என் சக-விரிவுரையாளர் அருள் கேஸ்பர், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையை சேர்ந்த டி. வெங்கட் ரமணன் ஆகியோருடன் சேர்ந்து 200 தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் ஒரு நூலாக மொழிபெயர்த்து வருகிறேன். அடுத்த வருட இறுதிக்குள் தயாராகி விடும். எந்த வரையறையும் இன்றி எங்கள் ரசனை மற்றும் விருப்பத்தின் படி தான் கவிதைகளின் தேர்வு. இப்போது வரை தேவதேவன், மனுஷ்யபுத்திரன், நகுலன், குட்டி ரேவதி, முகுந்த் நாகராஜன், இசை, விக்கிரமாதித்தன், அழகிய பெரியவன், பசுவய்யா, பாதசாரி ஆகியோரின் கவிதைகள் சேர்ந்திருக்கின்றன. முடிந்தளவுக்கு தமிழின் முக்கிய கவிஞர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்து விட திட்டம். ஆனால் அப்படி முழுமையான ஒரு தொகுப்பாக இது அமையும் என நம்பிக்கையில்லை - தமிழ் நவீன கவிதை அப்படி ஒரு முடிவற்ற கடல்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share