சிகரெட் எப்போதுமே சற்றே முரட்டுத்தனமான, உதிரியான, கடுமையான, எதிர்-மனநிலையை உணர்த்தும் ஒரு வஸ்து தான். பொன்னிற மதுவை கண்ணாடிக் கோப்பையில் உறிஞ்சும் நங்கையை கூட நளினமானவளாக பார்க்க இயலும். மது ஒரு பெண்ணை கிக்காக காட்டுவதுண்டு. சொல்லப் போனால், நமது கவர்ச்சிக்கன்னிகளான சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றோர் விழி நுனியில் போதையை தேக்கி வைத்தவர்களாகவே தம்மைக் காட்டிக் கொண்டனர். மது போதையை குறிப்புணர்த்தும் அந்த போதையே அவர்களைக் கண்டு பல கோடி ஆண்களை கிளரச் செய்தது. அவர்கள் மதுவை கையில் ஏந்தவில்லை, பார்வையில் ஏந்தினர்.
என் அறிவில், சிகரெட் புகைக்கும் ஹீரோயின்களோ கவர்ச்சிக் கன்னிகளோ இங்கு மிக மிகக் குறைவு. அதற்கு ஒரு காரணம் சிகரெட் போதையை அல்ல மீறலை சுட்டுகிறது என்பது தான். மேலும் சிகரெட் புகைத்தல் அத்துமீறலை, ஆக்கிரமிப்பை, சிதைவை, ஆக்ரோசத்தை, எதிர்ப்புணர்வை சித்தரிக்கிறது. ஆசையைத் தூண்டும் பெண் பிம்பத்தோடு இந்த உணர்வுகள் பொருந்துவதில்லை.
அதாவது, பலரும் கருதுவது போல சிகரெட் ஆண் செருக்கின், ஆதிக்கத்தின் பிம்பம் என்பதால் நம் ஹீரோயின்கள்
திரைவெளியில் புகைக்காமல் இருக்கவில்லை; பொதுவெளியிலும் பெண்கள் இக்காரணத்தால் புகைக்காமல் இருக்கவில்லை. ஏனென்றால் ரஜினி தோன்றி சிகரெட்டை காற்றில் சொடுக்கி விட்டு உதடுகளால் கவ்வி தோரணை காட்டும் வரை நம் நாயகர்கள் சிகரெட் புகையை தன் முத்திரையாக்கவில்லை. ரஜினிக்குப் பின்பு கூட இன்று வரை நமது நாயகர்கள் திரையில் அதிகம் புகைப்பவர்கள் இல்லை. எப்போதெல்லாம் அவர்கள் எதிர்-நாயகர்களாகவோ தேவதாஸ்களாகளோ தோன்றுகிறார்களோ
அப்போதெல்லாம் கையில் மதுக்கோப்பையுடன் சிகரெட்டை ஊதி அதில் மிதக்கிறவர்களாக நடிப்பார்கள். அப்போது மதுக்கோப்பை அவர்களின் மிதப்பையும் சிகரெட் அவர்களது சமூக மீறலையும் குறிப்பதாக அமையும். அதாவது தேவதாஸின் காதல் மிதப்பு குடி, அவனது சமூக கட்டமைப்பு மீறலுக்கு புகை.
ரஜினி வாயில்
சிகரெட்
எண்பதுகளில் ரஜினி ஒரு வில்லனாகவும்
அதிலிருந்து எதிர்-நாயகனாகவும் பரட்டைத் தலையும் அலட்சிய உடல்மொழியுமாக தோன்றிட அவருக்கு சிகரெட் ஒரு முக்கிய குறியீடாக உதவியது. இதன் பின்னர் அவர் மெல்ல மெல்ல குடும்பத்திலும் காதல் உறவிலும் சமூகப் போராட்டங்கள் / புரட்சிகளிலும் ஈடுபடும் புரட்சி-நாயகனாகி அதில் இருந்து சூப்பர் ஸ்டாராக உருமாறினார். அவரது சமூக எதிர்ப்பு வெறும் முரட்டுத்தனமாக
தோன்றி விளையாட்டுத்தனமாகி இறுதியில் சமூக / குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஹீரோயிசமாக உருமாறி வந்தது. இப்போது அவர் சிகரெட்டை கைவிட்டு ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் சூயிங் கம்மை வாயில் இட்டு மெல்கிறவரானார். அதாவது, விளிம்பில் இருந்து, விளிம்புநிலை பண்பாட்டில் இருந்து அவர் மையத்திற்கு நகர்ந்திட சிகரெட்டை கைவிட வேண்டியதானது.
