தமிழகத்தில் அதிமுக செயல்பாட்டாளர்களிடம் உரையாடும்போது திமுக மீது ஒருவித பொறாமையான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அதிமுககாரர் ஒருவர் திமுககாரரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் குரலிலே மரியாதை தொற்றிக்கொள்ளும். திமுகவினர் அதிமுகவினர் மீது விமர்சனம் கொண்டிருந்தாலும் அவர்களின் கார்ப்பரேட் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, தனிமனிதர்கள் தமது பணியின் பொருட்டே படிநிலையில் ஏறி விரைவில் உச்சாணியை அடையும் சாத்தியம் அதிமுகவில் போல திமுகவில் இல்லாமை பற்றி எல்லாம் கொஞ்சம் புகைச்சலுடனும் மரியாதையுடனும் பேசுவார்கள். ஆகையால் இருவரும் பரஸ்பரம் ஆழமாக வெறுப்பதில்லை.
இது மட்டுமல்ல. நான் பல டிவி விவாத நிகழ்ச்சிகளில் முரண்படும் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் பரஸ்பர நட்புணர்வுடன், பண்புடன் உரையாடுவதைக் கண்டிருக்கிறேன். மிக அபத்தமாய் கிறுக்குத்தனமாய் பேசி என்னை கடுப்பேற்றும் பாஜககாரர்கள்கூட நிகழ்ச்சிக்குப் பிறகு என்னிடம் பேசும்போது இயல்பாய் நியாயமாய் தெரிவார்கள்.
தமிழக அரசியலில் லட்சியம், கொள்கை, கோட்பாடு எல்லாம் உண்டுதான். ஆனால் அவை பெயருக்குத்தான். கிட்டத்தட்ட எல்லாக் கோட்பாடுகளும் அடிப்படையில் தமிழ் தேசியக் கதையாடலை, உணர்வைக் கொண்டிருப்பவை. தமிழ், தமிழர் எனும் புள்ளியில் நமது கொள்கைகள் ஒன்றுபடுகின்றன. பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் விதிவிலக்காக இருந்தாலும் அவர்களும் தத்துவத்தை வைத்து ஆழமான வெறுப்பைப் பிற கட்சிகளிடம் காட்டுவதில்லை.
பொதுவாகத் தமிழகக் கட்சிகளின் தமிழுணர்வு என்பது கம்யூனிஸம் போல அரூபமானது அல்ல. இந்துத்துவா போல கற்பனாதீதமானது அல்ல. இது பௌதீகமானது. தமிழ் பேசுபவன், தமிழை நேசிப்பவன் தமிழன். தமிழ் மண்ணில் வசிப்பவன், அதைத் தனது மண்ணாய் நினைப்பவன் தமிழன். தமிழ் உடலும் தமிழ் நிலமும் பௌதீகமான தமிழ் தேசியக் கட்டமைப்பின் ரூபங்கள். ஆகையால் யாரும் இக்கொள்கையை கற்க வேண்டியதில்லை. தத்துவ நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. இங்கு மக்களின் இதயத்துடன் உரையாடுபவர் எவருமே ‘தமிழ் தேசியவாதி’. தமிழை இதயபூர்வமாய் கொண்டாடுபவர் எவரும் ‘தமிழ் தேசியவாதி’. இந்த தேசிய உணர்வு நமது மண் சார்ந்த இனக்குழுவாதத்திலிருந்து, நமது திணைக் கோட்பாட்டிலிருந்து ஆதி காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஆகையால் தமிழகத்தில் அரசியல் மற்றமை என்பது ஆழமானதல்ல.
கேரளத்தில் இத்தகைய மண் சார்ந்த அரசியல் உணர்வு குறைவு என்பதால் அவர்களின் லட்சியவாதம் அரூபமான சொற்களாலான ஒன்றாய் இருக்கிறது. அது கம்யூனிஸமாக, காங்கிரஸின் மாநிலம் கடந்த தேசியவாதமாக, பாஜகவின் இந்து தேசியமாக உள்ளது (இதே கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அப்படிச் செயல்படுவதில்லை). இந்த வகையான அபௌதீக லட்சியவாதம் மற்றமையைக் கட்டமைப்பது. இது ஆபத்தானது; இதுவே கொலைக் குற்றங்கள், கொடூரங்களை இழைக்க மக்களைத் தூண்டுகிறது.
கேரளத்தின் அரசியல் குற்றங்களுக்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியாதுதான். ஆனால், இது ஒரு பிரதான காரணம்.