நான் மாணவர்களுடன் இணைந்து
சமீபத்தில் கொண்டு வந்த ஆங்கில மொழியாக்க தொகுப்பில் தமிழில் இருந்த இடம்பெற்றிருந்த
மூன்று சிறுகதையாளர்களில் சு.ராவும் ஒருவர். விற்பனைக்கு இல்லை, உள்சுற்றுக்கு மட்டுமே
இல்லை என்பதால் நாங்கள் அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. முடிந்த அளவுக்கு படைப்பாளிகளை
அணுகி தகவல் சொன்னோம். தமிழில் பு.பியின், ஜி.நாகராஜனின் பதிப்புரிமை யாரிடம் எனத்
தெரியவில்லை. ஆனால் சு.ராவின் பதிப்புரிமை காலச்சுவடிடம் – கண்ணனிடம் – என அறிவேன்.
அவரை என் பதின்வயதில் இருந்தே அறிவேன். ஆனால் நான் எழுத்தாளனாய் அறிமுகமாகி வளர்ந்து
வந்தது காலச்சுவடின் போட்டிப் பதிப்பகமான உயிர்மையில். இலக்கிய குழுக்களில் காலச்சுவடும்
உயிர்மையும் இன்றும் பேசிக் கொள்ளாத முரண் குழுக்களே. ஆகையால் கண்ணனை எப்படி அணுகி
இதைப் பற்றி சொல்வது, அவர் அனுமதி மறுப்பாரா என்றெல்லாம் குழப்பங்கள், தயக்கம், ஒரு
விள்ளல் பயம்.
மெஸஞ்சரில் அவரிடம் எண் வாங்கி வைத்துக் கொண்டேன்.
அவர் நேர்மறையாய் பேசினால் அவரை வெளியீட்டின் போது சில சொற்கள் (வீடியோ சாட்டில்) பேச
வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் முறையாக முன்னமே தெரிவிக்கவில்லை என அவர் யோசித்தால்
என்ன செய்வது? இப்படியே மனத்துக்குள் வலை பின்னிப் பின்னி தள்ளிப் போட்டு புத்தக வெளியீட்டுக்கு
சில நாட்களுக்கு முன்பு வேறுவழியின்றி அவரை அழைத்தேன். கிடைக்கவில்லை. அவர் விமானத்தில்
இருந்ததாய் பின்னர் குறுஞ்செய்திஅனுப்பினார். நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, ஒரு நாள்
தள்ளிப் போட்டு, அழைத்தேன். அவர் கனிவாக பேசினார். புத்தக வெளியீடு வேளையில் தனக்கு
ஒரு கூட்டம் உள்ளதால் அப்போது பேச இயலாது என்றார். எனக்கு அவர் இதை எடுத்துக் கொண்ட
விதம் சற்று ஆச்சரியமாகவும் நிறைய மகிழ்ச்சியாகவும் இருந்தது. புத்தக வெளியீடு சிறப்பாக
நடந்தது. ஒரு பிரதியை கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பெற்ற பிறகு
கண்ணன் இன்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்:
“I received the
signed copy of Dispossed. Wonderful attempt. Will take a careful look at it
after the book fair. Thank you.”
காலச்சுவடு மொழிபெயர்ப்பை
முறையான வகையில், பதிப்புரிமை பெற்று, சில நேரம் நல்கைகள் பெற்று, செய்து உலக இலக்கிய
படைப்புகளை தொடர்ந்து தமிழில் கொண்டு வரும் ஒரு பதிப்பகம். நாங்கள் செய்வது தமிழில்
எண்பதுகள் வரை நடைபெற்ற மொழியாக்க இயக்கத்தின்
தொடர்ச்சி. (தனிப்பட்ட வகையில், விதிமுறைகள், முறைமைகள் பற்றி அக்கறைப்படாமல் இலக்கிய
பயன்பாட்டுக்காக மட்டுமே செய்து வந்த மொழியாக்கம்). இன்று மொழியாக்கம் கார்ப்பரேட்மயமாகிய
பின் தனிப்பட்ட முறையில் யாரும் பிடித்த படைப்பை மொழியாக்க முடியாத நிலை உள்ளது. ஆனால்
இப்படி சிறிய வட்டங்களில் முறைமையின்றி நிகழும் மொழிபெயர்ப்பு பணிகளும் – முறையான மொழியாக்க
பதிப்புக்கு இணையாக - அத்தியாவசியமானவை. இதை கண்ணன் அறிந்துள்ளார் என்பது எனக்கு உவகையளித்தது.
எனக்கு இதைப் பற்றி யோசிக்கையில் ஜெயமோகன் குழுச்சண்டை
பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. குழு சார்ந்த மோதல்களே தமிழில் சிறந்த இலக்கிய இயக்கங்கள்
தோன்ற, படைப்புகள் எழுதப்பட ஊக்கியாக அமைந்தன என்றார் ஜெ.மோ. குழு என்பது தனிப்பட்ட
பிரிவு அல்ல, அது மாறுபட்ட பார்வையின், நிலைப்பாட்டின் அணிவகுப்பு. லட்சியமும், நிலைப்பாடும்
இரு சாராரை பிரிக்கும் போதும் இலக்கியத்தின், பண்பாட்டின் பாலுள்ள பிடிப்பு இந்த குழுவினருக்கு
பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொள்ள வைக்கிறது. அவர்கள் பிரிந்திருக்கும் போதும் ஒரே
லட்சியத்துக்காகத் தான் பணி செய்கிறார்கள். முரண் என்பது முகக்களிம்பு போன்ற ஒன்று
மட்டுமே. ஆகையால், பெண்ணிய கவிதைகளை கடுமையாய் சாடும் ஜெ.மோ லீனாவை விஷ்ணுபுரம் விழாவில்
பேச வைப்பார். லீனாவும் செல்வார். எனக்கு முந்தைய தலைமுறையினரிடம் இப்படி முரணை தனிப்பட்ட
விரோதமாய் எடுத்துக் கொள்ளாத மாண்பை காண்கிறேன். இது மெச்சத்தக்க ஒன்று. கண்ணனிடமும்
ஜெயமோகனிடமும் இந்த மாண்பை நான் பார்க்கிறேன்.
படைப்பாளி தனிமனிதன் அல்ல.
படைப்புலகில் தனிமனிதர்களே இல்லை. தனிமனித கோபங்களும் பார்வைகளும் வெறும் பாவனைகளே.
அதைக் கடந்து நாம் எப்போதுமே கைகோர்க்கிறோம்.