The Woman Next Door (1981) பிரஞ்சு புதிய அலை இயக்குநர்களில் தலையானவரான டுரோபோவின் படைப்பு. அவரது 400 Blows பிரசித்தமானது. Mobi ஆப்பில் அவரது பல படங்களை தொடர்ச்சியாக காண்பித்து வருகிறார்கள். கணிசமானவை குறும்புத்தனமான, அதேவேளை தீவிரமான காதல் கதைகள். இந்த படங்கள் வழியாக அவர் மனித வாழ்வில் சுதந்திரம் என்றால் என்ன எனும் கேள்வியை பல கோணங்களில் கேட்கிறார் என நினைக்கிறேன் - எளிய மனித உறவுகள், காதல் உறவுகள், தாம்பத்ய உறவுகள் என ஒவ்வொன்றிலும் மனிதன் நாடுவது பிறழ்வுகளை, பிறழ்வுகள் வழி சுதந்திரத்தை, இதே அந்த பிறழ்வே பின்னர் விரிசலாகி விரிசல் அஸ்திராவரத்தை அசைக்கும் நடுக்கமாகி அவனை அழிக்கிறது என்பதை.
The Woman Next Door அப்படியான ஒரு கதை - முன்னாள் காதலர்கள் பிரிவுக்குப் பிறகு திருணம் செய்து இயல்பு வாழ்வில் பொருந்திட முயல்கிறார்கள். பெர்னர்ட் அன்பான மனைவி; இரு குழந்தைகள் என அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அந்த மகிழ்ச்சி மேலோட்டமானது என்பதை மெட்டில்டா அவன் பக்கத்து வீட்டில் குடி வரும் போது தெரிய வருகிறது. மெட்டில்டா சற்றே வயதான ஆணொருவரை திருமணம் செய்து கொண்டு நிலையற்று இருக்கிறாள். துவக்கத்தில் பெர்னர்ட் அவளை சந்திப்பதைத் தவிர்க்கிறான். அவள் அவனைத் தேடிச் செல்கிறாள். “நாம் நண்பர்களாக இருப்போமே” என அழைப்பு விடுக்கிறாள். ஆனால் அவர்களுக்கு இடையில் காதல் பற்றி எரிய சில வினாடிகளின் அந்நியோன்யமே போதுமாக இருக்கிறது.
இருவரும் காதல் முற்றுப்பெறும் முன்னரே அவசரமாய் பிரிந்தவர்கள். பெர்னர்டின் நிதானமற்ற போக்கு மெட்டில்டாவை அச்சுறுத்திட அவள் அவனிடமிருந்து விலகுகிறாள். பின்னர் அவள் வேறொருவரை அவசரமாய் திருமணம் செய்து கொண்டு பெர்னர்டை மறக்க முயல்கிறாள். அதுவும் முடியாமல் போக விவாகரத்துப் பண்ணுகிறாள். அடுத்தது தான் இப்போதைய கணவர் அவளது வாழ்வுக்குள் வருகிறார். அவர் எதேச்சையாக அவளது பழைய காதலனின் வீடருகே ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து தற்செயலாக இருவரையும் இந்த இக்கட்டான சந்தர்பத்தில் தள்ளிட திருப்புமுனை ஏற்படுகிறது. இருவரும் மீண்டும் காதலிப்பார்களா, எனில் என்னவாகும் என்பதே மிச்சக்கதை.
ஆம், இருவரும் மீண்டும் காதலில் விழுகிறார்கள். ஆனால் காதல் இப்போது கள்ளகாதல் ஆகிறது. காதலின் போது நடந்தது இப்போது அச்சுப்பிசகாமல் இப்போது திரும்ப நடக்கிறது - பெர்னர்டின் மிதமிஞ்சிய ஆவேசம், அவனது பொறாமை, ஆட்கொள்ளும் விருப்பம் மெட்டில்டாவை மீண்டும் அச்சம் கொள்ள வைக்கிறது; அவனிடம் இருந்து விலக முயல்கிறாள். அவன் இப்போது கூடுதல் இச்சையுடன் நெருங்குகிறான், அவளுக்காக தவிக்கிறான், ஊர் உலகம் தன் கள்ள உறவை அறிந்தால் கூட தவறில்லை எனும் இடத்துக்கு வருகிறான். அவள் இதை ரசிக்கிறாள், மற்றொரு பக்கம் வெறுக்கவும் செய்கிறாள். நாம் இனி சந்திக்க முடியாது, கூடாது என அறுதியாக சொல்கிறாள். இருவருக்குமிடையே பொதுவிடத்தில் மோதல் வெடிக்க குடும்பத்தினருக்கும் உண்மை அனைத்தும் தெரிய வருகிறது.
