கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி பரவலான பாராட்டும் கவனமும் பெற்ற மலையாள படம் Sudani from Nigeria. நேற்று எதேச்சையாய் பார்க்க நேர்ந்த போது என்னையும் இப்படம் ஆச்சரியப்படுத்தியது. முதலில் தோன்றிய விசயம் இதைப் போல மற்றொரு படத்தை நான், இந்திய சினிமாவில், கண்டதில்லை என்பது.
கதைக்களம் தான் இப்படத்தின் தனிச்சிறப்பு - கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் செவன்ஸ் எனும் கால்பந்தாட்ட தொடர் ஒன்று நடக்கிறது. அதில் தனியார் கிளப்புகள் பங்கெடுக்கின்றன. ஒரு கிளப்பின் உரிமையாளர் மஜீத் ஒரு முன்னாள் வீரர்; மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர்; சரியான வேலையோ வருமானமோ இன்றி தடுமாறுகிறவர்; இதனாலே அவருக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை. பலவித மத்திய வர்க்க எரிச்சல்கள் மற்றும் போதாமைகளுடன் அல்லல்படும் மற்றொரு மலையாள சினிமா நாயகன் அவர். அவரை தொடர்ந்து செலுத்துவது கால்ந்து மோகம்; தன் அணி பெரிய வெற்றிகளைப் பெற்று தன்னை முன்னேற்றும் எனும் சன்னமான நம்பிக்கை. ஒரு கட்டத்தில் இவரது அணியில் உள்ள சாமுவல் எனும் ஒரு கறுப்பர் காயமுற அவரை தன் வீட்டில் வைத்து பராமரிக்கும் நிலை மஜீதுக்கு ஏற்படுகிறது. இப்போது தம் கிராமத்துக்கு வந்து தங்கி இருக்கும் கறுப்பரை, வெளிநாட்டவரைக் காண, ஒவ்வொருவராய் வருகிறார்கள்; ஒரு புது மண ஜோடி வந்து அவருடன் தற்படம் எடுக்கிறார்கள்; பசுவுடன் வரும் ஒரு நாயர் இவரது மனம் மகிழ்விக்க களரி வித்தை பண்ணி காண்பிக்கிறார். பிறகு மெல்ல மெல்ல கறுப்பர் ஊர் ஜனங்களின் பார்வைக்கு ஒரு மற்றமை என்பதில் இருந்து, ஒரு விநோத காட்சிப் பொருள் என்பதில் இருந்து சகமனிதனாக உயர்கிறார்; அவரது இழப்புகளுக்கு அவர்கள் வருந்துகிறார்கள்; அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நடத்த முயல்கிறார்கள். இப்படியான மனிதநேயம், எளிய மனிதன் ஒருவன் மீது அந்நியர்கள் வைக்கும் நம்பிக்கை, பாமர ஜனங்கள் ஒரு நெருக்கடியின் போது பரஸ்பரம் காட்டும் அன்பும் அக்கறையுமே இப்படத்தின் ஆதார தொனி மற்றும் கதைக்கரு.
இன்னொரு பக்கம், இது விளையாட்டைக் கொண்டு வாழ்வை வெல்லும் லகான், மேரி கோம், இறுதி சுற்றி வகையறா படமும் அல்ல. படம் துவங்கும் போது நமக்கு கால்பந்தாட்ட தொடரில் நாயகனின் அணி வெல்லுமா எனும் எதிர்பார்ப்பு வரும், அவரது வாழ்க்கைப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு இறுதி வெற்றியுடன் தீர்ந்து போவதாய் காட்டுவார்களோ என ஊகிப்போம். ஆனால் பாதிக்கு மேல் கால்பந்தாட்ட தொடர் பின்னணிக்கு போய் விடுகிறது. இறுதியில் அந்த தொடரில் நாயகனின் அணி என்ன நிலையானது என்றே நமக்கு சொல்ல மாட்டார்கள். இதைப் போல, விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி முழுமூச்சாய் பேசி விட்டு அதை பாதியில் மறந்து விட்டு டிராக் மாறும் மற்றொரு படத்தை நான் பார்த்ததில்லை. படத்தின் இயக்குரான சகரியா முகமதுவின் இது ஒரு குடும்ப டிராமா மட்டுமே என்கிறார். ஆனாலும் கறுப்பின மக்கள் இறக்குமதி செய்யப்படும் உள்ளூர் கால்பந்தாட்ட தொடர்கள் எனும் கதைக்களம் படத்துக்கு இறுதி வரை ஒரு புதுமையை, மலர்ச்சியை அளிக்கிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விசயம் உள்ளூர் ஆட்டங்களை சித்தரிக்கும் படங்கள் - வெண்ணிலா கபடிக்குழு, சென்னை 28 - தேசியவாதத்தை முன்னெடுப்பதில்லை என்பது. ஆனால் தேசிய அணியில் ஹீரோ / ஹீரோயின் ஆடுவதை பேசும் படங்களில் எதிரி எப்போதுமே அண்டை நாடு தான். அண்டை நாட்டை துவம்சம் பண்ணுவதற்காக ஒரு தனிமனிதன் அதிதிறமையை பயன்படுத்த வேண்டும், அதற்கு உதவாதவர்கள் தேசவிரோதிகள், எளிய ஜனங்களின் பிரச்சனைகள் எவையும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல, பாகிஸ்தானையோ ஆஸ்திரேலியாவையோ இங்கிலாந்தை உலக அரங்கில் முறியடித்தால் போதும் எனபதான ஒரு வலதுசாரி அரசியலை இப்படங்கள் முன்னிலைப்படுத்தும். லகான், தோனி வகையறா படங்கள் வாழ்க்கையை பேசாமல் ஒரு எதிரிநாடு எனும் மற்றமையை கட்டமைப்பதிலே அக்கறையாக இருக்கும். நிவின் பாலி நடித்த “1983” இந்த இரண்டு போக்குகளுக்கும் இடைப்பட்டது. Sudani from Nigeria இவ்விசயத்தில் ஒரு ஆரோக்கியமான படம்.
