முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: காதல் வரும் வேகம்! (1)



தமிழ்பிக்பாஸ்முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது தோன்றிய காதலுக்கு அதற்கான ஒரு தயாரிப்பு காலம் இருந்தது. நட்பாகி, பழகி புரிந்து இணக்கமாகி ஏதோ ஒரு தருணத்தில் காதல் வயப்படுகிறார்கள். ஏற்கனவே செம க்யூட்டாக நடந்து கொண்டு மக்களின் இதயங்களை வென்றிருந்த ஓவியா இந்த காதல் அத்தியாயத்துடன் தன் புகழின் உச்சிக்கே சென்றார். இந்த பருவத்தில் இந்த அத்தியாயம் ஒரு முழுநீள காதல் படத்தை பார்ப்பது போன்றே அமைந்தது - அதுவும் எண்பதுகளில் “பதினாறு வயதினிலே” போன்ற மிக பிரபலமான படங்களில் வரை அதிகமாய் பேசப்பட்ட தொன்மமான அழகிய காதலனால் கைவிடப்பட்ட கபடமற்ற கன்னிப்பெண் என்பது ஓவியா-ஆரவ் விசயத்தில் மீண்டும் புனையப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஆரவின் காதலின் நிலையாமை, அவர் ஓவியாவுக்கு செய்ததுரோகத்தைபிக்பாஸ் காணொளி போட்டுக் காட்டி அம்பலப்படுத்தினாலும், பார்வையாளர்கள் தரப்பு வேண்டாம் வேண்டாம் என கெஞ்சினாலும் ஓவியா தன் காதலை கைவிட வில்லை; அவர் தொடர்ந்து ஆரவையே தான் காதலிப்பதாய் சொன்னார். இந்தகோவலனைமன்னித்து ஏற்கும் நல்லியல்பு மீண்டும் ஓவியாவுக்கான நற்பெயரை பலமடங்கு வலுப்படுத்தியது. இதை மேலும் நிறுவும் பட்சத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு பயணம் போன கதை ஊடகங்களில் லீக் ஆனது. இன்னொரு சுவாரஸ்யம் ஆரவ்வின் பெயர் ஆரம்பத்தில் சற்றே களங்கப்பட்டாலும் பின்னர் அது அவருக்கே அனுகூலமான அம்சம் ஆனது. ஆரவ் போட்டியின் இறுதி நிலை வரை சென்று வெற்றிபெற இது பெரிதும் உதவியது.