ரஜினியுடன், ரஜினிக்குப் பின் தோன்றின நாயகர்கள் எவரும் அவர் அளவுக்கு கலகத்தனம் கொண்டவர்களாக உருப்பெறவில்லை – அவரளவுக்கு விளிம்புநிலை உடல்மொழியுடன் அனைத்தையும் மறுக்கிற இடத்தில் நின்று அலட்சியமாக ஹீரோயிசம் பண்ணவில்லை. ரஜினியுடன் / அவருக்கு சற்றுப் பின்னால் நடிக்க வந்த விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்றோர் ரஜினியை விட மிகுதியான ஆண்மை வீரியத்தை தம் பாத்திரங்களில் சித்தரித்தவர்கள். ஆனால் அவர்களுக்கு சிகரெட் தேவைப்படவில்லை. தனுஷ் தன் பாத்திரங்களுக்குள் மட்டும் கலகம் பண்ணுகிறவரானார்; சிம்பு காதல் விளையாட்டுகளில்
மட்டும் கலகவாதியாய் காட்டிக் கொண்டார். ஆக, யாருக்குமே சிகரெட் தேவைப்படவில்லை.
தமிழ், மலையாளம், இந்தி எங்குமே நாயகர்கள் தொடர்ந்து (ரஜினி அளவுக்கு) வாயில் சிகரெட் புகைய தோன்றவில்லை என்பது ஒரு விசித்திரமான விசயம் – ஹாலிவுட்டில் காட்சிக்குக் காட்சி புகைய வருகிற நாயகர்களை அறுபதுகளில் இருந்து இன்று வரை பார்க்க முடியும். இந்தியாவின் எந்த தெருமுனை, பெட்டிக்கடைக்குப் போனாலும் புகை மண்டலம் நடுவே கண்கள் மினுங்க நிற்கும் ஆண்களைப் பார்க்கலாம். பொதுவில் நாம் குடிக்கிற ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் புகைக்கிற ஆண்களையே பார்க்கிறோம். “ஒரு தம் போட்டு வரலாமா?” எனும் வசனம் கேட்காத இலக்கிய கூட்டம் உண்டா? ஆனால் “ஒரு பெக் போட்டு வரலாம்” என சந்திப்புகள், கூட்டங்கள் நடுவே கிளம்புகிற ஆண்கள் மிக மிகக் குறைவே. ஆனால், நம் சினிமாவில் குடிக் காட்சிகள், குடி பிம்பங்கள் தோன்றுவதற்கு பத்தில் ஒரு பங்கு கூட புகைக் காட்சிகளும் புகை பிம்பக்களும் வருவதில்லை, மதுப்புட்டியுடன் ஆண்கள் ஆடிப் பாடும் காட்சிகள் வரும் அளவு சிகரெட் புகைத்தபடி அதைப் பற்றி சிலாகித்து ஆண்கள் பாடும் காட்சிகள் வருவதில்லை. உதா., “வேலையில்லா பட்டதாரி” (1) படத்தில் தனுஷ் ரகசியாய் ஒளித்து வைத்து புகைப்பவராக வருகிறார்; ஆனால் வெளிப்படையாய் மொட்டைமாடியில் உழைக்கும் தொழிலாளிகளுடன் சேர்ந்து குடித்து பாடுகிறவராக, சாலையில் நண்பர்களுடன் குடித்தபடி பாடுகிறவராக வருகிறார்.
இது ஒன்றைக் காட்டுகிறது: நம் படங்களில் சிகரெட் என்பது ஆண்மையின் குறியீடு அல்ல.
புகை ஒரு சில நொடிகள் வந்தால் கூட மிகத் தீவிரமாக ஒருவரது விளிம்புநிலைத்தன்மையை, சமூக-எதிர் மனநிலையை காட்டுவதாய் வருகிறது; சிகரெட்டுடன் தோன்றும் ஒருவன் தனது அனைத்து விழுமியங்களுக்கும் வெளியே போய் விடுகிறான். அவன் ஒரு காம்யூத்தன்மையிலான ”அந்நியன்”. ஆனால் இதையே மதுவுக்கு சொல்ல முடியாது. மது எப்போது துயர வெளிப்படலுக்கான சந்தர்ப்பம் மட்டுமே.
