முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் காலமானார் என அறிந்து வருந்தினேன். அதுவும் தற்கொலை என அறிய வந்த போது.
வி.பி உள்ளூர் ஆட்டங்களில் பிஸ்தா. அந்த காலத்திலே தமிழகத்துக்காக சுமார் ஐம்பது பந்துகளில் சதம் அடித்தவர். ஆனால் சர்வதேச ஆட்டங்களில் ஜொலிப்பதற்கான சமநிலையும் போதிய ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. அவர் காலத்தைய, அதே தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் உலகளவிலும் கிரிக்கெட்டில் சோபித்தார். ஒருவேளை வி.பியின் மனத்தில் ஸ்ரீகாந்த் மீது ஒரு மிதமிஞ்சிய மரியாதையும் தான் அடைய வேண்டிய உயரங்களை எட்டியவர் என்பதாலான தாழ்வு மனப்பான்மை கலந்த பயமும் இருந்திருக்கலாம். வர்ணனையின் போது ஸ்ரீகாந்த் அவரை வாடா போடா என்றெல்லாம் அழைப்பார். எப்போதும் கெத்தாக பேசும் வி.பி ஸ்ரீகாந்த் என்றால் மட்டும் பணிந்து போவார்.
விளையாட்டு, தேர்வு, ஐ.பி.எல்லில் அணி மேலாளர் பொறுப்பு, டி.வி வர்ணனை என எல்லாவற்றிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டு ஆனால் முழுமையான அங்கீகாரத்தை பெற இயலாத ஒரு பாதி ஆன்மா அவர் எனத் தோன்றுகிறது.
அவருக்கு என் அஞ்சலி.