
ஒரு பெண்ணியவாதி என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்: “நான் Metooவுக்கு ஆதரவாய் டிவிட்டரில் நிறைய பகிர்ந்து கொள்கிறேன். டிவியில் தோன்றி பேசுகிறேன். அதனால் இப்போல்லாம் என் பொதுவான ஆண் நண்பர்கள், இலக்கிய ஆண் நண்பர்கள் என்னைப் பார்த்தாலே தலையை திருப்பிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருக்கு. ஆண்கள் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க? ஏன் இந்த metoo இயக்கத்தை அவங்க ஆதரிக்க மாட்டேங்குறாங்க?”
நான் “அதற்கு நீங்க பயன்படுத்துற மிகையான தொனி, நீங்க ஆண்களை “ஜுராசிக் பார்க்” டினோசர்களாக சித்தரிக்கும் விதமே காரணம்” என்றேன்.
பாலியல் குற்றத்தைப் பொறுத்தமட்டில் metoo பெண்ணியவாதிகள் அதை எங்கும் நிறை, முடிவிலியாக பார்க்கிறார்கள். எப்படி தெய்வத்தை அழிக்க முடியாதோ அதே போல ஆண் செய்யும் பாலியல் குற்றத்தையும் தவிர்க்க முடியாது என்கிறார்கள்.
ஒரு வித்வான் ஒரு தன்னிடம் சங்கீதம் பயிலும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் அதைக் குறிப்பிட்டு கண்டிக்கலாம். பெயர் வெளியிடாமல் கூட கண்டிக்கலாம். அல்லது வழக்குத் தொடுக்கலாம். அல்லது எந்த அடையாளத்தையும் காட்டாமல் புலம்பித் தள்ளலாம். அதெல்லாம் ஒகெ. ஆனால் இப்போராளிகள் இத்தோடு நிற்காமல் “எல்லா வித்வான்களும் இப்படித் தானே” என்பார்கள். எல்லா வித்வான்களும் என்றில்லை இசைத்துறையில் உள்ள எல்லா ஆண்களும் இப்படித் தானே! இசைத்துறையில் உள்ள எல்லா ஆண்களும் என்றில்லை எல்லா துறைகளிலும் உள்ள எல்லா ஆண்களும் இப்படித் தானே! எல்லா துறைகளிலும் உள்ள எல்லா ஆண்களும் இப்படித் தானே என்றில்லை துறைகளுக்குள் இல்லாமல் வெளியே சாலையில், பேருந்து, ரயில்களில் ஆடுமாடு போல திரியும் எல்லா ஆண்களும் இப்படித் தானே! வெளியே சாலையில், பேருந்து, ரயில்களில் தென்படும் எல்லா ஆண்களும் என்றில்லை, வீட்டுக்குள் இருக்கும் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, தாத்தா, பாட்டன், முப்பாட்டன் கூட இப்படித் தானே! வீட்டுக்குள் இருக்கும் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என்றில்லை இதைப் படிக்கும் நீங்களும் இப்படித் தானே! இதைப் படிப்பவர்கள் என்றில்லை கடந்த காலத்தில் இதையெல்லாம் படித்த கோடிக்கணக்கான ஆண்களும், இன்னும் பிறக்காத ஆண்களும் இப்படித் தானே! …
இது அனைத்து ஆண்களையும் உடனே தனிமைப்படுத்துகிறது. அச்சுறுத்துகிறது. போலி குற்றவுணர்வுக்குத் தள்ளுகிறது. தனிமையான ஆண்கள் ஒடுங்குகிறார்கள். அச்சுறுத்தப்பட்ட ஆண்கள் இந்த இயக்கத்தை தூற்றுகிறார்கள். போலி குற்றவுணர்வுக்குள்ளான ஆண்கள் இந்த இயக்கத்தை தெளிவான நோக்கின்றி, அடிப்படை புரிதலின்றி, ஒரு மூட்டமான சமத்துவ நோக்குடன் போலித்தனமாய் ஆதரிக்கிறார்கள். இந்த மூன்றாம் அணியினர் யார் மீது எப்படியான குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும் “ஆமாங்க” என தலையாட்டுகிறார்கள். அவர்கள் மீது வைத்தாலும் கூட அதே போல தலையாட்டுவார்கள். நண்பர்களுடனான அந்தரங்க உரையாடல்களில் இந்த இயக்கத்தின் மீதான மாறுபாட்டை தெரிவித்து விட்டு பொதுவெளியில் metoo என கர்ஜிப்பார்கள். பாத்ரூமுக்குள் போய் அழுது விட்டு, வெளியே வந்து முறுக்கிக் கொண்டு நிற்பார்கள்.
