வணக்கம் அபிலாஷ்,
எப்படி இருக்கீங்க?
நான் தமிழ் வழியில் எனது பள்ளிப் படிப்பை முழுதும் படித்தேன். அதனாலோ என்னவோ நான் சிந்திப்பது முழுதும் தமிழிலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு சிந்தித்து ஆங்கிலத்திற்கு convert செய்து பேசும்போது வார்த்தைகள் கோர்வையாக வருவதில்லை. இது ப்ரெசென்டஷன் செய்யும் போதும், சில விஷயங்களை explain செய்யும்போதும் வார்த்தைகளை தேர்வு செயவதிலும், இலக்கணப் படி பேசுவதிலும் மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. தவறான வார்த்தைகளை நான் உதிர்த்தபிறகு எனக்கே தெரிகிறது அது தவறான வார்த்தை அல்லது இலக்கணப் பிழை உள்ள சொற்றுடர் என்று.
எப்படி இருக்கீங்க?
நான் தமிழ் வழியில் எனது பள்ளிப் படிப்பை முழுதும் படித்தேன். அதனாலோ என்னவோ நான் சிந்திப்பது முழுதும் தமிழிலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு சிந்தித்து ஆங்கிலத்திற்கு convert செய்து பேசும்போது வார்த்தைகள் கோர்வையாக வருவதில்லை. இது ப்ரெசென்டஷன் செய்யும் போதும், சில விஷயங்களை explain செய்யும்போதும் வார்த்தைகளை தேர்வு செயவதிலும், இலக்கணப் படி பேசுவதிலும் மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. தவறான வார்த்தைகளை நான் உதிர்த்தபிறகு எனக்கே தெரிகிறது அது தவறான வார்த்தை அல்லது இலக்கணப் பிழை உள்ள சொற்றுடர் என்று.
இதுவே ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. எழுதும் போது வார்த்தைகளை யோசித்து யோசித்து எழுத , சரி செய்ய நேரம் உள்ளதால் இந்த பிரச்சனை வருவதில்லை.
இந்த பிரச்சனையை எப்படி சரி செய்து கோர்வையாக பேசுவது?
-
ராஜா வெங்கடேஸ் (மெஸஞ்சரில்)
அன்புள்ள ராஜா வெங்கடேஸ்
// என்னவோ
நான் சிந்திப்பது முழுதும் தமிழிலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு
சிந்தித்து ஆங்கிலத்திற்கு convert
செய்து பேசும்போது வார்த்தைகள் கோர்வையாக வருவதில்லை.//
நான் கல்லூரியில் படிக்கையில் சில ஆசிரியர்களை
இதையே ஆங்கிலத்தில் நாம் சரளமாய் பேச முடியாததன் காரணமாய் சொல்லி இருக்கிறார்கள்.
நான் அதைக் கேட்டு விட்டு,
என் மனதில் ஓடும் மொழியை மாற்ற, ஆங்கிலத்தில் யோசிக்க முயன்றிருக்கிறேன். ஆனால் இது
சற்றும் உதவவில்லை.
மனமொழி என்று ஒன்று உள்ளதா?
உண்டு, ஆனால் அது நாம் வெளியே பேசும் மொழியல்ல. மனமொழி வெறும் காட்சிபூர்வ கோர்வையாய்,
முன்னுக்குப் பின் முரணான உணர்வுகளின் சங்கிலியாய், சிலநேரம் இன்ன மொழியென்றே அறுதியிட்டு
கூற முடியாத ஒரு மொழியில் அமைந்திருக்கிறது.
உ.தா., நான் சிலநேரம் என்னுடன்
பேசிக் கொள்வதுண்டு – அப்போது அது ஆங்கிலத்திலோ தமிழிலோ பெரும்பாலும் அமையும். ஆனால்
எனக்குள் ஒரு உரையாடல் நடந்து கொண்டே இருக்கிறது – அது எந்த மொழியில் நடக்கிறது என
நான் சத்தியமாய் அறியேன். மனத்துக்கு நம்முடன் பேச நாம் வெளிப்படையாய் பயன்படுத்தும்
அளவுக்கு கராறான, கச்சிதமான முழுமையான மொழியெல்லாம் தேவையில்லை – நம் மனத்துக்குள்
புழங்கும் ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு உணர்ச்சிகளைத் பிரதிபலிக்கும் கண்ணாடித் துண்டுகள்.
நம் மனத்தில் இச்சொற்கள் லேசாய் தோன்றி விட்டுப் போனாலே ஒரு நீண்ட வாக்கியம் கூறும்
பொருள், மிக சுருக்கமான வகையில், மிக வேகமாய் நமக்கு உணர்த்தப்பட்டு விடும். ஆகவே தான்
நம் வாய் பேசும் மொழியை விட படுவேகமாய் மனம் நம்மிடம் பேசுகிறது. ஆகையால் தான், நாம்
நாளெல்லாம் நமக்குள் பேசினாலும் களைத்துப் போவதில்லை. ஆகையால் தான் திடீரென யாராவது
நம்மை சிந்தனையில் இருந்து எழுப்பி என்ன யோசித்திருந்தாய் எனக் கேட்டால் நம்மால் அப்படியே
அதை சொல்ல இயல்வதில்லை.
