![]() |
| நட்டாஷா (நாவல் சினிமாவாக்கப்பட்ட போது) |
“இதோ பாரேன், அப்பாவின் அன்பு என்பது, அதுவும் கூட பொறாமையில்
தோன்றுவது தான். அவருக்கு என்ன தெரியுமா வருத்தம் – அலோய்ஷாவுடனான என் காதல் துவங்கியதும்,
அது பின்னர் நாங்கள் ஓடிச் செல்வதில் போய் முடிந்ததும் அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது
என்பதே அவரை அதிகாமாய் காயப்படுத்தியது. –
அவர் கண்ணுக்கு அது படவில்லை, அவர் அதை தவற விட்டு விட்டார் என்பதைத் தான் அவரால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை.
என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் கூட அவரால் ஊகிக்க முடியவில்லை என்பது
அவருக்குத் தெரியும், இப்போது எங்கள் காதலின், நான் ஓடிப் போனதன் துரதிஷ்டவசமான விளைவுகளை
அவர் மொத்தமாய் என் நன்றியின்மை மற்றும் என் ரகசியத் தன்மை மீது சுமத்தப் பார்க்கிறார்.
அயோய்ஷாவை நான் காதலிக்க துவங்கிய புதிதில் நான் அவரிடம் செல்லவில்லை - நான் அவரிடம்
சென்று என் இதயத்து எண்ணங்களை எல்லாம் வெளிப்படுத்தவில்லை. மாறாக, நான் உள்ளுக்குள்
எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டேன், நான் அவரைத் தவிர்த்தேன், சத்தியமாய் சொல்கிறேன்
வான்யா, எங்கள் காதலின் விளைவுகளை விட, அப்பாவை அதிகம் காயப்படுத்தியது, அதிகம் வருத்தம்
கொள்ள செய்தது இது தான் – நான் அப்பா, அம்மாவை விட்டு விட்டு என் காதலனிடம் என்னை அர்ப்பணித்தேன்
என்பது. ஒருவேளை, அவர் என்னை ஒரு அப்பாவுக்கே உரித்தான ஆதுரத்துடன் வரவேற்கிறார் என
வைப்போம், இந்த வருத்தத்தின் முட்கள் அவருக்குள் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள், அதற்குள் எரிந்து விழுவது, தவறாய் புரிந்து கொள்வது,
பழி தூற்றுவது என அவர் என்னிடம் நடந்து கொள்வார். மேலும், நிபந்தனைகள் இன்றி அவர் என்னை
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். நான் ஒருவேளை அவரிடம் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உண்மையை
சொல்கிறேன் எனக் கொள்வோம். நான் அவருக்கு எந்தளவுக்கு துரோகம் செய்திருக்கிறேன், நான்
அவர் முன் எப்படியான குற்றமனத்துடன் நிற்கிறேன் என நான் அவரிடம் சொல்கிறேன் எனக் கொள்.
… ஆனாலும், அலோய்ஷாவிடம் நான் பெற்ற இந்த இன்பம் எனக்கு எப்படியான இழப்புகளை எனக்கு
ஏற்படுத்தியது, நான் எந்தளவு துன்பங்களை அனுபவித்தேன், நான் எப்படி என் வலியை பொறுத்து,
எல்லா கஷ்டங்களை எனக்குள் முழுங்கிக் கொண்டேன் என்பதை அவர் கேட்டுக் கொண்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கிறார் எனில் அது என்னை எந்தளவு காயப்படுத்தும் தெரியுமா? நான் இதையெல்லாம் ஒப்புக் கொண்டால் கூட
அவருக்கு போதாது. நான் என் கடந்த காலத்தை முழுக்க கைவிட வேண்டும் என,
நான் அலோய்ஷாவை, அவன் மீதான என் காதலை நான் கைவிட வேண்டுமென, நான் மனம் வருந்த வேண்டுமென
அவர் கோருவார். அசாத்தியமான ஒன்றை அவர் கோருவார் – காலம் பின்னோக்கி திரும்ப வேண்டும்
என, என் கடந்த ஆறு மாதங்களை முழுக்க அழித்து விட வேண்டுமென அவர் கேட்பார். ஆனால்
நான் யாரையும் அப்படி விட்டுக் கொடுக்க மாட்டேன், நான் எதற்காகவும் மனம் வருந்த மாட்டேன்…அது
அப்படித் தான், கடைசியில் அப்படித் தான் எல்லாம் வந்து முடிய வேண்டும் போல … இல்லை
வான்யா என்னால் முடியாது, அதுவும் இப்போது முடியாது. அதற்கான நேரம் இன்னும் கனியவில்லை.”
Humiliated and Insulted, தஸ்தாவஸ்கி, பக்கம் 80-81,
