கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷகிப் அல் ஹசனைத் தெரிந்திருக்கும் - வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்; சூப்பர் ஸ்டார். நீண்ட காலமாக வங்கதேசத்தை தோளில் சுமப்பவர். ஐ.பி.எல்லில் சன் ரைஸர்ஸ் அணியில் ஆடுபவர். அபாரமான பேட்ஸ்மேன். கட்டுப்பாடான சுழலர். ஆனால் ஹசன் இப்போது ஐ.சி.சி. சூதாட்ட தடுப்பு அமைப்பால் (Anti-corruption Unit) ஒரு வருடத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளார் - அவர் மீதுள்ள குற்றச்சாட்டு தான் சுவாரஸ்யமானது. கடந்த வருடம் தீபக் அகர்வால் எனும் சூதாட்ட முகவர் இவரை சேட்டில் தொடர்பு கொள்கிறார். தொடர்ந்து இருவரும் வாட்ஸ் ஆப் பண்ணிக் கொள்கிறார்கள். அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த தகவல்களைக் கேட்கிறார். ஹசன் இதற்கு பதில் அளிக்கிறாரா குற்றத்தில் ஈடுபட்டாரா எனத் தெரியவில்லை. அதற்கான ஆதாரம் ஐ.சி.சியிடம் இல்லை என நினைக்கிறேன். அதனால் சூதாட்ட முகவரிடன் தொடர்பு கொண்டதை தம்மிடம் தெரிவிக்கவில்லை எனும் காரணத்துக்காக அவரை தடை செய்திருக்கிறது. இந்த விதிமுறை பற்றித் தான் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். குற்றம் என்பது குற்றத்தை செய்வதா அல்லது கிட்டத்தட்ட குற்றம் செய்யலாம் எனும் நிலையை வந்து அடைவதா?
ஒரு உதாரணம்: உங்கள் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது முடிந்த பின் நீங்கள் அரங்கில் தனியாக இருக்கிறீர்கள். அங்கே உங்கள் அருகே ஒரு சூட்கேஸில் ஒரு கோடி ரூபாய் வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அப்பெட்டியை எடுத்து திறந்து பார்க்கிறீர்கள். அதை எடுத்துக் கொண்டு ஓடி விடலாமா அல்லது ஒரு நோட்டுக்கட்டை மட்டும் எடுத்து ஜேப்பில் போடலாமா என ஒரு நொடி சபலம் வருகிறது. நோட்டுகளை தடவிப் பார்த்து விட்டு உடனடியாக முடிவெடுக்க முடியாமல் யோசிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. ‘அங்கு ஒரு சூட்கேஸ் இருக்கிறதா? அதைப் பார்த்தால் சொல்ல முடியுமா?’ ஆமா என்றோ நான் இப்போது அங்கு இல்லை என்றோ நீங்கள் பதிலளிக்கலாம். ஒன்று எடுக்கலாம் அல்லது நல்லவனாக வேடம் போடலாம். உங்களால் முடிவெடுக்க முடியவில்லை. நீங்கள் நேரடியாக பதில் சொல்லாமல் I am busy என தகவல் அனுப்பி விட்டு எழுந்து வெளியே போய் விடுகிறீர்கள். வெளியே போனதும் “ச்சே அந்த பணத்தை எடுத்திருக்கலாமே” என மனத்தில் சஞ்சலம் மீண்டும் அலையடிக்கிறது. தள்ளாடுகிறீர்கள். மீண்டும் உள்ளே வந்து பெட்டியை திறந்து பார்க்கிறீர்கள். எடுத்துக் கொண்டு இரண்டு அடிகள் வைக்கிறீர்கள்; அடுத்து அதை இருந்த இடத்தில் வைத்து விட்டு வெளியே போய் விடுகிறீர்கள். உங்களுக்குத் தெரியாது - ஒரு ரகசிய கேமரா உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை. நீங்கள் வெளியே வந்த சற்று நேரத்தில் ‘நீ அங்கே தானே இருக்கிறாய்? எனக்குத் தெரியுமே. நான் இப்போ அங்கே வரவா?’ என மற்றொரு குறுந்தகவல் வருகிறது. நீங்கள் பயந்து போய் அந்த கட்டிடத்தை விட்டே ஓடி வந்து விடுகிறீர்கள். இந்த அவசரத்தில் Lost and Found துறைக்கு தகவல் சொல்ல மறந்து விடுகிறீர்கள் - எந்த தவறவிட்ட பொருளை கண்டெடுத்தாலும் அங்கே தகவல் சொல்ல வேண்டும் என்பது விதிமுறை. அடுத்த நாள் நீங்கள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறீர்கள். ஏன் நிர்வாகத்துக்கு தகவல் தரவில்லை, ஏன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற உத்தேசித்தீர்கள் என்பதான கேள்விகள் காணொளி ஆதாரம் மற்றும் குறுந்தகவல்களுடன் கேட்கப்படுகின்றன. இறுதியில் விதிமுறை மீறலுக்காக உங்களை வேலையில் இருந்தே நீக்குகிறார்கள். இங்கு நீங்கள் செய்த குற்றம் தான் என்ன?
