நாம் தூங்க செல்லும் போது முதலில் உடம்பு தளரத் தொடங்கும்; கண்கள் சொருகும்; மெல்ல மெல்ல எண்ணங்கள் கலக்கமடையும்; குட்டை குழம்ப குழம்ப நிறங்கள் அங்க மங்க நாம் ஏதோ ஒரு தருணத்தில் தூக்கத்துக்கு செல்வோம். இதை ஆரம்பநிலை லகு உறக்கம் என்கிறார்கள். இதன் அடுத்த கட்டத்தில் நம் மூளையின் அலைகள் மெதுவாக எழுந்து விழுகின்றன; இதயத்துடிப்பு குறைகிறது. இதுவும் லகு உறக்கம் தான். நாம் எட்டு மணிநேரம் உறங்கினால் நான்கு மணி நேரம் இந்த இரண்டாவது நிலையாக இருக்கும் என்கிறார்கள். இதற்கு அடுத்த இரு நிலைகள் தாம் ஆழ்துயில் நிலைகள்.
இப்போது ரத்த அழுத்தம் குறையும், கண்களில் அசைவிருக்காது, மூச்சு ஆழமாய், மெதுவாய் நுழைந்து வெளியேறும், உடம்பு சிலை போலக் கிடக்கும். இந்த இரு நிலைகளும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம் - வளர்ச்சிக்கும் செரிமானத்துமான ஹார்மோன்கள் சுரக்கும். தசைகளுக்கு அதிகமாய் ரத்தம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். அடுத்த நாள் பசி அதிகம் தோன்றாமல் இருக்க உதவும்.
இறுதியான ஐந்தாவது நிலை மூளைக்கு மிகவும் நல்லது. இந்த நிலையின் போது உடம்பு செயலற்றுக் கிடக்க விழிகள் மட்டும் அதன் பாட்டுக்கு சுற்றுமுற்றுமாய் அலையுமாய். இதனால் இந்நிலையை விரைவு விழியியக்க நிலை (REM) என்கிறார்கள். இந்த நிலையின் போது தான் உங்களுக்கு கனவுகள் வண்ணமயமாய் களேபரமாய் தோன்றுகின்றன. இதற்குக் காரணம் உங்கள் மூளையில் அலைகள் தாறுமாறாய் எகிறி குதிப்பதே. இந்த கனவுகளின் முடிவிலே நாம் துயில் எழுகிறோம். சில நேரம் ஒரு கனவைத் தொடர விரும்பி உறக்கத்தைத் தொடர்ந்தால் அந்த கனவு முற்றிலும் வேறொரு திரைக்கதையுடன் தொடர்வதை கவனிப்போம். நீங்கள் தூக்கத்தின் முதல் நிலையில் இருக்கும் போது இப்படி பிரக்ஞைபூர்வமாய் ஒரு கனவுக்குள் இறங்கி நடக்க முடியாது. ஆனால் ஐந்தாம் நிலையில் அது சாத்தியமாகும். சில கனவுகள் நினைவில் தங்கும், சில தங்காது, ஆனால் கனவின்றி நீங்கள் தூக்கத்தை நிறைவு செய்யவே முடியாது. கனவுகள் ஒரு படத்தின் கிளைமேக்ஸைப் போன்றவை.
இந்த இறுதி மூன்று நிலைகளையும் சேர்த்தே ஆழ்துயில் என்கிறார்கள். இவை நம் தூக்க நேரத்தின் 20%ஐ ஆக்கிரமிக்கும். அதாவது நீங்கள் எட்டு மணிநேரம் தூங்கினால் 1-2 மணிநேரங்களாவது ஆழ்துயில் அவசியம். ஆழ்துயில் 20-30 நிமிடங்கள் எனக் குறைந்து போனால் அன்று தூக்கம் நிம்மதியாக இல்லை எனப் பொருள். படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தீர்கள் எனப் பொருள். அடுத்த நாள் முழுக்க களைப்பாக அலுப்பாக உலவப் போகிறீர்கள் என அன்று காலை கோபத்துடன் சோம்பல் முறிக்கும் போதே தெரிந்து போகும்.
எனக்கு என்றுமே தூங்கும் பிரச்சனை இருந்ததில்லை; படுத்தால் கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கி விடுவேன். ஒவ்வொருவரும் தூக்கத்துக்குப் போக ஒவ்வொரு முறையை வைத்திருப்பார்கள் - சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு புத்தகம் படிப்பது, சிலருக்கு கொட்டகொட்ட முழித்து எதையாவது யோசித்துக் கொண்டு கிடப்பது. எனக்குப் பிடித்த முறை எனக்கே நான் கதை சொல்லிக் கொள்வது; ஏதாவது ஒரு மிகுகற்பனைச் சூழலில் ஒரு கதையை ஒற்றை வரியாக்கிக் கொள்வேன். அது நான் பார்க்கும் ஒரு விளையாட்டில் இருந்து ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம், ஒரு படத்தின் காட்சியோ என் அன்றாட வாழ்வின் ஒரு சாத்தியமான காட்சியோ ஆக இருக்கலாம். நான் செய்வதெல்லாம் இப்படி ஒன்று நடக்க வேண்டுமென்றால் அதற்கு முந்தைய காட்சிகள் எப்படியெல்லாம் அதை நியாயப்படுத்தும்படி இருக்க வேண்டும் என தகவல்களை தொகுப்பது; ஒவ்வொன்றாய் பின்னுக்குப் போய் அந்த காட்சிக்கு வரும் முன் தூங்கிப் போய் விடுவேன். ஒரு உதாரணம் தருகிறேன். நீங்கள் சரவண கார்த்திகேயன் என்றால் ஒரு மழைபெய்யும் இரவில் அனு சித்தாராவுடன் காரில் போவதாக ஒரு காட்சியை ஒற்றை வரியாக வைத்துக் கொள்ளலாம். அந்த சந்தர்ப்பம் அமைய உங்களது அன்றாட வாழ்வில் வாய்ப்பே இல்லை; வினோதமான காட்சிகளின் நகர்வே அந்த கிளைமேக்ஸுக்கு உங்களை இட்டுச் செல்ல வேண்டும். அவை என்னென்ன என யோசித்தால் தூக்கம் ஜம்மென வந்து விடும். அடுத்த நாள் தூங்கப் போகும் போதும் விட்ட இடத்தில் இருந்து தொடர்வேன்.
