“உங்களது வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவத்தை சொல்லுங்கள், இழப்பை சொல்ல்லுங்கள்” என்பது போன்ற ஒப்பாரி டாஸ்குடன் பிக்பாஸ் மிக மிக செயற்கையாக ஆரம்பித்துள்ளது. இந்த டாஸ்கில் பகிரப்படும் துயரக்கதைகளில் வெளிப்படும் உணர்ச்சிகள் உண்மையாக இருக்கலாம்; அவை நம்மை மிகவும் நெகிழவும் கண்களை நிறைக்கவும் செய்யலாம். ஆனால் இது எவ்வளவு ஆபத்தான பண்பாட்டை உருவாக்குகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ரியாலிட்டி ஷோவின் அடிப்படையான பிரச்சனை அது ரியாலிட்டியும் அல்ல ஷோவும் அல்ல என்பது. அதன் இடைப்பட்ட தன்மையே நம்மை அதை நோக்கி அதிகமாய் ஈர்க்கிறது. உதாரணத்திற்கு, மோகன் வைத்தி ஒரு பூங்காவிலோ திருமண வீட்டிலோ நம்மை சந்தித்து தன் மனைவி இறந்த சம்பவத்தையோ தன் மகனின் ஊனத்தின் அவலத்தையோ தேம்பித் தேம்பி அழுதபடி சொன்னால் அந்த துயரத்தின் தாக்கத்தை நம்மால் தாங்கி கொள்ள முடியாது. இப்போதெல்லாம் யாராவது துயரத்தை நேரடியாய் பேசினாலே அவர்களை தவிர்த்து விடுகிறோம். சட்டென அந்த அழுத்தமான கனத்த உணர்வுநிலையில் இருந்து வேடிக்கை மனநிலைக்கு தாவிட தவிக்கிறோம். நாம் இன்று சினிமாவிலோ இலக்கியத்திலோ மிக கனமான துயரக் கதைகளை படிக்க தயாராக இல்லை. பிரச்சனை துயரத்த்தில் இல்லை, நிஜத்தின் தீவிரத்தில் இருக்கிறது. நம்மால் நிஜமாக தோன்றும் துக்கத்தை இன்று தாள முடிவதில்லை; ஆனால் கட்டமைக்கப்பட்டதாய் தொனிக்கும் துக்கத்தை உடனடியாய் ஏற்றுக் கொள்கிறோம். இந்த மனநிலையைத் தான் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் சுரண்டுகின்றன.
ஆக, இப்படியான டாஸ்குகளைக் கண்டு நாமும் கண்ணீர் வடித்து “பாவம்ல” என உச்சுக் கொட்டும் போது நாம் வாழ்க்கையில் இருந்து, நிஜமான தீவிரமான உணர்ச்சிகளில் இருந்து விலகி, மேலும் மேலும் வடிகட்டி பதப்படுத்தப்பட்ட அனுபவங்களுக்கு மட்டும் எதிர்வினையாற்றுகிறவர்களாக ஆகிறோம். இது தான் பிக்பாஸ் துயரக் காவியங்களில் திளைப்பதன் ஆபத்து.
அடுத்து, லைட்ஸ் ஆன் என கட்டளையிட்டதும் அழுது தேம்ப தேம்புவது நடிப்பா அல்லது நிஜமா? டாஸ்குகள் ஆரம்பிக்கும் முன்னரே சில பங்கேற்பாளர்கள் அழவும் பதறவும் தயாராகி வருவதைக் காண்கிறோம். டாஸ்க் துவங்கியதும் அவர்கள் ஒரு நடிகர்களைப் போல கண்ணீர் விட்டு வசனம் பேசத் துவங்குகிறார்கள். முடிந்து அனைவரும் கைத்தட்டியதும் மகிழ்ச்சியாய் புன்னகைக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் எத்தனை பேரால் இப்படி ஒரு துயர நினைவுக்குள் புகுந்து பயணித்து நொடியில் அதில் இருந்து மீண்டும் சகஜமாக முடியும்? பிக்பாஸில் அனைவராலும் முடிகிறது.