சிகரெட் எனும் Self-referential குறியீடு
ஆனால் மசாலா படங்களின் குறியீடுகளை பிரக்ஞைபூர்வமாய் கதைமொழிக்குள் கொண்டு வரும் பின்நவீனத்துவ படங்களில் சிகரெட் ஒரு அதிகார சின்னமாகிறது. கார்த்திக் சுப்புராஜின் “ஜிகிர்தண்டாவில்” நாயகன் கார்த்திக்கும், வில்லன் அசால்ட் சேதுவும் சில காட்சிகளில் மட்டுமே புகைக்கிறார்கள். (இதுவே வணிக படங்களில் என்றால், சிகரெட் புகை துவக்கம் முதல் முடிவு வரை இப்பாத்திரங்களை அடையாளப்படுத்தும் படியாக இருக்கும்.) கார்த்திக் ஒரு இயக்குநராக தன் கேங்ஸ்டர் படத்துக்கு ஆய்வு செய்ய மதுரை வருகிறான். அப்போது அவனது அசட்டுத் துணிச்சலைக் காட்டும் பொருட்டு அவன் நண்பன்
ஊருணியுடன் குடித்தபடி புகைக்கும் காட்சி வருகிறது. அடுத்து, அவன் தான் ஆய்வு செய்ய உத்தேசிக்கும் அசால்ட் சேதுவின் கொடூரங்களை கவனித்து அசரும் இடங்களில் புகைப்பதே இல்லை. அவன் ஒட்டுக்கேட்கும் கருவியைக் கொண்டு சேதுவை கவனித்து பிடிபடுகிறான். அப்போது அவனை அடித்து உதைக்கும் சேது அவன் மீது புகை விடுகிறான். அந்த இடத்தில் (அதுவரை ஒரு காட்சியில் கூட புகைக்காத) சேது தன் அதிகாரத்தை, ஆண் வன்மத்தை, சிகரெட் புகையாக கார்த்திக் மீது செலுத்துகிறான். ஒரு கட்டத்தில் சேதுவுடன் சமரசமாகிய பின் இருவரும் அமர்ந்து குடிக்கிறார்கள். ஆனால் சேது யு-டர்ன் எடுத்து படத்தில் நாயகன் தானே என முடிவெடுக்க கார்த்திக் அதிர்ச்சியில் தளர்கிறான். இப்போது ஒரு பெட்டிக்கடைக்காரர் (பெட்டிக்கடை பழனி) அவனுக்கு புத்திமதி அளிக்கிறார். சேதுவை எதிர்த்து தப்பிக்க முயன்று சாகாமல் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி படமெடுப்பதே சம்யோஜிதம் என அறிவுரைக்கிறார். அப்போது அவர் கார்த்திக்குக்கு சிகரெட் கொடுத்து பற்ற வைக்கவும் செய்கிறார். புகை விட்டபடி கார்த்திக் தலை உயர்த்தும் போது அவன் ஒரு நாயகனாக எழுகிறான் எனும் சேதி நமக்கு கிடைக்கிறது. நாயகனும் வில்லனும் மாறி மாறி வேடிக்கைப் பாத்திரம் ஆகி அதிகார நிலையில் ஏறி இறங்குவதே அப்படத்தின் மையக்கரு – இதை உணர்த்த சிகரெட்டை இயக்குநர் பயன்படுத்தி இருக்கிறார். நேர்வழியில் யோசிக்கும் கார்த்திக் ரௌடித்தனமாய் யோசிக்கத் துவங்குவதன் குறியீடாக இங்கு சிகரெட் வருகிறது. சிகரெட்டின் எதிர்-பண்பாட்டுக் குறியீட்டை, அதன் குறியீட்டு அதிகாரத்தை ஒரு வணிகப் படத்துக்குள்ளாகவே நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் பயன்படுத்தி கௌரவத்தையும் பகடியையும் மாற்றி மாற்றி காட்டுவதே கார்த்திக் சுப்புராஜின் சாமர்த்தியம். இதை நாம் பெரிதும் கவனிக்காதபடி நுட்பமாய் செய்திருக்கிறார். “ஜிகிர்தண்டாவில்” சிகரெட் ஒரு self-referential குறியீடு. அதாவது இதுவரையில் தமிழ் சினிமாவில் சிகரெட் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள விதத்தை நினைவுபடுத்தும்படியான குறியீடு.