நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிக்கை அரசு வரும் ஐந்தாண்டுகளில் 102 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவழிக்கப் போவதாய் சொல்கிறது.
நம்ப முடியவில்லையே! வழக்கமாக பெரும்பகுதி பணத்தை ராணுவம், தடுப்பு முகாம் எனத் தானே செலவழிப்பார்கள். இது ஒரு நல்ல திருப்பமே. இந்த முதலீடு எளிய மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உண்டு பண்ணித் தர வேண்டும்.
ஆனால் விபரமாய் பார்க்கும் போது சொற்பமான தொகை மட்டுமே விவசாயத்துக்குப் போவது இந்த அரசு இன்னமும் நமது பொருளாதார சீரழிவின் ஆதாரக் காரணத்தை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் காட்டுகிறது. விவசாயத்திற்கும் ஆரம்பநிலை தொழில்முனைவோருக்கும் இலவசமாய் மின்சாரமும் கட்டமைப்பு வசதிகளையும் பண்ணித் தர வேண்டும். கல்விக்கும் கூடுதலாய் பணம் செலவழிக்க வேண்டும்.
ஜனங்கள் சந்தைக்குப் போய் தினமும் கார்களையும் பிரைவெட் ஜெட்களையும் வாங்கப் போவதில்லை. உற்பத்தியும் வணிகமும் மட்டுமே இந்த அரசின் அக்கறையாக இருக்கிறது; அதிலும் பெரிய தெளிவில்லை. விவசாயம் தெருவில் கிடந்து அழிவதால் தான் வெங்காய விலை வரலாறு காணாதபடி உயர்ந்திருக்கிறது. நகரங்களை மையமிட்ட திட்டங்களும் செலவுகளும் இந்திய பொருளாதாரத்துக்கு தெம்பு தராது.
பரந்துபட்ட வளர்ச்சியே நமக்குத் தேவை. வெறும் மின் ஆற்றலை பெருக்கியும் சாலைகளை அமைத்தும் அது சாத்தியப்படாது (மறைமுகமாய் இவையும் விவசாயத்துக்கு உதவும் என்றாலும்). கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்து மத்தியவர்க்கத்தின் வரியைக் கூட்டினால் அது நுகர்வை மேலும் பாதாளத்தில் தான் தள்ளும். பல பொருளாதார நிபுணர்கள் ஊடகங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் விசயஙக்ள் இவை. இப்போதைக்கு 102 லட்சம் கோடி முதலீடு பாராட்டத்தக்கது.
இப்போதைக்கு மோடி-ஷா இரட்டையர்கள் போக வேண்டிய தொலைவு நெடியது (யு-டர்ன் எடுத்து மக்களை தடுப்புமுகாம்களில் தள்ளுவது, அண்டை நாடுகளில் குண்டுபொழிய்வது என மீண்டும் ஆரம்பித்தால் அத்தொலைவு கொடியது).
தற்போது நடந்து வரும் CAAக்கு எதிரான போராட்டங்களே இந்த நிலைப்பாட்டு மாற்றத்துக்கு வழிவகுத்ததா? காலம் தான் பதில் சொல்லும்!