Metooவினரின் இந்த கதையாடல் எனக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு சீனியர் எழுத்தாளருடன் ஏற்பட்ட உரையாடலை நினைவுபடுத்தியது. இந்தியாவில் நடந்து வந்த சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், குஜராத் வன்முறை, பாலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு குறித்து அவரிடம் கொந்தளிப்பாய் பேசிக் கொண்டிருந்தேன். சீனியர் எழுத்தாளர் குறிக்கிட்டு கேட்டார்: “இதுக்கெல்லாம் என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க – இஸ்லாமியரே தானே. அவங்க எங்கே எல்லாம் இருக்காங்களோ அங்கே எல்லாம் வன்முறை நடக்குது. இஸ்லாமியரின் ரத்தத்திலேயே இந்த வன்முறை விருப்பம் இருக்குதுங்க. வரலாற்றைப் பாருங்க. இஸ்லாமியர் வாழ்ந்த தேசங்களில் எல்லாம் தொடர்ந்து ரத்த ஆறு பாய்ந்துள்ளது. அவர்கள் படையெடுத்துப் போன நாடுகளில் எல்லாவற்றையும் அழித்து ஒற்றை இஸ்லாமிய அடையாளத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். அவர்களுக்கு அமைதியின் மொழியே புரியாதுங்க. அவங்களால அமைதியாக வாழவே முடியாது. அவர்களை கட்டுக்குள் வைக்க ஆயுதங்களை பிரயோகிப்பதே ஒரே மார்க்கம். யுத்தத்தை பிற சமூகத்தினர் தொடுக்காவிட்டால் இஸ்லாமியர் ஆயுதமேந்தி வந்து அவர்களை அழித்து விடுவார்கள்.” நான் இதைக் கேட்டு ஸ்தம்பித்து விட்டேன். வேறு விசயங்களில் மிக ஆழமாய் சிந்திக்கும் அவர் ஏன் இஸ்லாமியர் விசயத்தில் இவ்வளவு மனச்சாய்வுடன், அதர்க்கமாய் சிந்திக்கிறார் என வியந்தேன்.
அஜ்மல் கசாப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட போது என்னாயிற்று? எல்லா இஸ்லாமியர்களும் முளை விடாத தீவிரவாதிகளே எனும் கதையாடல் மீடியாவில் பரவலகாகியது. இஸ்லாமியருக்கு வாடகைக்கு வீடு கொடுக்க இந்துக்கள் தயங்கினார்கள். இந்த ரகசிய தீவிரவாதிகள் பிம்பம் ஏ.ஆர், முருகதாசின் “துப்பாக்கி” படத்தில் பிரபலமான ஸ்லீப்பர் செல்கள் எனும் கருத்தமைவு இந்த கதையாடலை இன்னும் வலுவாக்கியது. அமைதியாய், வேலை குடும்பம் என தெரியும் இஸ்லாமியனையும் நம்பாதே, அவன் ஒரு ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என அப்படம் நம் காதில் ஓதியது.
இன்று Metoo போராளிகள் அனைத்து ஆண்களும் rapist ஸ்லீப்பர் செல்கள் என்கிறார்கள். இது ஒரு ஆபத்தான சமூக கட்டமைப்பு.
ஆண்களை இப்படி ஒரு பெட்டிக்குள் அடைப்பதற்கு metoo போராளிகள் சொல்லும் நியாயங்கள் இவை: 1) சமூக கட்டமைப்பு; 2) ஆண் உடல் ரீதியாகவே ஆணாக இருக்கிறான்.
