
புத்தாண்டு தீர்மானங்களை நிறைவேற்றித் தான் ஆக வேண்டியதில்லை.
ஆனால் அவை நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருவன. ஆகையால் இவ்வாண்டு கீழ்வரும்
தீர்மானங்களை எடுக்கிறேன்.
1) இவ்வருடம் அதிகமும் நான் கடுகுகள் வெடித்துத்
துள்ளும் எண்ணெய்ச் சட்டியை போல இருந்தேன். நாற்பக்கமும் வாளைச் சுழற்றி ஒரே ரத்த சகதி
தான் (முகநூலில் அல்ல நடப்புலகில்). வரும் வருடம் ஒரு நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளினி
போல இனிமையாய் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் போகிறேன். கோபம் வந்தால்
கத்திக்குப் பதில் ஒரு ரோஜா.
2) அம்மா என் குரலுக்காக எவ்வளவு ஏங்குகிறாள் என
புரிந்து கொண்டேன். அவளிடம் தினமும் பேச வேண்டும்.
3) உறவில்
சிகப்பு விளக்கு எரிந்தாலும் அதை பச்சை விளக்கென்றே கருதி அணுக்கமும் நம்பிக்கையையும்
காட்டப் போகிறேன். தயக்கம் கூடவே கூடாது. நானாக முன்வந்து அணுகினால் விலகினவர்கள் நெருங்கி
விடுவார்கள்.
4) ஜீனோ (என்னுடைய டேக்ஷ்ஹண்ட் நாய்) பங்களூருக்கு
வருகிறான். இனி வரும் வருடங்களில் அவனை நன்றாய் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும்
வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். அவன் என் செல்லமானதில் இருந்தே நான் அன்பைக் காட்டுவதில்
காட்டிய ஆர்வத்தை அவனை வெளியே அழைத்து செல்வதில் காட்டியதில்லை. அதை 2019இல் திருத்த
வேண்டும்.
5) எதையாவது ஒரு புதுத் திறனை கற்றுக் கொள்ள வேண்டும்
நான் எதைப் புதிதாய் கற்க நேரும் போதும் அது சட்டென ஒரு ஜன்னலைத் திறந்து ஒரு பூங்காவனக்
காட்சியை, உதயத்தை, உற்சாகமான உலகை எனக்கு காட்டுவதுண்டு; என் எழுத்துக்கு ஒரு எதிர்பாராமையை
அளித்ததுண்டு. என் முன்னுள்ள தேர்வுகள் இவை:
அ) குங்பூ
ஆ) குத்துச்சண்டை
இ) தியானம்
ஈ) யோகா
6) யாரோடும் ஒட்டாமல்
சின்ன வட்டத்துக்குள் இருப்பது என் பலவீனம். இவ்வருடம் சமூகமாக்கலில் கவனம் செலுத்த
விரும்புகிறேன்.
7) என்னால் எல்லா பல விசயங்களில் சரிவிகிதமாய் அக்கறை / கவனம்
செலுத்த முடியாது. எதை எடுத்துக் கொண்டாலும் எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் கவிழ்ந்து
விழுவது போல கவிழ்ந்து விடுவேன். 2018இல் அவ்வாறு தான் மிகுதியாய் என் வகுப்புகளுக்குள்
ஆர்வம் செலுத்தி என்னை இழந்து விட்டேன். அது என் எழுத்து மீதான கவனத்தை சிதைப்பதை உணர்ந்தேன்.
ஆகையால் 2019இல் வகுப்புகளே எட்டப் போ! பாடமெடுப்பேன் – ஆனால் அதில் முழுமனமும் சென்று
விடாதபடி பட்டும்படாமல் இருக்க முயல்வேன். பிரதானமான நேரத்தை (மாணவர்களுக்காக அன்றி)
எழுத்துக்காக ஒதுக்க வேண்டும்.
8) எழுதுவதில் என்னை பறிகொடுப்பதால் வருமானத்தை அதிகம் கவனிப்பதில்லை.
பெங்களூர் வாழ்க்கை கூடுதல் செலவுகளை கோருகிறது. 2018இல் என்னால் உபரி வருமான வழிகளை
அடைய முடியவில்லை. அதற்கான சிரத்தையை நான் எடுக்கவில்லை. 2019இல் அதை செய்வேன். அடுத்த
டிசம்பரில் என்னிடம் போதுமான தொகை சேமிப்பில் இருக்க வேண்டும். முக்கியமான இலக்கு இது.
9) இடைவிட்ட விரதத்தை (intermittent fasting) இரண்டு மாதங்களாய்
பின்பற்றி வருகிறேன். 24 மணிநேரங்கள் தினமும் உண்ணாமல் இருக்க வேண்டும்; இரவுணவு மட்டுமே
அருந்தலாம் என்பதே இடைப்பட்ட விரதம். 2019இல் ஞாயிறு மட்டுமே மூன்று வேளை உணவு. மூன்றாவது
மாதத்தில் இருந்து ஞாயிறும் 24 மணிநேர விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல
மெல்ல ஐந்து நாள் தொடர் விரதம் இருக்க வேண்டும் என்பது இலக்கு. அடுத்த ஆகஸ்டில் இருந்து
தொடர் ஆறுநாள் விரதம் இருக்க வேண்டும் (6 நாட்கள் இரவுணவும் கூடாது) என்பது அடுத்த
கட்ட இலக்கு.
10) எழுதுவதே என் பண்பாட்டுக்கான, மொழிக்கான பங்களிப்பு,
என் சமூகத்துக்கான பணி, ஆகையால் சமூகத்துக்காக கூடுதலாய் நான் என்ன பண்ண வேண்டும் என
யோசித்திருந்தேன். ஆனால் இவ்வருடம் ஒரு தன்னார்வ அமைப்புடன் அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு
சென்று அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்தது ஒரு நல்லனுபவமாக இருந்தது.
2019இல் இத்தகைய பணிகளைத் தொடர வேண்டும். எழுதினால் மட்டும் போதாது. எழுத்தாளன் தன்
எழுத்து மட்டுமே அல்ல!