இப்படத்தில் என்னை கவர்ந்த மற்றொரு அம்சம் பின்காலனிய சூழலில் மனிதர்களின் அடையாளங்கள் என்னவாகும் என இது கேட்பது. அதிகமும் சூடான் நாட்டை சேர்ந்தவர்களே கேரள கால்பந்தாட்ட கிளப்புகளில் ஆடுவதால் கறுப்பர் என்றாலே சூடானி என அழைக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். ஆக, இந்த படத்தில் பிரதான பாத்திரமான கறுப்பரான சாமுவேல் நைஜீரியாவை சேர்ந்தவர் என்றாலும் அவர் சூடானி என அழைக்கப்படுகிறார். அவர் அதை திருத்தும் போது அவர்கள் அவனை நைஜீரியாவை சேர்ந்த சூடானி என்கின்றனர். பசுவுடன் வரும் நாயர் அவனை உகாண்டா நாட்டுக்காரன் என்கிறார். கறுப்பர் இதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார். ஏன்?
நமது நாடு என்பது நமது நாடாக இருப்பது நாம் அங்கு முழு உரிமையுடன் வாழும் வரையில் தான். ஒருவர் சொந்த நாட்டிலே அகதியாகும் போது, வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று மறைந்து வாழும் போது அவர் பலவித கட்டமைப்புகளை தன் அடையாளமாய் ஏற்றுக் கொள்ள நேர்கிறது. உதாரணமாய் மேற்கில் ஒருவர் ஆசியர் என்றாலே அவரை பாகிஸ்தானி அல்லது வெறுமனே கறுப்பன் என பார்க்க வாய்ப்புண்டு. மேற்கிலேயே பிறந்த வளர்ந்த ஒருவர் இஸ்லாமியர் என்றால் அவர் எந்த தருணத்திலும் தீவிரவாதி என அழைக்கப்படலாம். இதனால் தான் சாமுவல் நைஜீரியாவை சேர்ந்தவர் அவர் என்பதே மக்களுக்கு உறைக்க மாட்டேன் என்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர் யாரென்றாலும் நேப்பாளி என்பது போல தென்னிந்தியர்கள் யாரென்றால் வடக்கத்தியர்கள் மதராசி என்பது போல இவரையும் தேய்வழக்குகளுக்கு வைத்து மற்றமையாக்குகிறார்கள். அத்தோடு மஜீத் தனக்கு தன் தாய் மற்றும் மாற்றாந் தந்தை மீதுள்ள மனத்தடைகள் விலகி அவர்களை ஏற்றுக் கொள்வதும் படத்தின் இறுதியில் வருவதை நாம் கவனிக்க வேண்டும். ஆக இனம் / தேசியம் சார்ந்த மனத்தடைகளை மட்டுமல்ல எல்லா கட்டமைப்புகளையும் தான் இப்படம் ஒரே தராசில் வைக்கிறது. எந்த முன்முடிவுகளையும் கடந்து மனிதர்களால் பரஸ்பரம் நேசிக்கவும் தியாகங்கள் பண்ணவும் முடியும் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது. சாமுவலும் மஜீதும் மஜீதின் பெற்றோரும் ஒரே தளத்தில் இருப்பவர்களே, மஜீதும் ஒரு “சூடானி” தான். நைஜீரியாவில் இருந்து வந்த சூடானி என்பது ஒரு நகைமுரணாக ஆரம்பித்து பின்னர் மனிதாபிமானத்தின் குறியீடாகிறது.