சமூக கட்டமைப்புகள் ஆணை ஆதிக்கம் செலுத்துபவனாக ஆக்கலாம், ஆனால் அவ்வாறு இன்றி கனிவானவனாக, அன்பானவனாக, பரந்து பட்டு சிந்திக்கிறவனாகவும் அவன் இருக்கலாம். அல்லது ஒரே சமயம் பாலியல் ஆதிக்கம் செலுத்துகிறவனாகவும் கனிவானவனாகவும் இருக்கலாம். அல்லது வெறுமனே வேடிக்கை பார்க்கிறவனாக இருக்கலாம். அல்லது … இப்படி ஆண்கள் பல வகைகளில் இருக்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட வகையானவர்களும் ஒரே போல எப்போதும் இருப்பதில்லை. ஆணின் பால்நிலை மற்றும் மனப்பான்மை ஊகிக்க முடியாதபடி குழப்பமானது, சிக்கலானது. நமது தமிழ் சமூகம் ஒரு ஆணை வீரனாக இருக்க எதிர்பார்க்கிறது என்பதாலே எல்லா ஆண்களும் வீரர்களாக மீசையை முறுக்கி நெஞ்சை விரித்துக் கொண்டா அலைகிறார்கள்?
சமூகக் கட்டமைப்பை வைத்து ஆணை மதிப்பிட முடியாது.
ஆணின் உடலும் நீர்மையானதே. “ஆண்மை” தொடர்ந்து மாறுவதாய், சிதைவதாய் உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி – ஜெயலலிதா மோதலை நுணுகிப் பார்த்தால் இதை கவனிக்கலாம். குடும்பங்களிலும் கூட ஆண் நோய்வாய்ப்படும் போது, ஆண்மையை இழக்கும் போது, பணவசதி இன்றி வறிய நிலையில் இருக்கும் போது, ஊனமுறும் போது அவன் உடலால் தீர்மானிக்கப்பட்ட ஆணாக இருப்பதில்லை. பெண்ணின் காலடியில் வாழ்வதை சௌகர்யமாய் உணர்கிற ஆண்கள் பலரை எனக்குத் தெரியும். பெருமாள் முருகன், லஷ்மி சரவண குமார், ஜெ.பி. சாணக்யா, தேவிபாரதி போன்றோரின் சிறுகதைகள் மற்றும் நாவல்களில் இத்தகைய ஆண்கள் தொடர்ந்து தோன்றுகிறார்கள். விமர்சன சொல்லாடலில் இவர்களை demasculinized men என்கிறார்கள். ஆண் எனும் கட்டமைப்பையும் ஆண் எனும் உடலும் ஒன்றல்ல. Metoo போராளிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது ஒரு வன்முறை, ஒரு அறிவுத்தள வக்கிரம், ஒரு அநீதி.
எப்படி இந்துத்துவர்கள் இஸ்லாமிய தீவிரவாதி எனும் சமூகக் கட்டமைப்புக்குள் எல்லா இஸ்லாமியர்களையும் திணிக்கிறார்களோ, எப்படி எல்லா இஸ்லாமியனும் பிறப்பால் தீவிரவாதி எனும் கற்பிக்கிறார்களோ, அதையே Metoo போராளிகள் ஆண்களுக்கும் செய்கிறார்கள் – பிறப்பால் எல்லா ஆண்களும் பலாத்காரம் செய்யும் மனப்பான்மை பெற்றவர்கள்; இந்திய சமூக பால்நிலை கட்டமைப்பை ஒரு ஆண் அப்படியே ஏற்பதால் எல்லா ஆண்களும் இங்கு பெண்களை ஒடுக்கும் இயல்பைக் கொண்டவர்கள் என்கிறார்கள். இது உண்மையல்ல என்பது மட்டுமல்ல இது ஒரு மனித உரிமை மீறலும் ஆகும்.
Metoo போராளிகளையும் இந்துத்துவர்களையும் நான் இங்கு சமப்படுத்தவில்லை. மாறாக, இந்துத்துவர்களின் அதே “பிறப்பால்…” கதையாடலை இவர்களும் கையில் எடுப்பதை சுட்டுகிறேன்.
இந்துத்துவர்களின்
அதே தர்க்கத்தை பெண்ணியவாதிகளும் பயன்படுத்தும் ஒரு காலம் வருமென நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை!