
அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது கமலின் காதல் காட்சி நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்படி ஒரு குழைவு, கெஞ்சல், அணுக்கம், அக்கறை, சட்டென ஆதிக்கம், மூர்க்கம் என அவரது காதல் நடிப்பின் நுணுக்கங்கள் ஏராளம். அத்தனையும் பத்து நொடிக் காதல் காட்சிக்குள் வந்துவிடும் (உதா: வளையோசை கலகலகலவென; பூவாசம் புறப்படும்). “அப்படியே நிஜமாகவே லவ் பண்ற மாதிரி தெரியும்” என்றார் நண்பர் புன்னகைத்தபடி.
இந்த நடிப்பினாலும், அவரது பல காதல் சர்ச்சைகளாலும், உண்மையிலேயே காதல் பண்ணுகிறார் எனும் தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ரஜினியிலிருந்து விஜய் சேதுபதி வரை பலரும் காதல் காட்சிகளில் சிலாகிப்பாய் நடிக்கக் கூடியவர்களே. ஆனால் அந்த நடிப்பில் ஒரு கறார்த்தனம் இருக்கும்; ஒரு வரையறைக்குள் நின்று நடிப்பார்கள். கமலிடம் நாம் பிரக்ஞையற்ற, முழுக்கத் தன்னை அர்ப்பணிக்கும் காதல் நடிப்பைப் பார்க்கிறோம். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல காதலியின் முகத்தைக் கைகளில் மெத்தென ஏந்தி ரசிக்க, மூக்கால் உரச இன்னொருவரால் முடியாது என்றே நினைக்கிறேன். இந்திய சினிமாவில் கமலைப் போல வேறு யாரையும் நான் அப்படிப் பார்த்ததில்லை. “சேர்ந்நிருந்நால் திரு ஓணம்” என்கையில் என்னவொரு பிரியம் வெளிப்படுகிறது! (சுந்நரி நீயும் சுந்நரன் ஞானும்)
கமலுக்குள் இருக்கும் பெண்மை
இதற்கு முக்கியக் காரணமாய் நான் நினைப்பது கமலின் ஆளுமை. அது பெண்களுக்கான ஆளுமை. பெண்களின் தழுதழுப்பு, எதிலும் முழுக்கக் கரைந்து இன்னொன்றாகும் குணம், சட்டென உணர்ச்சிவயப்படுகிற இயல்பு, சீராய் தர்க்கரீதியாய் தன்னை ஒருங்கிணைக்காமல் முன்னுக்குப் பின் முரணாய் சிந்திக்கும் போக்கு, தன்னை அனைவரும் ரசிக்கும்படியாய், தொடர்ந்து கவனிக்கும்படியாய் வைத்துக்கொள்ளும் (attention-seeking) முனைப்பு, தான் எவ்வளவு கொண்டாடப்பட்டாலும் அது போதாது எனும் உணர்வு, கூடுதலாய் கவனிக்கப்படும் பொருட்டு புதிது புதிதாய் எதையாவது செய்யும் தவிப்பு, பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்கும் பாங்கு, சதா பேசிக்கொண்டிருக்கும் விருப்பம் – இவையெல்லாம் கமலிடம் உள்ளன.