பெர்னர்ட் தன் காதல் முறிவை ஏற்றுக் கொண்டு மனைவியுடன் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்புகிறான். ஆனால் மெட்டில்டாவில் அது முடிவதில்லை - அவள் மனம் உடைந்து பேதலித்து மருத்துவ சிகிச்சை பெறுகிறாள். அப்போது அவளுக்கு ஆறுதல் அளிக்க பெரன்ர்ட் அங்கு செல்கிறான். இது முடிந்து, மெட்டில்டாவின் குடும்பம் இடம்பெயர்ந்து சென்று, பெர்னர்டின் மனைவி கர்ப்பமாகி, கிட்டத்தட்ட எல்லாம் சாமாதானம் ஆகிய பின்னர் மெட்டில்டா விடிகாலை ஒன்றில் தனது பழைய வீட்டுக்குத் திரும்புகிறாள். அவளது வீட்டின் கதவு காற்றில் தடதடவெ அடிக்கும் அரவம் கேட்டு அவன் இரவில் எழுந்து அங்கு செல்கிறான். மெட்டில்டாவை அங்கு கண்டு கட்டித் தழுவுகிறான். அவர்கள் அந்த வீட்டின் முன்னறையின் தரையில் படுத்து உறவு கொள்கிறார்கள். இது அவர்களின் மூன்றாம் பிரிவுக்குப் பின்பான சந்திப்பு; இதுவும் எப்படி முடியுமோ என நாம் யோசிக்கும் போது மெட்டில்டா தன் கைப்பையில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து தன் மீது கிடக்கும் பெர்னர்டின் தலையை சுடுகிறாள். (அவர்கள் முன்பு சந்திக்கும் போது அடிக்கடி அவனது தலையை அவள் வருடி விடுவாள், அவளது கை அப்போது தன் கன்னத்தை அடைந்து தடவுவதை அவன் மிகவும் ரசிப்பான் என்பது நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது). அடுத்து அவள் தன் தலையில் துப்பாக்கியை வைத்து சுடுகிறாள். படம் முடிகிறது.
மெட்டில்டா ஏன் அப்படி செய்தாள்? இதற்கு இரண்டு பதில்கள் உண்டு:
1) அவளுக்கு மனநிலை பிசகி விட்டது.
2) இந்த காதல் இப்படித் தான் முடிய முடியும். அவர்கள் ஒருமுறை உரையாடும் போது அவன் முன்பு கூறிய ஒரு வாக்கியத்தை அவள் நினைவு கோருவாள் - “எந்த ஒரு காதல் கதைக்கும் ஒரு துவக்கம், மையம், முடிவு வேண்டும்”. அது இல்லாமல் போவது அவர்களின் பிரச்சனை - முடிவு அமையாத காதல்கள் மீள மீள ஒரே வட்டத்தில் சுற்றி வருகிறது; தாள முடியாத வாதையாக மாறுகின்றன. மெட்டில்டா அதற்கு ஒரு முடிவு அமைக்கும் வண்ணம் அவனையும் கொன்று தானும் சாகிறாள் எனலாம். அவர்கள் ஓடிப் போய் வாழ்ந்திருக்கலாமே? ம்ஹும். நிச்சயம் மனம் முறிந்து பிரிந்து மீண்டும் சேர்ந்து பரஸ்பரம் வாழ்க்கையை வதையாக்கி இருப்பார்கள்.
