கடந்த இரு தினங்களாக நானும் ஜோஷ்வாவும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் dissent கருத்தரங்குக்கான தலித் சினிமா அரங்கு பற்றி விவாதிப்பதற்காக அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். நிறைய பேசினோம். தலித் சினிமா மற்றும் அரசியல் குறித்து ஸ்டாலின் ராஜாங்கத்துடன் உரையாடினோம். எண்பது, தொண்ணூறுகளில் எப்படி கீழ்த்தட்டை சேர்ந்த நாயகன் மேல்தட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து போராடி மணப்பது அல்லது பண்ணையாரை எதிர்த்து ஏழை நாயகன் வெல்வது ஆகிய ஒற்றைவரிக் கதைகள் சினிமாவில் பிரசித்தமாக இருந்தன, இது மறைமுகமாக சாதிப் பிளவை நாம் பேச முயன்றதன் விளைவு தான் என ஸ்டாலின் சொன்னது என் மனத்தில் தங்கி இருந்தது; நேற்று அண்ணாமலை படம் பார்க்கும் போது நிலவுடைமை அடிப்படையிலான படிநிலை எப்படி அதில் வந்திருக்கிறது என யோசித்தேன். ஏன் அதில் ரஜினியின் சாதி குறித்த எந்த குறிப்பும் இல்லை? அதில் ராதாதவி ரஜினி மீது கொள்ளும் துவேசம் ஏழை மீது பணக்காரனுக்கு உள்ள ஒவ்வாமை மட்டும் தானா என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்தன.
இந்த படத்துக்கும் அசுரனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் யோசித்தேன். அன்று மறைமுகமாக பேசப்பட்டது இன்று பட்டவர்த்தமாகிறது; ஆனாலும் இந்த தலித் சாகச நாயகன் பிம்பம் எதார்த்தத்துக்கு புறம்பானது என ஸ்டாலின் குறிப்பிட்டதும் உண்மை தான். மற்றொரு முரணையும் ஸ்டாலின் குறிப்பிட்டார் - தலித் வாழ்வின் அவலங்களை மட்டும் பேசும் படங்களை தலித்துகளே பெரிய அளவில் விரும்புவதில்லை, அதுவும் நிலப்பகுதி, பேச்சுவழக்கு வழி எந்த சாதி குறிப்பிடப்படுகிற என்பது வெளிப்படையாகும் போது சம்மந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படத்தை ரசிக்க முடியாமல் போகிறது; அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். இதே போன்ற செறிவான விசயங்களை இன்னும் பரபரப்பாக தலித் சினிமா அரங்கில் விவாதிப்பார்கள் என நினைக்கும் போது ஆர்வம் பற்றிக் கொள்கிறது.
நேற்று என்னுடைய வகுப்பு ஒன்றுக்கு ஜோஷ்வாவை அழைத்துப் போய் அம்பேத்கரின் Who Were the Shudhras புத்தகம் பற்றி பேச வைத்தேன். நானும் அவரும் வகுப்பில் கேள்விகளை எழுப்பி விவாதித்தோம். வர்க்கம், இனம், பாலினம், சாதி ஆகியவை எப்படி வேறுபடுகின்றன, எப்படி அதே சமயம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை, பஞ்சமி நிலப்பிரச்சனை, கேரளாவில் நடந்த நிலசீர்திருத்தம், அதன் சிக்கல்கள், விளைவுகள், வேதகாலத்துக்கு முன்பு தலித்துகள் ஆதிபௌத்தர்களாக இருந்ததே அவர்கள் நால்வர்ணத்துக்கு வெளியே துரத்தப்படக் காரணமா என நிறைய விசயங்களை அவர் பேசினார். ஒரு மாணவன் எழுந்து இடஒதுக்கீடு அநியாயமானது, என்னை விட குறைவாக மதிப்பெண் எடுத்த ஒரு தலித்துக்கு என் இடம் போவது சரியா எனக் கேட்டான். அவனிடம் இட ஒதுக்கீட்டில் தலித்துகள் குறைவாகவே பலன் பெறுகிறார்கள், பெரிய பங்கை வாங்குவது மத்திய சாதிகள் தாம் என சொல்லி புரிய வைத்தோம்.
நீண்ட காலத்துக்குப் பிறகு சமூகம், கலை, இலக்கியம், சினிமா என நேரம் போவது அறியாமல் பேசுவது இங்கு சாத்தியமாகி உள்ளது; சென்னை நாட்களை நினைவுபடுத்தி ஏக்கம் கொள்ளவும் செய்தது; இப்போதைய வேலையிடத்தில் எப்படி இத்தகைய காத்திரமான உரையாடல்கள் இல்லாமல் ஒரு காலிபிளவர் போல இருக்கிறேன் என வருத்தமும் கவ்விக் கொண்டது.
