கட்டக்கில் நடந்த இந்தியா-மே.இ தீவுகள் ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டம் நான் கண்ட மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டங்களில் ஒன்று - என் கணிப்புப்படி ரிஷப் பண்டின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்து விட்டது. ஏனென்றால் கோலி இலக்கை விரட்டும் போது ஆபாரமான சாதனையாளர் என்றாலும் அவருக்கு துணையாக மத்திய வரிசையில் யாராவது அதிரடியாக ஆட வேண்டும். அல்லாவிடில் அவர் சோர்ந்து தவறான நேரத்தில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால் இன்று ஒரு பக்கம் விக்கெட்டுகள் உதிர அவர் உறுதியாக நிதானமாக புத்திசாலித்தனமாக ஆடினார். அதுவும் பந்தை தூக்கி அடிக்காமல், ஸ்டம்புக்கு குறுக்கே ஆக்ரோசமாய் பந்தை விளாசாமல் 30-45 ஓவர்கள் வரை அவர் ஆடி தொய்வின்றி ரன்கள் சேகரித்த விதம் அவரது கட்டுப்பாட்டுக்கு, தன்னம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது. இன்னொரு பக்கம் 25வது ஓவருக்கு சற்று முன்பிருந்தே மே.இ தீவுகளின் வேக வீச்சாளர்கள் அபாரமாய் வீசிக் கொண்டிருக்க அவர்கள் களத்தடுப்பின் தீவிரம், மும்முரம் ஆட்டத்தை பரபரப்பாக்கியது. ஆடுதளத்தில் அவர்களுக்கு உதவ ஒன்றுமே இல்லை; ஒவ்வொரு வீச்சாளரும் தமது பாணியில் தொடர்ந்து விக்கெட் எடுக்க முயன்றனர். ஜோசப் குறைநீளத்தில் தொடர்ந்து வீசினார். ஹோல்டர் குட் லெங்தில் தன் வழக்கமான வேகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் அதிகமாய் வீசினார். கீமோ பால் தான் அதிசிறப்பு - அவரது ஸ்லோ பந்துகளையும் குறைநீளத்தையும் அடிக்கடி எகிறும் வேகத்தையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. ராகுல், ஷ்ரேயாஸ், பண்ட், கேதார் போன்றோர் மே.இ தீவு வேகவீச்சாளர்கள் இந்த நீளத்தை சரியாக கவனிக்கவோ கணிக்கவோ இல்லை.
இந்த ஆடுதளத்தில் சில பந்துகள் நின்று வருகின்றன - குறிப்பாக ஸ்லோ பந்துகள் (கடைசி பத்து ஓவர்களில் இந்திய வேகவீச்சாளர்கள் இதை சரிவர பயன்படுத்தவில்லை.) ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை மே.இ தீவு வீரர்களின் மிகையான ஆவேசம் தான் - ஜாதவ் வெளியேறினதும் ஜடேஜாவுக்கு கோட்டரல் பவுன்சர் இட முயன்று நான்கு ரன்கள் கொடுத்தார். இதே போல ஆடுதளத்தின் இரட்டை வேகத்தை பயன்படுத்தி கோலியை வெளியேற்றிய பின் தாக்கூர் ஆட வந்தார். அவர் சற்று பதற்றமாக இருந்தார். அவருக்கு ஒரு யார்க்கரோ ஸ்லோ பந்தோ வைடாக இட்டு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பால் வேகப்பந்தை முழுநீளத்தில் வீச அதை தாக்கூர் நான்குக்கு கவர் டிரைவ் பண்ணினார். அந்த ஒரே ஷாட்டுடன் மே.இ தீவு வீச்சாளர்களை சற்று குழப்பி விட்டது. அவரக்ள் கோலியின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்தது என நினைத்தார்கள். ஆனால் தாக்கூரின் பேட்டிங் திறன் அவர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்கு அடுத்த ஓவரும் ஒரு திருப்பு முனை - முதல் பந்தில் நக்கிள் பால் எனப்படும் ஸ்லோ பந்தை போல முயன்று கோட்டரல் வைடாக போட்டார். இதை அடுத்து அவர் பதற்றமானார். அவரது உடல்நிலையும் சரியாக இல்லை என நினைக்கிறேன். அந்த ஓவரில் அவர் தொடர்ந்து ஸ்லோ பந்துகளாக வீசியிருந்தால் ஒருவேளை தாக்கூரை தூக்கி இருக்கலாம். ஆனால் முதல் பந்தே சொதப்ப அவர் அடுத்து பவுன்சர் போட தாக்கூர் அதை ஹூக் பண்ணி டாப் எட்ஜ் வாங்கி அது சிக்ஸருக்குப் போக காட்டரல் நிலைகுலைந்து போனார். அடுத்து அவர் பதற்றத்தில் தொடர்ந்து வேகத்தை குறைக்காமலே வீசி தொடர்ந்து அடி வாங்கினார். ஒருவேளை அந்த வைட் விழாமல் இருந்திருந்தால் அந்த ஓவர் ஒழுங்காக அமைந்திருக்கலாம், இந்தியா மீது நெருக்கடி அதிகரித்திருக்கும். இதற்கு அடுத்த ஓவரில் மே.இ தீவுகள் முழுக்க நம்பிக்கை குலைந்து சொதப்பியது. இப்படி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் போது நடுத்தர அணிகள் தம் கட்டுப்பாட்டையும் நம்பிக்கையையும் இழக்கும் எனும் தோனி கால வியூகத்தை ஜோலியும் ஜடேஜாவும் பின்பற்றி மற்றுமொரு வெற்றியை, மறக்க முடியாத வெற்றியை, ஈட்டினர்.
