நாட்டுப்புறக் கதைகளில் ஒரு நாட்டில் பேரழகியான இளவரசி ஒருத்தி இருப்பாள். அவள் ஒரு யாரும் குணப்படுத்த முடியாத வியாதியால் மரணப்படுக்கையில் கிடப்பாள். அரசர் பரிதவித்துப் போவார். அவளை குணப்படுத்துவோருக்கு தேசத்தையே பரிசாய் அளிக்கிறேன் என்பார். பேராசைக்கார மருத்துவர்கள் யாராலும் குணப்படுத்த முடியாது. இளவரசியின் மரணத்தை யாரும் தடுக்க முடியாது எனும் நிலை ஏற்படும் போது ஒருவன் வருவான். அவன் சுலபத்தில் அவளைக் காப்பாற்றி நாட்டின் மன்னன் ஆவான். உலக கிரிக்கெட்டின் நிலையும் அவ்வப்போது இப்படித் தான் - டெஸ்ட் ஆட்டம் செத்து விட்டது, ஒருநாள் ஆட்டம் அலுத்து விட்டது, டி-20 தேவைக்கதிகமாய் ஆடப்படுகிறது, கிரிக்கெட் வெறும் சிக்ஸர் அடிக்கும் கூத்தாகி விட்டது, நிதானமான கச்சிதமான ஆட்டத்துக்கு மதிப்பில்லை எனும் குற்றச்சாட்டுகளும் ஒப்பாரிகளும் விண்ணைப் பிளக்கும், ஆனால் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளும் அற்புதங்களும் நடக்கும்; கிரிக்கெட் இப்போதும், சமீபமாய் நடந்து முடிந்த இந்தியா-மே.இ தீவுகள் ஒருநாள் ஆட்டத்தொடரின் கடைசி ஆட்டம் வரை, கடைசிப் பந்து வரை நம்மை நகங்களைக் கடித்துக் கொண்டு வியப்பும் நெஞ்சிடிப்புமாய் எதிர்பார்த்திருக்க வைக்கிறது. கிரிக்கெட்டின் ஆயுள் கெட்டி என்பதை 2019 நிரூபித்துள்ளது.
2019இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் இங்கிலாந்துக்கும் நியுசிலாந்துக்கும் இடையில் நடந்த போது உலகமே - இங்கிலாந்தைத் தவிர பிற நாட்டு ரசிகர்களில் கணிசமானோர் - நியுஸிலாந்து வெல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தனர். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தேசங்களுக்கும் சிறிய தேசங்களுக்குமான இடைவேளை மிகவும் அதிகரித்து வரும் கடந்த பத்தாண்டிலும் நாம் மிகச்சிறிய, வலுவற்ற ஒரு தேசம் ஒரு ராட்சச அணியை வீழ்த்த வேண்டும் என்றே எதிர்பார்த்தோம். அந்த அணியும் முடிந்த வரை போராடியது. ஜூன் மாதம் 14ஆம் தேதி நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மட்டையாடிய நியுசிலாந்து 241 அடித்தது; அடுத்தாடிய இங்கிலாந்து 46.1 ஓவர்களில் 203 அடித்து ஆறு விக்கெட்டுகள் இழந்த போது இங்கிலாந்தின் டைட்டானிக் கப்பல் மூழ்கியே விட்டது என ரசிகர்கள் நம்பினர். ஆனால் மற்றொரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் எனும் லியனார்டோ டி காப்ரியோ தன் காதலியின் கையைப் பற்றி எப்படியாவது கரை சேர்க்கப் போராடினார். அவரது 98 பந்துகளிலான 84 கிரிக்கெட் ஆட்டத்தை கௌபாய் துப்பாக்கி சண்டையாக மாற்றியது. 241க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. சூப்பர் ஓவர் வந்தது. அதிலும் ஒரு பக்கம் நியுசிலாந்தின் பிடிவாதம், மற்றொரு பக்கம் ஸ்டோக்ஸின் மேதைமை என இழுபறி நடக்க அதுவும் டை ஆனது. கடைசியில் நியுசிலாந்தை விட அதிக பவுண்டரிகள் அடித்தது எனும் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்துக்குப் போனது; அதுவும் ஒரு பந்து களத்தடுப்பின் போது ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு உருண்டோடியது என்னும் நிலையில், உலகமே மீண்டும் ஒப்பாரி வைத்தது.
