அந்த வீட்டில் சேரன் தன்னை பொருட்படுத்தியதோ கவனித்ததோ இல்லை என இந்த குற்றச்சாட்டின் இடையே ஓரிடத்தில் சொல்கிறார். இது ஒரு முரணான கூற்று. அதாவது சேரனுக்கு மீராவிடம் பாலியல் ஈடுபாடு இருந்திருந்தால் அவர் அவரை தவறாக தொட்டிருக்க வாய்ப்புண்டு. தன்னை எந்தவிதத்திலும் பிடிக்காத, வெறுக்கிர ஒருவர் என அவர் சேரனை சித்தரிக்கும் பட்சத்தில் சேரன் “அப்படி” ஏன் செய்ய வேண்டும்? சரி இது எப்படியோ போகட்டும். தன்னை ஒருவர் வெறுப்பதாய் ஒரு பெண் உணரும் பட்சத்தில் இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பாரா? சில பெண்கள் செய்வார்கள் என்பதற்கு மீராவே உதாரணம்.
ஏனென்றால் இதற்கு ஒரு வரலாறு உள்ளது - தன்னுடன் ஒரு நடனப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சயிப் என்பவருக்கு எதிராக மீரா இத்தகைய குற்றச்சாட்டை முன்பு வைத்திருக்கிறார். அப்போது நிகழ்ச்சி நடுவரான சங்கீதா சயிப்பை தன்னுடன் நடனமாடக் கேட்டு ஆடுகிறார். சயிப்பின் “தொடுகையில்” எந்த தவறுமில்லை என்கிறார். மீரா தன் குற்றச்சாட்டை அப்போதும் திரும்ப வாங்கி மறுக்கிறார். சங்கீதா மீராவை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுகிறார். இதற்கான காரணமும் சயிப் தன்னை மதிக்கவில்லை எனும் அவரது “நினைப்பாக” இருக்கலாம். சயிப் யுடியூப் பேட்டி ஒன்றில், இதற்கு அடுத்து ஒருமுறை மற்றொரு நிகழ்ச்சியில் மீராவை தான் சந்திக்க நேர்ந்த போது மீரா மிக உற்சாகமாக ஹலோ சொல்லி தன்னிடம் கைகுலுக்கிக் கொண்டதாக, நடந்த சம்பவத்தை முழுக்க மறந்து விட்ட பாவனையில் நடந்து கொண்டதாக சொல்கிறார்.
இப்படி மீராவின் இந்த குழந்தைத்தனமும் “மனக்குழப்பங்களும்” உலகின் மீதான அவரது முதிரா கோபங்களில் இருந்து, ஏற்றுக் கொள்ளப்படாத ஏக்கங்களில் இருந்து தோன்றுவதாக இருக்கலாம். மீரா அடிப்படையில் போதுமான தந்தை அன்பைப் பெறாத குழந்தை / எவ்வளவு அன்பு கிடைத்தாலும் அதை போதாமையாக உணரும் ஒரு குழந்தை. ஆகையால் தான் அவர் தொடர்ந்து போதாமையின் கோபத்தில் நொதித்துக் கொண்டே இருக்கிறார். உதாரணமாக, சேரன் ஆரம்பத்தில் இருந்தே லாஸ்லியா மீது ஆதித அன்பை பொழிகிறார். அவர் அவரை தனது பெண் என்று கருதி பாசத்தைப் பொழிகிறார். கொஞ்சம் கூடுதலாகவே செய்கிறார் - கன்னத்தை கிள்ளுகிறார், அணைக்கிறேன் என்ற பெயரில் பிதுக்குகிறார் என வீட்டில் இருந்து வெளிவந்த பின் ஒரு பேட்டியில் பாத்திமா பாபு குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் நேற்றைய “குற்றவிசாரணையின்” போது லாஸ்லியா தன்னை சேரன் “ஹக்” பண்ணாமல் ஒருநாள் கூட தூங்க சென்றதில்லை என சேரனுக்கு ஆதரவாக பேசுகிறார். இந்த தொடுகை பாத்திமா பாபுவுக்கு தப்பாக பட லாஸ்லியாவுக்கு அப்படித் தோன்றவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த முரணான பார்வைக்கு காரணம் லாஸ்லியாவின் உடல் பிம்பம் என்பது லாஸ்லியாவுக்கு ஒன்று பாத்திபா பாபுவுக்கு மற்றொன்று என்பது. லாஸ்லியா ஸ்பரிசத்தை தனக்குள் பார்க்கிறார், பாத்திமா பாபு வெளியே வைத்து பார்க்கிறார். ஆனால் இதைப் பார்க்கும் மற்றொருவர் மீரா. அவர் மனதுக்கு இது ஒரு புறக்கணிப்பாக தோன்றியிருக்கலாம் - சேரன் தன்னை புறக்கணிக்கிறார், அதனாலே அவர் தன்னை வெறுக்கிறார் என நம்பத் தலைப்படும் மீரா லாஸ்லியாவை தனக்கு எதிர் பிம்பமாக, போட்டி பிம்பமாக கருதுகிறார். இயல்பாகவே லாஸ்லியா இடத்தில் தன்னை வைத்துக் கொண்டு பாத்திமா பாபுவின் குற்றச்சாட்டை மீள நிகழ்த்துகிறார் - லாஸ்லியா அணைக்கப்பட்டதை த்தான் அணைகக்ப்பட்டதாக அவர் ஏதோ ஒரு கட்டத்தில் நம்பத் தொடங்குகிறார். அவர் அப்படி அணைக்கப்பட்டு மகளாக கொஞ்சப்பட விரும்புகிறார்; அது நிகழாத பட்சத்தில் தோளில் பட்ட ஸ்பரிசத்தை இடுப்புக்கு நகர்த்தி குற்றச்சாட்டை வைக்கிறார்.
மீராவின் மனதுக்குள் எப்படியோ லாஸ்லியாவின் உடல் பிம்பம் தனதாக உருக்கொண்டிருக்கலாம். அவர் அதை நேரடியாக ஏற்க தயாரில்லை என்பதால் நேர்மறை தொடுகையை எதிர்மறையான தொடுகையாக, மீறலாக, மாற்றி இருக்கலாம்.
பலரும் கூறுவது போல மீரா ஒரு பைத்தியம் என நான் நம்பவில்லை. அவர் ஒரு குழந்தை. அதனால் தான் “செக்ஷுவல்” என சொல்லை தன் சாட்சியத்தில் நேரடியாக பயன்படுத்த அவர் தயங்குகிறார். அவருக்குத் தேவை ஒரு நல்ல “ஹக்”. அவ்வளவு தான்!