1) நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியல என ஒரு நண்பர் ஆயாசப்பட்டார். அது நல்லது என எனக்குப் பட்டது. ஏன்? அது தான் நேரத்தின் இயல்பே. நேரம் மிக மிக எலாஸ்டிக்கானது, இழுவையானது, ஒரு ரப்பர் பேண்டை இழுப்பதைப் போல அதை இழுத்து விட முடியும். இது எங்கு ஆரம்பித்து எங்கு போகிறது எனும் குழப்பம் தான் “நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியலே” என நம்மை யோசிக்க வைக்கிறது. சிலநேரம் நேரம் இப்படிச் செல்வது விடுதலையை அளிக்கும்; நம்மை மறந்து எதிலாவது திகைத்துப் போய் இருப்போம். உதாரணமாய் ஒரு அழகிய பெண் பேசும் போது அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தால் “நேரம் போவதே தெரியாது”. பார்க்கிற உணர்வு நமக்கே வந்து விட்டால் பிரக்ஞைபூர்வமாகி விடுவோம்; பதற்றமும் அலுப்பும் ஏற்படும்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றொரு விவாதத்தில் சொல்லுகையில் நாமே நம் வாயைப் பார்க்கிறோம் என்கிறார். அதுவும் பிறர் வாயைப் பார்க்கையில், பார்க்கிற உணர்வு ஏற்படுகையில். அப்போது அங்கு மூன்று பேர் இருக்கிறார்கள் - அழகிய பெண், அவள் வாயைப் பார்க்கும் நீங்கள், உங்களையும் அவளது வாயையும் ஒருசமயம் பார்க்கும் மற்றொரு நீங்கள். அந்த மற்றொரு ஆள் வந்ததும் ரப்பர் பேண்ட் அறுந்து சுரீரென கன்னத்தில் வந்து அடிக்கும்.
2) நேரம் எலாஸ்டிக்காக இருக்கும் போது அழகானது - அதை ஒரு சமயம் ஒன்றை நோக்கி மட்டுமே இழுப்பது நல்லது; நான் இன்று நாவல் எழுதும் நோக்கம் கொண்டிருந்தால் காலை முதல் கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் அதை மட்டுமே செய்வேன் - காப்பி குடிக்கும் போது, டிபன் சாப்பிடும் போது, எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கிற பத்து பத்து நிமிடங்களில் எல்லாம்; அரைமணி, ஒரு மணி இடைவெளி நேரம் வகுப்புகளுக்கு இடையில் கிடைத்தாலும் எழுதுவேன். முதலில் பத்து நிமிடங்கள் நான் நேரத்தை ஜவ்வாக இழுத்துப் பழக்கி இருப்பதால் இந்த அரைமணி, ஒருமணி இழுப்புக்கும் அது நன்றாகவே ஒத்து வரும். அது மட்டுமல்ல அந்த இழுப்பே சுகமாக இருக்கும் (ஒரே வாயைப் பார்ப்பதனால்). ஆனால் பல்வேறு திசைகளில் இழுத்தால் அது எரிச்சலையே தரும். பத்து நிமிடங்கள் பேஸ்புக், பத்து நிமிடங்கள் புத்தகம் படிக்க, இன்னும் பத்து நிமிடங்கள் சில வரிகள் எழுதுவதற்கு, அடுத்த அரைமணி நேரம் மின்னஞ்சல் ஒன்றைப் புனைய, அதற்கு அடுத்த இருபது நிமிடங்கள் இடைவேளை நாவல் எழுத என முயன்று பார்த்தால் அது சுலபமாக, சரளமாக இருக்காது. இது என் அனுபவம்; இது எல்லாருக்கும் பொருந்தும் என சொல்ல மாட்டேன்.
மாறுபட்ட விசயங்களை செய்யும் போது நான் மாறுபட்ட பல தலைப்பாகைகளை அணிகிறேன்; ஒருவேளை அங்கே அப்போது அந்த மூன்றாவது ஆள் - அந்த பார்க்கிறவனை “பார்க்கிறவன்” - தோன்றி விடுகிறானாக இருக்கலாம். சிறிய நேரத் துண்டுகளை ஒரே இலக்கின் பொருட்டு செலவழிப்பதே எப்போதும் என் பரிந்துரை. அதன் மற்றொரு அனுகூலம் சுலபமாக நம்மால் ஒன்றிரண்டு மணிநேரங்களை ஒரு காரியத்துக்காக ஒரு மிக பிஸியான நாளில் கூட செலவழிக்க முடியும் என்பதும் அதனால் காத்திரமாக எதையோ செய்து முடிக்க இயலும் என்பதும்.
