இலக்கிய வாசிப்பை நாம் இன்று ஒரு எலைட்டிஸ்டான பொழுதுபோக்காகி விட்டோம். அப்போது அதற்கான எளிய கையேடுகள், சுவாரஸ்யமான வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஒரு போதும் முழுமூச்சாய் இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதால் இவர்களுக்கு “அறிமுகம்” முக்கியமாக இருக்கிறது. ஒரு நல்ல வாசகன் என்றுமே அறிமுகத்துக்காக ஒரு கூட்டத்துக்கு செல்ல மாட்டான். அவன் தொடர்ந்து சவால்களை மட்டுமே நாடுவான். விஷ்ணுபுரம் அமைப்பில் நான் இத்தகைய பெரும் கூட்டத்தையே கடந்த முறை அங்கு சென்றிருந்த போது பார்த்தேன்.
ஜெயமோகன் இவர்களுக்காக ஒரு ஆரம்பநிலை பள்ளியை நடத்துகிறார். அவர்களுக்கு Farex, formula milk எல்லாம் தயாரித்து ஊட்டுகிறார். சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து காட்டுகிறார். ஒரு கதையை எடுத்துக் கொண்டு அது எந்தளவுக்கு எதார்த்தமாக இருக்கிறது, வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது என இவர்கள் உரையாடுவதைக் கண்ட போது எனக்கு கண்ணில் ரத்தமே வந்து விட்டது. இலக்கிய விமர்சனத்தில் மானுடவாதம் எனும் ஒன்று தோன்றி முடிந்து இருநூறு வருடங்கள் முடிந்து விட்டது; ஆனால் ஜெயமோகன் எவ்வளவோ பயிற்சி அளித்தும் இவர்கள் இலக்கிய வாசிப்பு / விமர்சனத்தை பொறுத்தமட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இருக்கிறார்கள் (இதைப் பற்றி நான் விரிவாக என் பிளாகில் எழுதி இருக்கிறேன்.) இவர்களும் நிச்சயம் இலக்கிய வாசகர்கள் அல்ல. இத்தகைய A for Apple வகுப்புகளை ஜெயமோகன் தமிழகம் முழுக்க நடத்த வேண்டும் என தேவி ஶ்ரீராம் கேட்பது அவர் எவ்வளவு பெரிய அப்பாவி என்பதைக் காட்டுகிறது.
நான் கடந்த பத்தாண்டுகளிலான என் ஆசிரிய அனுபவத்தில் ஆயிரக்கணக்கான இலக்கிய மாணவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் முறையான பாடத்திட்டம் மற்றும் தொடர் இலக்கிய உரைகளின் வழி இலக்கியத்தை “முறையாக” கற்பவர்கள். விஷ்ணுபுரம் வாசக அமைப்பின் வாசகர்களை விட நூறு மடங்கு அதிக வாசிப்பை கொண்டவர்கள் (ஏனென்றால் அவர்கள் அதையே பிழைப்பாக செய்பவர்கள்.) ஆனால் இவர்களும் அசலான இலக்கிய வாசகர்கள் அல்ல. சொந்தமாக ஆழ்ந்து வாசிக்க, சுயமாக சிந்திக்க, அதை தெளிவாக பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்த தெரிந்தவனே இலக்கிய வாசகன். இலக்கிய வாசகனை நீங்கள் மூன்று மாதங்கள் வகுப்பெடுத்து தயாரிக்க முடியாது. இலக்கிய பேருரைகள் வழியாகவும் அவனை உருவாக்க முடியாது.
(இலக்கிய விவாதங்களையும் “இலக்கிய பேருரைகளையும்” ஒன்றாக பாவிக்கும் இடத்துக்கு ஜெயமோகன் வந்துள்ளது நினைத்து எனக்கு உண்மையில் ஆயாசமாக உள்ளது. நான் இதை சொல்வதனால் அவர் என் மீது இன்னும் சற்று கோபித்து கூடுதலாக ஆறு மாதங்கள் என்னை நிராகரிப்பார் எனத் தெரியும். ஆனாலும் நான் உண்மையை இங்கு துணிந்து சொல்லியாக வேண்டும்.)
வாசகர்களுக்கான பலன் / அவர்களின் வளர்ச்சியை பொறுத்தமட்டில் வேலூர் இலக்கிய அமைப்புக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கும் வாசக சாலைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. வாசகர்களை யாரும் அப்படி வெளியில் இருந்து மேம்படுத்தவோ உருவாக்கவோ நெறிப்படுத்தவோ முடியாது. அப்படி கனவு வேண்டுமானால் சும்மா காணலாம். இந்த இலக்கிய அமைப்புகள், வாசக சாலை உள்ளிட்டு, தமக்கான இலக்குகளுடன், நாட்டங்கள், தேவைகள், எல்லைகளுடன் இயங்குகின்றன. அவற்றால் மக்கள் நிச்சயம் பயனடைகிறார்கள் - அவர்கள் ஒன்றுகூட, விவாதிக்க, உரையாட, நட்பு பாராட்ட, எளிய இலக்கிய அறிமுகங்களை பெற இவை உதவுகின்றன. இந்த அமைப்புகளில் ஒன்று மேலானது மற்றொன்று பயனற்றது என்றெல்லாம் இல்லை.
விஷ்ணுபுரம் வாசகர் சட்டமும் வாசகசாலையும் என்னைப் பொறுத்தமட்டில் ஒன்று தான். அவற்றின் சமூக பங்களிப்பும் நோக்கும் ஒன்று தான் (செயல்பாட்டு முறை வேறுவேறு என்றாலும்).
பின்குறிப்பு: வாசக சாலை நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஜெயமோகனின் சாபத்தினால் மனம் வாடாதீர்கள். அவர் பாராட்டியவர்கள் எல்லாரும் உருப்பட்டதில்லை; சபித்தவர்கள் கெட்டதும் இல்லை. நான் உருப்படாமல் போய் விடுவேன் என 12 வருடங்களுக்கு முன்பு சொன்னார். விஷால் ராஜா, சுநீல் கிருஷ்ணன் அளவுக்கு மாபெரும் படைப்பாளியாக, மகத்தான சிந்தனையாளனாக வளர்வில்லை என்றாலும், அவர்கள் அளவுக்கு ஆயிரக்கணக்கான பக்கங்களையும் நூற்றுக்கணக்கான நூல்களையும் எழுதி, பல லட்சம் வாசகர்களையும், பல தேசிய விருதுகளை நான் வெல்லவில்லை எனினும் ஏதோ ஒரு சின்ன படைப்பாளியாக நிலைத்திருக்கிறேன். என்னைப் போல நீங்களும் இருப்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.
மற்றொன்று: ஜெயமோகனின் கருத்துகள் தம்மளவில் நிலையானவையோ தர்க்க ஒழுங்கானவையோ அல்ல. ஜெயமோகனின் நரைத்த தலையும் கோபமான முகமும் அவரது வெறும் பாவனைகள். அவர் மனதளவில் ஒரு குழந்தை; இன்று வெகுண்டெழுந்து சாபம் விட்டு கொஞ்ச நாளில் அதை மறந்தே விடுவார்.