புதுப்புது கனவுகளை வளர்த்து அவற்றினுள் வாழ்வது. கனவுகளை நம்புவது, கனவுகளுக்காய்
எல்லா அன்றாட பிரச்சனைகளையும் கடந்து உற்சாகமாய் உழைப்பது. இது தான் மிக மிக சிரமம்.
அதுவும் இவ்வளவு உழைத்த பின் சமூகம் உங்களை யாரென்றே திரும்பிப்
பார்க்காமல் இருக்கும் போது, தளராமல் அடுத்த கனவொன்றை பின் தொடர்ந்து போக வேண்டும்.
நம் முன்னோடிகளும் ஜெயமோகன் போன்ற சமகால எழுத்தாளுமைகளும்
இதற்காகவே போற்றத் தக்கவர்கள்!