“மனதில் இருப்பது தான் வெளியே வருகிறது” என்பதே ஒரு
பிழையான சிந்தனை. மனத்தில் உள்ள பல உணர்வுகளும் எண்ணங்களும் கலந்து கட்டி வரும் போது
நமது மொழி அவற்றை வடிகட்டி புரியும்படியாய் புனைந்து காட்டுகிறது. ஆகையால் தான் பேசும்
போது எந்த சொல்லை தேர்வது எனும் திகைப்பு ஏற்படுகிறது, அடுத்து எந்தவித உணர்ச்சியுடன்
பேசுவது எனும் குழப்பம் வருகிறது – இதன் விளைவாகவே நம்மால் சிந்திக்கும் வேகத்தில்
பேச முடிவதில்லை. சொல்லப் போனால் சிந்திப்பதை அப்படியே பேச முயன்றால் நம்மால் சரிவர
பேசவே முடியாது – ஒரு வாக்கியம் நாம் பேசி முடிக்கும் முன் கேட்டிருப்பவர் வேறு வேலையை
பார்க்க போய் விடுவார்.
மனம் தருவது ஒரு குறிப்பை
மட்டுமே – நாம் அதைக் கொண்டு மணிக்கணிக்காய் பேச்சை வளர்க்கிறோம். நினைப்பது ஒன்று
பேசுவது இன்னொன்று என்பதே எப்போதும் மனித இயல்பு – நாம் இதை உணர்வதில்லை என்பது நம்மை
பைத்தியமாகாமல் காப்பாற்றுகிறது.
மேடையிலும், கூட்டங்களிலும்
சரளமாய் பேசுகிறவர்கள் வாய்மொழியை மனமொழியில் இருந்து தனியாக வைத்துக் கொள்வார்கள்
– ஒரு சொல்லை, ஒரு உணர்ச்சியை, ஒரு சின்ன சம்பவத்தை வைத்துக் கொண்டு அரைமணி நேரம் அலுப்பின்றி
அபாரமாய் பேசுபவர்களை அறிவேன் – திட்டமிடாத நிலையில் பல கருத்துக்கள், தகவல்கள் அவர்களிடம்
இருந்து பிரவாகித்துக் கொண்டிருக்கும், மொழியில் தடங்கலே இராது. இது ஆங்கிலத்திற்கு
மட்டுமல்ல, எல்லா மொழிக்கும் பொருந்தும் ஒன்று. சுருக்கமாய் சொல்வதானால், அதிகம் யோசிக்காமல்
பேசுகிறவனே நல்ல பேச்சாளன்.
நான் வகுப்பில் மிக சிலாகிப்பாய்
சரளமாய் பேசும் பல சமயங்களில் என் மனம் சம்மந்தமில்லாத மற்றொன்றை பக்கவாட்டில் சிந்திப்பதை
உணர்ந்திருக்கிறேன். எனக்கே விசித்திரமாய் இருக்கும் – என்னால் என் இரு பேச்சு ஒழுக்குகளையும்
ஒழுங்குபடுத்த இயலாது; ஒன்றை தடுத்தால் இன்னொன்று நின்று விடும்.
ஆக, யோசிக்கும் மொழிக்கும்
பேச்சின் சரளத்துக்கும் சம்மந்தமில்லை.
பேச்சு சரளம் ஐந்து விசயங்களைப்
பொறுத்தது:
1)
சொல் வளம்
2)
நம்முடன் உரையாடுபவருடன் மனம் ஒன்றி, தன்னை மறந்து
பேசும் பாங்கு (அறிவார்ந்த கவனத்துடன் அன்றி உணர்ச்சிகரமான ஆவேசத்தில் உரையாடுவது).
3)
பேசுவதே
முக்கியம் பேச்சின் சரித்தன்மை அல்ல எனும் நிலைப்பாடு உங்களை தங்குதடையின்றி பேச வைக்கும்.
4)
நினைவுத்திறன் – நினைவுத்திறன் வலுவாய் உள்ளவர்கள்
எம்மொழியையும் வேகமாய் கற்று பயில்வதைக் கண்டிருக்கிறேன்.
5)
தொடர்ந்து யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும்
எனும் ஆவல் – பெண்கள் ஆண்களை விட நன்றாய் ஆங்கிலம் பேசுவதற்கு, ஆங்கிலம் மட்டுமல்லாமல்
எம்மொழியிலும் அவர்கள் ஆட்சி செலுத்துவதற்கு இந்த பேச்சார்வம் ஒரு முக்கிய காரணம்.
ஆண்களில் பலர் மௌனிகள் ஆகையால் ஆங்கில சரளம் பெற சிரமப்படுவார்கள்.
பேச்சு மொழி ஒரு ஆறு – அதில்
குதித்து கைகாலை அடித்தாலே நீந்தக் கற்க முடியும். அச்சமின்றி குதித்து விடுங்கள்.
நீங்கள் குறிப்பிடும் அந்த கோர்வையின்மை சரியாகி
விடும். கூடவே, பேச்சை அடுத்தவருக்கான எதிர்வினையாய் வைத்துக் கொள்ளுங்கள் – நீங்களே
திட்டமிட்டு ஒன்றை சொல்ல முயலாதீர்கள். அப்படி எதிர்வினையாற்றும் போது, உங்கள் உணர்ச்சிநிலைக்கு
மட்டுமே கவனம் செலுத்துங்கள். வாழ்த்துக்கள்!