மீ-டூ குற்றச்சாட்டுகளில் கணிசமானவை இப்படியானவை என்பது நினைவிருக்கலாம். நீங்கள் ஒரு இளம்பெண். அவர் ஒரு பெரும் நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் அவரிடம் உரையாட விரும்புகிறீர்கள். சந்திக்கிறீர்கள். அப்போது உங்களது புரோஜெக்ட் ஒன்றை அவர் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என கேட்கிறீர்கள். சரி என்கிறார். நீங்கள் கொடுத்த தருகிற புரோஜெக்டின் கோப்பை வாங்கி கொள்கிறார். அப்போது அவரது பார்வையில் ஏதோ தப்பு இருக்கிறது என உங்களுக்குப் படுகிறது. அவர் தற்சமயம் பிஸி என்றும், மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்தால் பேசலாம் என்றும் சொல்கிறார். அந்த வீடு தனியான ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது. உங்களுக்கு அந்த இடமும் நேரமும் சரியாகப் படவில்லை. நீண்ட நேரம் யோசித்து பிறகு போக வேண்டாம் என நினைக்கிறீர்கள். ஏழு மணி கடந்ததும் அவர் சில முறை உங்களை போனில் அழைக்கிறார். குறுஞ்செய்தி அனுப்புகிறார். நீங்கள் பதிலளிக்காமல் தவிர்க்கிறீர்கள். அதன் பிறகு அவரிடம் இருந்து உங்கள் புராஜெக்ட் பற்றி எந்த பதிலும் இல்லை. நீங்கள் தொடர்பு கொள்ள முயன்றால் அவர் போனை எடுப்பதில்லை. நீங்கள் அன்று போகாததாலே அவர் இப்போது உங்களைத் தவிர்க்கிறார் என எண்ணுகிறீர்கள். உங்களுக்குக் கோபம் வருகிறது. அவருக்கு எதிராக ஒரு மீ-டூ குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். டிவிட்டரில் பரபரப்பாகிறது. பிரபலங்கள் உங்களை ஆதரிக்கிறார்கள். நீங்கள் உணர்ந்தது சரி தான் என நீங்கள் இப்போது ஆத்திரமாக நம்புகிறீர்கள். ‘அவர் என்னிடம் தவறான நோக்கத்துடன் நடந்து கொண்டார்’ என ஆணித்தரமாக சொல்கிறீர்கள். வாட்ஸ் ஆப்பில் அவர் அனுப்பின குறுஞ்செய்தி, அவர் அழைத்த விபரங்களை ஆதாரத்துடன் பகிர்கிறீர்கள். இப்போது ஒரு முக்கியமான கேள்வி அவர் குற்றம் செய்தாரா என்பது: இல்லை. ஆனால் ஒருவேளை அவருக்கு உங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் நோக்கம் இருந்திருக்கலாம், அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம், அல்லது நோக்கம் இருந்து கடைசி நொடியில் அதை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்களோ நடக்காத குற்றத்துக்காக அவரைப் போட்டு வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் கற்பனையில் அவர் உங்கள் நடத்தையை சந்தேகிக்கிறார் எனும் வருத்தமும், அதனாலான கோபமும், உங்கள் புரோஜெக்டை இதற்காக அவர் நிராகரிக்கிறார் எனும் பெரும் ஆத்திரமும் இருக்கலாம். இதெல்லாம் ஒரு கற்பிதமாக இருக்கலாம் என்று உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றாது. உங்களை ஆதரிப்போருக்கும் ஒரு குற்றம் நடக்கும் வரை அது குற்றமல்ல என்பது புரியாது. ஏனென்றால் நாம் வாழ்வது ஒரு அதி ஒழுக்கவாத காலத்தில், 24*7 ஒழுக்கத்தை பிரகடம் செய்யக் கோரும் நவ-விக்டோரிய காலத்தில்.
முதல் உதாரணத்தில் நீங்களும் அடுத்ததில் அவரும் செய்தது ஒரு முன்-குற்றம். அதாவது குற்றம் பண்ணலாமா என சஞ்சலப்பட்டது, உடனடியாக சரியான முடிவெடுக்க தவறியது, தொடர்ந்து ஊசலாடிக் கொண்டே இருந்தது. ஷகிப் அல்-ஹசன் செய்த குற்றம் இப்படியானது. இப்போதைக்கு அவர் ஊழலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப் படவில்லை. அவர் ஊழலுக்குப் பக்கத்தில் போயிருக்கிறார். ஆனால் இது எப்படி குற்றமாகிறது? ஏன் ஐ.சி.சி இப்படியான குழப்பமான விதிமுறையை வைத்திருக்கிறது?
சூதாட்ட தடுப்புப் பிரிவு தன்னால் சூதாட்டத்தை மற்றபடி தடுக்க முடியாது, வீரர்கள் முழுமையாக தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதாவது வீரர்களும் சூதாட்ட தடுப்பு அதிகாரிகளைப் போல செயல்பட வேண்டும். இது ஒரு நல்ல லட்சியம் தான், ஆனால் இந்த விதிமுறையின் ஒரு பிரதான பிரச்சனை அது குற்றத்தை செயலில் அல்ல நோக்கத்தில், மன ஓட்டத்தில் காண்கிறது என்பது. திருட்டு ஒரு குற்றம் தான், ஆனால் திருடலாமா என ஒரு நொடி யோசிப்பது குற்றம் அல்ல. மனம் அப்படித் தான் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். அதற்காக நீங்கள் தண்டிப்பதென்றால் போலீஸ் இனிமேல் thought police ஆக மாற வேண்டி இருக்கும். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 எனும் நாவலில் Thoughtpol எனும் சிந்தனைக் காவலர்கள் வருகிறார்கள். இவர்கள் அதிகாரத்துக்கு எதிராக சிந்திப்பவர்களை தேடிப்பிடித்து தண்டிப்பார்கள். இந்த கற்பனை இன்று நிஜமாகி விட்டது.
கண்காணிப்புக் கேமராக்கள் துரத்தும் வெளிச்சூழலிலும் சரி, சமூகவலைதளங்களிலும் சரி - நீங்கள் நீங்களாகவே இருக்க முடியாது. ‘நான் நல்லவன், எனக்கு சஞ்சலங்களே இல்லை’ என பறைசாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி பறைசாற்றாதவர்கள் இன்று குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள். கறுப்பு-வெள்ளை இருமைக்கு இடையில் நமது வாழ்க்கை மாட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது வெளிப்பட்டால் நாம் அனைவருமே குற்றவாளிகள் ஆகி விடுவோம். அதனால் தொடர்ந்து அரசியல் சரிநிலையை பேண முனைகிறோம். இந்த கண்காணிப்பு அரசியலின் ஒரு நேரடி உதாரணமாக ஷகிப் மீதான இந்த தடை இருக்கிறது.