பிக்பாஸ் வீட்டுக்குள் காதலை அதில் சம்மந்தப்படாதவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே நாம் விவாதிக்கப்போகும் விசயம். அதற்கு முன் வேலையிடத்திலும் நட்பு வட்டங்களிலும் பொதுவான காதல் ஏற்படுத்தும் அலைகளைப் பற்றி பார்ப்போம்.
நான் கல்லூரியில் படிக்கையில் வகுப்புக்குள் பரஸ்பரம் காதலிக்கக் கூடாது எனும் மறைமுகமான விதி நிலவியது. இன்றும் பல கல்லூரிகளில் அது தொடர்கிறது. காதல் ஜோடிகள் தம் நண்பர்களை தனிமைப்படுத்துகிறார்கள். அதற்கு முன்போ பின்போ சற்றும் சளைக்காமல் காதல் ஜோடிகளை அவர்களின் நண்பர்கள் தனிமைப்படுத்துகிறார்கள். இன்றைய வகுப்புகளில் லெஸ்பியன் ஜோடிகளைக் காண்கிறேன். அவர்களிடமும் பிற பெண்கள் நெருங்கி அதிக நேரம் உரையாடுவதில்லை. இது ஏன்?
வெளிப்படையான காரணம் இது: இருவர் காதலிக்கும் போது அவர்களால் தம் நண்பர்களுக்கு, தோழியருக்கு இடமளிக்க முடிவதில்லை. அவர்களின் நேரம் முழுக்க தனியுடைமை ஆகிறது. சற்று முன்பு வரை நான் இது தான் காரணம் என நினைத்து வந்தேன். இப்போது அது ஒரு எளிய, அதிக முக்கியமற்ற காரணம் எனப்படுகிறது.
காதலில் ஈடுபடுகிறவர்களின் தம் தோழமைகளுடன் நேரம் செலவழித்தாலும் கூட அவர்களால் முன்பைப் போல இருக்க முடிவதில்லை. அப்படி முடிந்தால், அவர்கள் தீவிரமான உக்கிரமான காதலில் இல்லை எனப் பொருள்.
காதல் ஜோடிகளை கவனிக்கையில் அவர்கள் தோள்கள் தாழ்ந்து, கண்கள் கவிழ்ந்து கொஞ்சம் இறகுகளை குவித்து அடை இருக்கும் தாய்ப்பறவை போல அவர்களின் உடல்மொழி ஆகி விடுவதைக் காண்கிறேன். நமது மனம் என்ன நினைக்கிறதோ அதை சித்தரிப்பதே நமது உடலின் மொழி. (அது திரும்பியும் நடப்பதுண்டு.) காதல் ஜோடிகளின் மனம் என்பது தனக்குள் கவிந்ததாய், குவிந்ததாய் இருக்கிறது. அவர்களுக்கு அந்த உலகம் மட்டுமே போதும் - உலகின் அத்தனை அகத்திளைப்புகளும் அர்த்தங்களும் வர்ணங்களும் உணர்ச்சி அலைகளும் அங்கிருந்தே வந்து அங்கேயே முடிவதாய் அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது கேள்விகளும் கோபங்களும் கவலைகளும் அந்த உலகின் முன்வாசலில் துவங்கி பின்வாசலில் முடிந்து போகின்றன. சுருக்கமாய், காதல் ஒரு தீவு. தனித் தீவி. காதல் வயப்படுகிறவர்கள் அங்கு தனியாக மாட்டிக் கொள்கிறார்கள்.
நான் அலுவலக காதல் ஜோடிகளை அதிகம் கண்டதில்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தாம் ஒரு தீவுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அக்கறை கொள்வார்கள். மிக மிக கவனமாய் சகபணியாளர்கள் மத்தியில் உரையாடுவதை, பழகுவதை தவிர்ப்பார்கள்.
தன் மாணவியைக் காதலித்து மணம் புரிந்த பேராசிரியரை எனக்குத் தெரியும். அவர் நான் மாணவனாய் இருக்கையில் எனக்கு பாடம் எடுத்தார். ஐம்பது வருடங்கள் நீடித்த மண உறவு அவர்களுடையது. பின்னர் நான் கல்லூரி ஆசிரியன் ஆன போது ஒரு நண்பர் அமைந்தார். அவரும் பேராசிரியர், அவர் மீது ஒருநாள் மாணவியர் சிலர் புகார் தெரிவித்தார்கள். அவர் இப்பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் நிறைய அரட்டை அடித்திருக்கிறார். வெட்டி அரட்டை தான். இப்பெண்களின் பிரதான புகார் இவர் ஒரு பெண்ணை தனியாக கூடுதலாய் நிஜமாய் காதலிக்கிறார் என்பது. நிர்வாகம் அவரது சீட்டைக் கிழித்தது. அவர் கவலைப்படவில்லை. அப்பெண்ணுடன் வீடெடுத்து வாழத் தொடங்கி விட்டார். இருவருக்கும் இடையே சுமார் பத்து வயது வித்தியாசம் என்பதால் தாம்பத்தியத்தில் அவருக்கு சிக்கல்கள் அதிகம் ஏற்படவில்லை. ஆனால் உலகம் முழுக்க இருக்கிற ஒரு அடிப்படை ஒழுக்கவிதியை அவர் மீறியிருக்கிறார் - தன் மாணவியை காதலிப்பது. இதில் ஒரு பிரதான பிரச்சனை பிற மாணவ மாணவியர் இவ்விருவரால் புறக்கணிப்படுவதாய் உணர்வது; எந்தளவுக்கு என்றால் தாம் அவமதிக்கப்படுகிறோம், தமது இருப்பு நிராகரிக்கப்படுகிறது என எண்ணி கோபம் கொள்வது வரை.