மேலும் துயரத்தை ஒரு நிகழ்த்துதலாக்கும் போது அது கலையும் அல்ல நிஜமும் அல்ல என்றாகிறது. ஒரு நிகழ்த்துதல் கலைஞனாக உங்களுக்கு உங்கள் கலை மீதுள்ள சுதந்திரம் பிக்பாஸில் ஒப்பாரி வைப்பவர்களுக்கு இல்லை. பேஸ்புக்கில் அனுபவக் கதைகளை பகிர்கிறவர்களுக்கு கூட தம்மையே பகடி பண்ணவும் விமர்சனத்தை உட்பொதியவும் சுதந்திரம் உண்டு. ஆனால் பிக்பாஸில் நீங்கள் தவிர்க்க முடியாமல் மரணம், கருக்கலைப்பு, வேலை இழந்தது, வீட்டை விற்றது, கடனில் அவஸ்தைப்பட்டது என ஒரு நெஞ்சைப்பிசையும் அனுபவத்தை கதறக் கதற சொல்லியே ஆக வேண்டும். அது உங்கள் நிலைப்பை பாதிக்கும் நிகழ்த்துதல் ஆகும். ஒவ்வொரு நாள் நீங்கள் பிக்பாஸில் கூடுதலாய் நிலைக்கும் போது லட்சக்கணக்கில் கூடுதலாய் சம்பாதிக்கிறீர்கள். இப்படி பணமும் வெற்றியும் தரும் அழுத்தத்தால் ஒருவர் தன் சுய இழப்பை ஒப்பாரி வைத்து அடுத்தவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது மிகவும் ஆபாசமானது.
இறுதியாக, இப்படி ஒப்பாரி வைப்பவர்கள் நம் நண்பர்கள் அல்ல. சிலரது சோகக் கதைகளை நாம் பேஸ்புக்கிலோ ஒரு பத்திரிகைப் பேட்டியிலோ படிக்கையில் அந்த நபர் மீது நமக்கு அணுக்கமும் பிரியமும் தோன்றுகிறது. அவர்களுடன் நட்பு பாராட்ட அவர்களது கலைப்பயணத்தை தொடர நாம் விரும்புகிறோம். ஆனால் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் நமது நண்பர்கள் ஆக முடியாது. அவர்கள் கலைஞர்களும் அல்ல. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறவர்களும் அல்ல. அவர்களிடம் நமக்கு அணுக்கம் தோன்றும் போதே அவர்கள் நம்மிடம் இருந்த்து வெகுதொலைவுக்கு விலகிச் செல்கிறார்கள். உதாரணமாய், பிக்பாஸில் மிகப்பெரிய புகழை அடைந்த ஓவியா ஏன் ஒரு நடிகையாக இப்போது எந்த இடத்தில் இல்லை? ஏன் அவர் மக்களுடன் அன்றாடம் உரையாடுகிறவராக இல்லை? ஓவியா மீது ஜனங்களுக்கு உருவான ஈர்ப்பு ஒரு பொய்த்தோற்றத்தின் மீதுள்ள ஈர்ப்பே. எத்தனை ஆண்டுகள் வடிவேலு சினிமாவில் இருந்து காணாமல் போனாலும் அவர் மக்கள் மனதிலேயே இருக்கிறார். ஆனால் ரியாலிட்டி ஷோ பிரபலங்களால் சில நிமிடங்கள் கூட அவ்வாறு நிலைக்க முடியாது.
இப்படி எந்த விதத்திலும் நம்முடன் இருக்க இயலாது, எந்த உறவும் ஸ்தாபிக்காத ஒருவரது பேரிழப்புகளை நாம் மனம் கனிந்து கேட்கும் போது அந்த இழப்புணர்வுகள் மட்டும் எப்படி நம்முடன் இருக்கும் சொல்லுங்கள்? இந்த அனுபவப் பகிர்வுகளுக்கும் போர்னோ நடிப்புக்கும் வித்தியாசம் பெரிதில்லை. போர்னோவிலும் செக்ஸ் முழுக்க நடிப்புமில்லை, முழுக்க உண்மையும் இல்லை. போர்னோ போதைக்கு ஆட்படுவதைப் போன்றே ரியாலிட்டி ஷோ ஒப்பாரிகளுக்கு அடிமையாவதும் நல்லதல்ல.