என்னதான் நியுசிலாந்தின் தோல்வி காவிய சோகம் பொருந்தியது என்றாலும் இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் அணி இங்கிலாந்து தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை - இவ்வருடம் அவர்களின் ரன் ரேட் சராசரி என்பது 6.49. ஒவ்வொரு ஆட்டத்திலும் பிற அணிகளை விட அவர்கள் 51 ரன்கள் அதிகம் அடித்திருக்கிறார்கள். 22 ஆட்டங்களில் 14 போட்டிகளை வென்று இவ்வருடம் தாம் ஆடிய ஆட்டங்களில் சிறந்த வெற்றி விகிதத்துக்கான சாதனையும் படைத்திருக்கிறார்கள்.
இவ்வருடம் கிரிக்கெட்டில், டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்து, மட்டையே பந்தை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. 150 ஒருநாள் போட்டிகள் இவ்வருடம் நடந்திருக்கின்றன - இவற்றில் 5.42 என்பது ரன்களின் சராசரி. 350 என்பது வெற்றிக்கு குறைந்த பட்சம் தேவைப்படும் இலக்காக இருந்துள்ளது. விதிமுறைகள், ஆடுதளம், ஆட்டச்சூழல், அதிக ஆட்டங்கள் என பல விசயங்கள் பந்து வீச்சுக்கு விரோதமாகவே இருந்தன. பவுலர்களின் விக்கெட் சராசரியான 33.36 என்பது, 1974க்குப் பிறகு, உலகில் வேறெப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்தது (பவுலிங் சராசரி குறைவாக இருந்தாலே சிறப்பு.)
இவ்வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த முதல் 15 மட்டையாளர்களில் 12 பேர் துவக்க வீரர்கள். இவர்களில் ரோஹித் ஷர்மாவே எதிரணி பவுலர்களை ஜுராசிக் பார்க்கில் புகுந்ததைப் போல மிரட்சியடைய வைத்தார். 28 ஆட்டங்களில் 1490 ரன்கள். ஏழு சதங்கள் (உலகக்கோப்பையில் மட்டுமே 5). இவருக்கு அடுத்தபடியாய் விராத் கோலி இருக்கிறார் (1377 ரன்கள்). சிறந்த பவுலர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேர் வேக வீச்சாளர்கள்: ஷாமி, போல்ட், பெர்குஸன், முஸ்தபீசு, புவனேஸ்வர் குமார். ஷாமி 42 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கால்சுழலர்கள் உலகை ஆள்வார்கள் என குல்தீப், சாஹலின் கூட்டணியால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஆசியாவுக்கு வெளியே ஆடுதளங்கள் சுழலர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் ஏற்றத்தாழ்வான விதிமுறைகளாலும் பொய்த்துப் போனது.
டெஸ்ட் போட்டிகளில் டாப்டென் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்தியா இவ்வருடம் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்கவில்லை என்பதும், ஆஸ்திரேலியா மற்றும் மே.இ தீவுகளில் தொடர்களை வென்றது என்பதும் தனி சாதனைகள். இதே போல இலங்கை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டித் தொடரில் எதிர்பாராமல் வென்றதும், டர்பன் மைதானத்தில் குசல் பரேரா அடித்த 153 நாட் அவுட்டும் குறிப்பிட வேண்டிய மைல்கற்கள்.
வரும் ஆண்டில் வேகவீச்சாளர்களுக்கு மட்டுமன்றி சுழலர்களுக்கும் சாதகமாய் ஆட்டம் மாற வேண்டும், மட்டைக்கும் பந்துக்குமான ஏற்றத்தாழ்வு மறைய வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.
