சொன்னால் நம்ப மாட்டீர்கள் - சில தனியார் கல்வி நிலையங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்குக் கூட தேர்வு கொண்டு வந்து விட்டார்கள் (தொடர் உள்மதிப்பீடு எனும் பெயரில்). எங்கும் எதற்கும் தேர்வு தான். சரி இந்த கல்வியாளர்களுக்கு ஏன் இந்த அபத்தம் உறைக்க மாட்டேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்வுகளை நடத்தாவிட்டால் மாணவர்கள் இப்போதெல்லாம் எந்த படிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என அவர்கள் சொல்கிறார்கள். அதாவது மாணவர்களே தேர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது அவர்களின் உட்கிடக்கை. ஏன் அப்படி?
தேர்வை உயர்கல்வி மாணவர்கள் ஒரே சமயம் வெறுக்கவும் ஆதரிக்கவும் செய்கிறார்கள் - இன்று உயர்கல்விக்கு நிறைய பணம் செலவாகிறது; கடுமையாக உழைக்கவும் போட்டியிடவும் வேண்டி உள்ளது. அந்த நிலையில் மதிப்பெண் என்பது அவர்களுக்கு ஒரு தூலமான பிரதிபலனாக, “சம்பாத்தியமாக” இருக்கிறது. தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஒரு வகுப்பில் 70 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் அத்தனை பேரும் தமக்கு முதல் மதிப்பெண் வேண்டும் என கோருகிறார்கள். அது சாத்தியமில்லை எனத் தெரிந்தாலும் அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் மதிப்பெண்ணை அவர்கள் வாங்கும் பண்டமாகப் பார்க்கிறார்கள்; தாம் படிக்கும் பட்டமும் அவர்களுக்கு ஒரு பண்டம் தான். எப்படி ஒரு ஐபோனை நிறைய பணம் கொடுத்து வாங்கினால் அது தரமாக வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே ஒரு படிப்பில் சேர்ந்ததும் தாமும் தரமானவர்களாக மாற வேண்டும், அது தானாகவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சரி அது கூட பரவாவில்லை. இந்த கல்வி எனும் பொருளை வாங்கும் போது அரூபமாக அன்றி தூலமாக அவர்களுக்கு ஒரு பயன்மதிப்பு தேவைப்படுகிறது - இது தான் இன்று மதிப்பெண் ஆகிறது. ஆறுமாதத்துக்கு ஒருமுறை தேர்வு என்பது இன்று நீண்ட காலம். அதனால் இன்று மாதாமாதம் தேர்வு என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேஸ்புக்கில் அனுதினமும் அவர்கள் பெறும் லைக்குகள், ஷேர்களைப் போல இருக்கிறது.
இந்த கல்வி சந்தைப்படுத்தல் முதலில் தனியார் பள்ளிகளிலே பிரசித்தமானது. அங்கு தான் அடிக்கடி தேர்வுகள் நடத்துவது முதலில் பரிசோதனை செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியின் விளம்பரம் பார்த்தேன் - அவர்கள் ஒரு பரீட்சார்த்தமான கல்விமுறையை வைத்திருக்கிறார்களாம்; தினமும் தேர்வு, தினமும் மதிப்பீடு, அது முடிந்ததும் அடுத்த நாள் தேர்வுக்க்கான தயாரிப்பு. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு விதமான தினசரி அங்கீகாரத்தை, சுய-மதிப்பீட்டை அளிக்கிறது என்பதால் இதில் ஒரு மறைமுக கிளுகிளுப்பு உள்ளது. தனியார் பள்ளிக் கல்வியில் ஆரம்பித்த வியாதியானது முதலில் உயர்கல்வியை பாதித்து இப்போது அரசுப்பள்ளிகளுக்கும் பரவியுள்ளது என நினைக்கிறேன்.