கவிஞர் இசை உயிர்மை இதழில் எழுதி வரும் காமத்துப்பால் உரை பத்தி அருமையான ஒரு முயற்சி. ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் வரும் குறள்களை எளிமையாய சுருக்கமாய் விளக்கி விட்டு அதை ஒட்டி தனது பகடியான கவித்துவமான பார்வையையும் அதை தருகிறார். ஒரு புத்தகமாய் வருகையில் இன்னும் சுவாராஸ்யமாய் இருக்கும் என நினைக்கிறேன். இம்மாத பத்தியில் அவர் குறிப்பிடும் ஒரு குறள் என் நெஞ்சை வெகுவாய் கவர்ந்து விட்டது. அதன் நுணுக்கம் மற்றும் ஓசை அழகு காரணமாய். வெகுநேரமாய் அதையே மீளமீள மனதுக்குள் சொல்லிக் கொண்டும் யோசித்தவாறும் இருந்தேன். இசை தரும் விளக்கத்துடன் பின்னர் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் தந்த விளக்கங்களையும் படித்தேன். எனக்கு அப்போது மற்றொரு புரிதல் ஏற்பட்டது. நமது தமிழ் மனத்துக்கும் இயற்கைக்குமான தனித்துவமான உறவை இக்கவிதை தொட்டுப் போகிறது. அதையே இங்கு பேசப் போகிறேன்.
“மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று” (1112)
இதன் அதிகாரம் “நலம் புனைந்துரைத்தல்”. அதாவது காதலியின் அழகை, சிறப்பை பாராட்டி பாடுவது. இதில், காதலன் தன் நேசத்துக்குரியவளின் கண்களைப் பற்றி பாடுகிறான். மலரைப் போன்று விரிந்து ஒளிரும் கண்கள்; பல வர்ணங்கள் துள்ளும் கண்கள். இக்கண்களில் லயித்துப் போகும் அவனுக்கு தான் வெளியே பார்க்கும் செடிகளில் தோன்றும் மலர்கள் கூட மலரல்ல கண்களோ என மயக்கம் ஏற்படுகிறது.
இதைப் படிக்க ஒரு செடியில் பெண்ணின் கண்கள் விழித்து விழித்துப் பார்க்கும் ஒரு காட்சி, ஒரு சர்ரியலான காட்சி, என் முன் விரிந்தது. அதன் விசித்திரம், தனித்துவம்... ஏன் அவன் இந்த மிகையான கற்பனைக்கு செல்ல வேண்டும்? அதற்கு ஒரு சாவியாக இரண்டாவது வரியின் முதல் சொல் அமைகிறது: “பலர்காணும்”.
தன் காதலியின் கண்கள் தான் ரசிக்க மட்டுமே என அவன் மீயுடைமை உணர்வுடன் (possessiveness) அவன் சிந்திப்பதில்லை. மாறாக, பலர் காணும் அந்த பார்வை வழி (பலரது இச்சையான பார்வை மட்டுமல்ல) தானும் அவளைக் காண வேண்டும் என எண்ணுகிறான். ஆகையால், அவளது கண்கள் பூக்களாகவும் உள்ளது, அவை இப்பிரபஞ்சம் எங்கும் விரிந்துள்ளன, உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவளது பார்வை தன்னை நோக்கி திரும்பி இருப்பதாய் அவன் நினைக்கிறான். இந்த பார்வை மாற்றத்துக்கு காரணம் அவன் அக்கண்களே பூக்கள், பூக்களே கண்கள் என நம்பத் தொடங்குவது; அப்படி நினைப்பதற்கான நோக்கம் பூக்கள் என்பவை உலகோர் அனைவரும் கண்டு ரசிப்பவை என்பது. தன் காதலியை உலகோர் ரசிப்பதை ஏற்க அவனால் முடியாது. ஆனால் உலகோர் ரசிக்கும் ஒன்றினோடு அவளது உடலின் ரசனைக்குரிய ஒரு பாகத்தை நீட்டிபது அவனால் ஏற்கக் கூடிய ஒன்று. அதையே அவன் தன்னை அறியாமல் இங்கு செய்கிறான் எனலாம்.
“காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே” பாடலில் எனக்கு பிடித்தமான காட்சித் துணுக்கு மதுபாலா சாய்ந்து புல்வெளியை வருடியபடி செல்வது. அப்புல்வெளி அனைவருக்குமானது, அனைவரும் வருடி ரசித்துப் போவது, அதை காதலின் மிதப்பில் அவள் வருடித் தழுவும் போது தன் காதலனை உலகிடத்து வைக்கிறாள். “என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார், என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய் கேட்டு பார், உன் பேர் சொல்லுமே” எனும் “ஜெண்டில்மேன்” பாடல் வரியும் இதே மனநிலையை வெளிப்படுத்துவதே - காதலியை, காதலனை உலகமாய் கண்டு மனதை விரிய செய்வதற்குப் பதிலாக தன் காதல் மனதை பூக்களாய், ஜன்னல் கம்பிகளாய் இவள் நீட்டித்துக் கொள்கிறாள். இது ஒரு தனித்துவமான தமிழ் மனநிலை. நமது செவ்விலக்கியத்தில் திரும்ப திரும்ப வரும் மனப்போக்கு. தன்னையும் தான் வாழும் வெளியையும் இரண்டாக பார்ப்பது ஒரு நவீன அணுகுமுறை. ஆனால் தமிழ் செவ்வியலில் நிலமும் இயற்கையும் மனித உடலும் மனமும் தனித்த்தனி அல்ல. அவை ஒன்றே தான். அதனால் தான் ஒரு சங்கக்கவிதையில் தலைவி தான் சிறுவயதில் நீரூற்றி வளர்த்த மரத்தை தன் சகோதரியாய் பாவிக்கிறாள்; அம்மரத்தருகே இருந்து காதல் செய்ய கூசுகிறாள்.
மையாத்தி எனும் சொல்லும் அழகானது. அது மயங்குதல் எனும் பொருளில் வருகிறது. ஆனால் இந்த மயக்கம் என்பது எதிர்மறையான பொருள் கொண்டது அல்ல. நவீனப் பொருளில் நாம் புரிந்து கொள்வது போல கிறக்கத்தில் போதையில் இருப்பதல்ல. மாறாக ஒன்றை இன்னொன்றாய் காண்பது, இடம்மாற்றி வைப்பது. உதாரணமாய் “பொருள் மயக்கம்”, “சொல் மயக்கம்” போன்ற பிரயோகங்களை சொல்லலாம். நமது முன்னோர் இந்த மயக்கத்தை ஒரு ஆழமான இருத்தலியல் நிலையாகவே கண்டிருக்க வேண்டும். தன்னை தான் வாழும் நிலத்துடன், நிலத்திலுள்ள உயிர்களுடன், இயற்கையுடன் இடமாற்றி, உலக மாந்தர்களின் பார்வையாய் தன் பார்வையையும் விரித்திடும் ஒரு “யாதும் ஊரே யாவரும் கேளிர்” தத்துவம் நம்மவரிடையே இருந்திருக்க வேண்டும். அதுவே இதைப் போன்ற குறள்களில் வெளிப்படுகிறது. இதன் நீட்சியாகயே மையல் எனும் சொல் வருகிறது. ஒருத்தி மீதான காதலின் வழி ஒருவன் தன்னை பல்வேறு விசயங்களாய், மற்றமையாய் “மாற்றி வைத்து” அறியும் போதே இன்னொருத்தி மீதான அன்பாய் அது மலர்கிறது; “மையல்” தோன்றுகிறது. காதலை தமிழர்கள் எவ்வளவு அழகாய் ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
மேற்சொன்ன கருத்தோட்டத்துடன் பொருந்தும் மற்றொரு குறளும் இந்த அதிகாரத்தில் வருகிறது:
“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்” (1116)
காதலுக்கு உரியவளின் முகம் நிலவை ஒத்தது. இது இப்போது காதலனை மயங்க வைக்கவில்லை. இயற்கையே இந்த மயக்கத்தால் குழம்புகிறது. நட்சத்திரங்கள் தமக்கு மையமான நிலா எது இவளது முகமா இந்த நிலவா எனப் புரியாமல் கலங்கி திரிகின்றன.