இந்த காதல் தோன்றி வளர்ந்து சிதைத்து சர்ச்சையாகி பின்னர் மீண்டும் உயிர்பெற்ற போக்கைக் காண்கையில் இது புனைவல்ல, ஓரளவுக்கு நிஜமே என ஊர்ஜிதம் பண்ண முடிகிறது. ஆனால் அடுத்தடுத்த தமிழ் மற்றும் மலையாள பிக்பாஸ் பருவங்களில் ஓவியாவின் காதல் அத்தியாயம் பிரதியெடுக்கப்பட்டது; அவ்வாறு பிரதியெடுப்பது போட்டியில் ஜெயிப்பதற்கான ஒரு வியூகம் என கருதப்பட்டது. உதாரணமாய், மலையாள பிக்பாஸின் முதல் பருவத்தில் பெர்ளி-ஶ்ரீனிஷ் இருவரின் காதல். பெர்ளி முதலில் பிக்பாஸ் வீட்டில் நெருங்கியது நாட்டுப்புற பாடகர் சுரேஷை. ஏனென்றால் சுரேஷ் மோகன்லாலுக்கு நெருக்கமானவராக ஆரம்பத்தில் இருந்தே ஒரு சித்திரம் இருந்தது; அவர் அங்கு வாழும் போட்டியாளர்களுக்கும் பிரியமானவராக இருந்தார். ஆக, ஷாபுவுக்கு இணையான ஒரு போட்டியாளர் அவர் என நினைத்து பெர்ளி அவரிடம் நெருங்கி அவரை (தன் அந்தஸ்துக்காக) பயன்படுத்தி கொண்டதாய் ஒருமுறை பிற போட்டியாளர்கள் குற்றம் சாட்டி பெர்ளியை கடுமையாய் விமர்சித்தனர். அதற்கு ஒரு முக்கிய காரணம் பெர்ளி இந்நேரம் சுரேஷிடம் இருந்து விலகி ஶ்ரீனிஷ் எனும் இளம்நடிகரிடம் நெருங்கத் தொடங்கி இருந்தார் என்பதும், இதனால் ஏற்கனவே பெர்ளியிடம் காதல் வயப்பட்டிருந்த சுரேஷ் மனம் உடைந்து நிலைமயங்கி நடந்து கொள்ள தொடங்கினார் என்பதும்
மொத்த வீடும் இப்போது சுரேஷுக்கு ஆதரவாகவும் பெர்ளிக்கு எதிராகவும் திரண்டது; இது தமிழ் பிக்பாஸ் முதல் பருவத்தில் ஓவியாவுக்கும் ஆரவுக்கும் இடையில் நிகழ்ந்த ஊடலை பிற போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதத்திற்கு நேர் எதிரானது (தமிழில் ஆண் வில்லனாகிறன், மலையாளத்தில் பெண் வில்லியாகிறாள்.) ஆனால் இது எப்படியாகினும் சம்மந்தப்பட்டவர்கள் பலன் பெற்றார்கள். சுரேஷ் இறுதி கட்டம் வரையிலும் ஸ்ரீனிஷ் அதற்கு சற்றும் முன்பு வரையிலும் போட்டியில் தக்க வைப்பட்டார்கள். காதலின் பொறிகள் பறக்காதிருந்தால் இவ்வளவு டிராமாவும் இருந்திருக்காது; ஶ்ரீனிஷ் மற்றும் பெர்ளி நிச்சயமாய் இறுதி வரை தொடர்ந்திருக்க மாட்டார்கள். ஓவியா-ஆரவைப் போன்றே பெர்ளி-ஶ்ரீனிஷ் ஜோடியும் போட்டிக்குப் பின்னரும் உறவைத் தொடர்ந்தனர்; அடுத்த கட்டத்துக்கே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தான் ஹிமா-சாபு காதல் நாடகம் அரங்கேறியது.

வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட ஹிமா நடுவில் திரும்ப வருகிறார். அப்போது அவர் பயன்படுத்திய முக்கிய வியூகம் காதல். அவர் தனக்கு சாபு மீது ஈர்ப்பு உண்டென தன் தோழி அர்ச்சனாவிடம் சொல்கிறார். அடுத்து சாபுவிடம் இணக்கமாய் ஒட்டி உறவாட முயல்கிறார். இது செயற்கையாக பட, சாபு விலகி செல்கிறார். கூடவே, இது ஒரு வியூகம் என சாபுவிடம் அர்ச்சனா போட்டு கொடுக்கிறார். இது பெரிய பிரச்சனையாகிறது - தான் உண்மையானவள், நாணயமானவள் என ஹிமா மீண்டும் மீண்டும் நிரூபிக்க முயல்கிறார். அவர் மீது எழுந்த பிரதான கேள்வி ஏன் ஆரம்ப வாரங்களில் காதல் தோன்றாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேறி திரும்ப வந்த பின் உடனே காதல் வருகிறது என்பது. இதைப் பற்றி தன் தோழியிடம் பேசும் ஹிமா தனது சகோதரன் மற்றும் ஆண் நண்பர்களிடம் தான் தனக்கு சாபு மீது காதல் உள்ளதை விவாதித்ததாகவும் அவர்களது அனுமதியுடனே தான் இப்போது காதலை வீட்டுக்குள் வைத்து வெளிப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் இப்படி குடும்பத்துடன் யாருடன் காதலை விவாதிக்க மாட்டார்கள், இது ஒரு சதியாலோசனை, அதுவும் தமிழில் ஓவியா பண்ணியதை போல செய்து ஹீமா இப்படி காய் நகர்த்துகிறார் என சாபு கூறிட, ஹிமா கண்ணீர் உகுத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார். இப்படி, ஹிமாவின் காதல் வியூகம் தோல்வி உற்றது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...