நேற்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான கருத்தரங்கம் ஒரு நிறைவான அனுபவமாக அமைந்தது. சென்னையில் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்த லஷ்மி சரவணகுமார், மனுஷி, சுப்ரபாரதிமணியன், வீரபாண்டியன், முதன்முதலாக நாவலாசிரியர் மலர்வதியை என பலருடன் அளவளாவி சிறுபத்திரிகை மூடுபனிக்குள் ஒற்றர்களைப் போல மறைந்து சிறிது நேரம் இருக்க முடிந்தது. நிகழ்ச்சியில் பேசிய படைப்பாளிகள், விமர்சகர்கள், நெறியாள்கை செய்து அறிமுகவுரை, நன்றியுரை, நிறைவுரை வழங்கிய தமிழ் பேராசிரியர்கள், பாரதி கிருஷ்ணகுமார், ஆண்டாள் ப்ரியதர்ஷினி ஆகியோரின் அழகிய தமிழ் மற்றும் எழுச்சியான உரைகளை கவனித்து என்னை மறந்து முழுநாளும் இருந்தேன் (மாலை ஆனதும் பயண அசதியில் அவ்வப்போது கண்ணசந்து விட்டேன் என்றாலும்).
“தமிழ் நிலத்தில் யுவபுரஸ்கார்: பாதையும் பயணமும்” எனும் விமர்சனத் / அறிமுக தொகை நூலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்பது இளம் படைப்பாளிகளின் சிறிய அறிமுகம், அவர்களது விருது பெற்ற நூலுக்கான அறிமுகம் மற்றும் விமர்சனம், அவர்களைப் பற்றி ஏற்கனவே பிறர் எழுதிய விமர்சனங்களில் தேர்வு செய்து மீள்பிரசுரம், படைப்பாளிகள் தம் படைப்புலகம் பற்றி எழுதிய கட்டுரை, படைப்பாளிகளின் ஏற்கனவே பிரசுரமான பேட்டியின் மீள்பிரசுரம் என செறிவான முழுமையான அறிமுகமாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றாக திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கருத்தரங்கையும் தொலைநோக்குடன் திட்டமிட்டு செறிவாக ஒழுங்காக நடத்தி இருக்கிறார்கள்; அதற்காக உற்சாகமாக உழைத்திருக்கிறார்கள். தமிழ் பேராசிரியர்களான முனைவர் சித்ரா, முனைவர் தங்கமணி மற்றும் ஞானதேசிகன், கவிஞர் முத்தமிழ் விரும்பி ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு முன் இத்தகைய நிகழ்ச்சிகளை விஷ்ணுபுரம் விருதை ஒட்டி ஜெயமோகன் நடத்தி இருக்கிறார்; தேவதச்சனுக்கு ஒரு நிகழ்ச்சியை எஸ்.ரா ஒருங்கிணைத்திருக்கிறார்; வாசக சாலை அமைப்பினர் மூத்த படைப்பாளிகளுக்கான் கருத்தரங்கமாகவும், பாலநந்தகுமார் விருதாளர்களுக்கான பாராட்டு விழாவாகவும் கோவையிலும் சென்னையிலும் நடத்திக் கண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு முழுமையாக பல படைப்பாளிகளுக்காக இருநாள் விமர்சன அரங்காக, 346 பக்க அறிமுக தொகை நூலுடன் யாருடன் ஒருங்கிணைத்துக் கண்டதில்லை.
நான் தொகை நூலுக்காக எழுதி அளித்திருந்த கட்டுரையை அன்று வாசிக்கவில்லை; நாவல் எழுதுகிற என் அனுபவங்களை சுருக்கமாக பேசி விட்டு, இன்று நாம் மிக அதிகமாக எழுதுவதற்கு சமூக வலைதளங்கள் வாய்ப்பளிப்பதை, முன்பு எப்போதையும் விட பலமடங்கு சிறுசிறு பதிவுகளாக அனுபவங்கள், தகவல்கள், நினைவுகள், கருத்துக்கள் பிரசுரமாவதையும் குறிப்பிட்டு, இந்த சூழலில் நியாயமாக நாவல்களின் பிரசுரமும் அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் அது நிகழவில்லை எனச் சொன்னேன். அதற்கு ஒரு காரணம் நாம் இன்று மொபைல் போனில் அதிகமும் எழுதுவது. அது நம் மனத்தை உடனுக்குடன் ஆர்வம் கொண்டு மின்னவும் உடனடியாய் அணைந்து அடுத்த ஏதோ ஈர்ப்பில் தன்னை மறக்கவும் செய்கிறது. இன்று ஒருவர் சுலபமாக ஒரு ஸ்மார்ட்போனைக் கொண்டே தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி ஒரு நாவலை நிறைவு செய்ய முடியும்; ஆனால் அத்தகைய முயற்சிகள் நடப்பதில்லை. சமூகவலைதள செயல்பாடுகள் தாம் இதற்குக் காரணமா எனக் கேட்டேன். அடுத்து சில வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்தேன்.
என்னுடைய நாவல் “கால்கள்” குறித்து தெரிதாவின் கோட்பாட்டின் அடிப்படையில் முனைவர் பா. ஜெயபால் பேசியதைக் கேட்டது ஒரு அபாரமான அனுபவம். என் நாவலின் பாதியில் மையப்பாத்திரத்தின் தன்னிலை பலவாறாக உடைந்து போகிறது; கண்ணாடியில் காணும் தனது பிம்பம், சமூகம் பிரதிபலிக்கும் தன்னுடலின் பிம்பம், வேதனையில் தனக்கென ஒரு தனி மனதைக் கொண்டிருக்கிற தனது உடல் உறுப்பு உருவாக்கும் பிம்பம், கனவில் தன்னுடன் சஞ்சரிக்கிற மனம் என அவள் பல துண்டுபட்ட மனங்களுடன் மோதுகிறாள். ஒரு கட்டத்தில் இதை எதிர்கொள்ள ஒரு பதிலியை உருவாக்குகிறாள் - அவளை ஒத்த தோற்றம் கொண்ட ஆனால் மிகவும் குள்ளமான ஒரு பெண். இந்த கோணத்தை ஜெயபால் முற்றிலும் ஒரு புதிய விமர்சன மொழியை கொண்டு அலசியது எனக்கு மிகவும் திருப்தி அளித்தது. பின்னர் அவரது கட்டுரையை படித்த போது என்னுடைய நாவலைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகச்சிறந்தது இதுவே எனவும் தோன்றியது.
எனக்கு முன்பாக, வீரபாண்டியன் கவிதையில் இருந்து தான் நாவலுக்கு வந்ததை, கவிதை மீதுள்ள விருப்பைப் பற்றி பேசினார். மலர்வதி குமரி மாவட்ட தேவாலய தமிழின் இனிய தொனியுடன், மெதுவாக அலையடித்து செல்லும் ஓடை போன்ற இசைவுடன், விவிலிய சொல்லாடல்களுடன் ஆனால் முற்போக்கு சிந்தனையால் தேவாலய அரசியலை, சமூக அநீதிகளை சாடியபடி பேசி பலரையும் நெகிழ வைத்தார்; என்னை அடுத்து லஷ்மி சரவணகுமார் பேசினார். அவரிடம் நான் சில கேள்விகளை வைத்தேன். அதற்கு அவர் அளித்த பதில்களும் நன்றாக இருந்தன. மிக அரிதாகவே எழுத்தாளர்கள் தமக்குள் கேள்வி எழுப்பி உரையாட சந்தர்பங்கள் இப்படி அமைகின்றன.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒருநாள் விடுமுறையில் சொந்தபந்தங்களை பார்த்து விட்டு அனாதை இல்லம் திரும்புகிற ஒரு சிறுவனின் மன உணர்வு ஏற்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக நான் இழந்தது இது போன்ற உணர்வுபூர்வமாக ஒன்றுகிற, நல்ல தமிழில் செறிவான கருத்துக்களை கேட்டு விவாதிக்கிற அனுபவங்களையே. பெங்களூர் ஒரு அந்தமான காலாபானி சிறைச்சாலை போல இருக்கிறது. இங்கு கன்னடம் கற்று இந்த ஊரில் இலக்கிய சூழலுடன் பொருந்தி (தமிழவன், பாவண்ணன் போல) இருக்கலாம். ஆனால் அப்படி மற்றொரு மொழியில் ஈடுபடுவது பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை என்னை வந்து “அப்பா” என அழைத்து தெரியாமல் கையைப் பற்றி இழுப்பது போன்றது. நான் அப்படி முழுமையாக வேரற்றுப் போக விரும்பவில்லை. மீண்டும் தாய்மண்ணுக்கு திரும்ப வேண்டும்!