இப்படி எனக்கு தூக்கத்துக்குள் செல்வது பிரச்சனையாகவே இருந்ததில்லை - ஆனால் என் ஆழ்துயில் அளவில் எப்போதுமே பற்றாக்குறை தான். குறிப்பாக கல்லூரி வேலைக்கு வந்த பிறகு. என் கல்லூரியில் கணிசமான மாணவர்களுக்கு தூக்கப் பற்றாக்குறை உண்டு. கணிசமானோருக்கு படுத்தால் உறக்கம் வராது; உறங்கினாலும் மூன்றாம் நிலைக்குள் எட்டிப் பார்த்து விட்டு திரும்ப இரண்டுக்கு மீண்டு விடுவார்கள். நான் இப்போது அணியும் Mi Band என் இதயத்துடிப்பை அளந்து என் ஆழ்துயிலின் அளவை தினமும் காலை சொல்வதுடன் பிற பயனர்களின் ஆழ்துயிலின் அளவுடன் அதை ஒப்பிட்டும் எனக்கு கிளுகிளுப்பை அளிக்கும். கிறித்துமஸ் விடுமுறையின் போது என் ஆழ்துயிலின் அளவு அதிகரித்திருக்கிறது. 40 நிமிடங்களில் இருந்து 2-2:30 மணி நேரங்களுக்கு. எனக்கு முதலில் இந்த விசித்திரம் புரியவில்லை. விடுமுறையின் போது நான் தாமதமாகவே தூங்க செல்கிறேன். தாமதமாக எழுகிறேன். வேலை நாட்களில் சீக்கிரமாக தூங்க சென்று 6-6:30 மணிக்கு எழுகிறேன். சீக்கிரமாக, ஒரு குறிப்பிட்ட வேளையில் தினமும் தூங்கினால் தான் ஆழ்துயில் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இது ஏன் தலைகீழாக இருக்கிறது?
அப்போது தான் நான் ஒன்றை கவனித்தேன் - நான் தூங்கும் கால அளவு இந்த விடுமுறையின் போது அதிகரித்திருக்கிறது. அது என் ஆழ் துயிலின் அளவு அதிகமாக உதவுகிறது. அடுத்து நான் சிறுவயதில் இருந்தே தாமதமாக தூங்கச் சென்று ஒன்பது பத்து மணிக்கு துயிலெழும்பும் பழக்கம் கொண்டவன். என் வேலைகளும் மதியம் 1: 30க்கு மேல் தான் பெரும்பாலும் இருந்ததால் இந்த பழக்கத்தை தொடரவும் முடிந்தது. ஆனால் ஆசிரிய வேலை என்னை சீக்கிரம் துயிலெழ செய்கிறது. அப்போது என் ஆழ்துயிலின் அளவும் குறைகிறது. என் உடம்பின் பழக்கப்படி நான் ஆழ்துயிலுக்கு செல்வது நள்ளிரவு 3 மணியில் இருந்து நான்கு மணிக்கு மேலாகத் தான் இருக்க வேண்டும். மற்ற நாட்களில் நான் 3 / 4வது நிலையிலோ அல்லது 5இல் காலடி வைத்த உடனேயோ அலாரத்தால் எழுப்பப்படுகிறேன். இப்போது அலாரம் ஒளிக்காததால் என்னால் எனக்குப் பழகின வேளையில் நீண்ட நேரம் ஆழ்துயிலில் இருக்க முடிகிறது.
நம் உடம்புக்கென ஒரு நடந்து பழக்கப்பட்ட பாதை இருக்கிறது. அதனை அறிந்து கொள்வது, அதிலேயே அதை செலுத்துவது, அசந்து தூங்குவதற்கும் அவசியம். வேலை, குடும்பம் என பல தேவைகளின் பொருட்டு அது மாறும் போது உடம்பு திமிறுகிறது. தடுமாறுகிறது. நாம் எப்படி இளமையில் இருந்து இருந்திருக்கிறோமோ அப்படியே உடம்பை தொடர்ந்து வைத்திருக்க முடிந்தால் நாம் நலமாக இருப்போம். அவ்வளவு எளிதானது அது!