காதல் என்பது மிதமிஞ்சிய இன்பத்திலும் துன்பத்திலுமாய் ஊசலாடுகிறது. துன்பத்தில் இன்பத்தையும் இன்பத்தில் துன்பத்தையும் அது காண்கிறது. மெட்டில்டாவின் மனநிலை இதனாலே மெல்ல மெல்ல சீரழிகிறது. ஓவியரான அவள் குழந்தைகளுக்கான சித்தரக்கதைப் புத்தகம் ஒன்றை எழுதுகிறாள் - அதில் ஒரு பக்கத்தில் ஒருவன் தலையில் சுடப்பட்டு கிடக்கிறான். ரத்தப் பெருக்கு தரையில் கோலமிட்டுச் செல்கிறது, பளிச்சென்ற ரத்தச்சிவப்பில். பதிப்பாளர் அதை வெண்ணிறமாக மாற்றுகிறார்; குழந்தைகளுக்கு அந்த சித்தரிப்பு அதிர்ச்சி அளிக்கலாம் என வாதிடுகிறார். ஆனால் மெட்டில்டா அதை ஏற்க மறுக்கிறாள். இறுதிக் காட்சியின் கொலை-தற்கொலைக்கான அறிகுறியை டுரோபோ அங்கே நமக்கு விதைத்து விடுகிறார், அவளது மனப்பிரச்சனையின் சமிக்ஞையாகவும் அக்காட்சி இருக்கிறது.
மற்றொரு முக்கிய காட்சியில் ஒருநாள் மெட்டில்டா பெர்னர்டின் வீட்டுக்குச் சென்று அவனது குழந்தையுடன் தனியாக உரையாடுகிறாள். அவனது அறைக்கு செல்லும் அவள் அங்கு அவன் வரைந்த ஓவியம் ஒன்றை கவனித்து அதைப் பாராட்டுகிறாள்; ஒரு திமிங்கலம் அழுவதை அவன் சற்றே நவீன ஓவிய பாணியில் குழந்தைத்தனமாக வரைந்திருக்கிறான். திமிங்கலத்தின் தலையில் இருந்து நீர் பிசிறியடிப்பதைப் பார்த்திருப்போம். அவ்வாறு அது தன் உடல் முழுக்க இருக்க கண்ணீர் பிசிறடிக்க அழுவதான ஒரு சித்தரிப்பு. கடலும் கண்ணீரைப் போல உப்பானது என்பதால் தன் துயரத்தினுள் மூழ்கிப் போய் துயரத்தையே கண்ணீராக வெளிப்படுத்தும் ஒரு பிராணியாக அது இருக்கிறது. முதலில் குழந்தையிடம் அவள் “திமிங்கலம் ஏன் அழுகிறது?” எனக் கேட்க அவன் அது “வருத்தத்தில் இருக்கிறது” என்கிறான். துன்பம் ஏன் இருக்க வேண்டும் என அவள் கேட்பதுடன் அக்காட்சி முடிகிறது. துன்பத்தைக் குடித்து துன்பத்தையே நாம் அழுவதனாலே அது இருக்கிறது; நமக்கு வேறு வழியில்லை; அன்பை நாடும் ஒவ்வொரு இதயமும் அந்த திமிங்கலம் தான். மிதமிஞ்சிய அன்பு என்பது தனக்கு போதுமான அன்பு கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தில் இருந்து மட்டுமே தோன்ற முடியும், அந்த ஏக்கம் நம்மைத் தனிமையில் தள்ளுகிறது, காதலர்கள் அதனாலே தனிமையை மீள மீள நாடுகிறார்கள், அது எப்படியும் நம்மை அழித்தே தீரும் என இப்படம் பேசுகிறது.
எனக்கு இந்த படத்தின் காட்சி மொழி பத்மராஜனின் ஸ்டைலை நினைவுபடுத்தியது (பாலசந்தரின் ‘ஏக் துஜே கேலியே’, ‘புன்னகை மன்னன்’ ஆகிய படங்களையும் தாம்). பத்மராஜனின் வெறித்தனமான ரசிகன் என்ற முறையில் நான் இந்த படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன் எனலாம் - அதே போன்ற haunting soulful இசை, அதே டீப் குளோசப்பை, குளோசப்பின் போதான zooming in பாணியை, அப்போது ஒரு பாத்திரம் தனக்குள் மூழ்குவதை, அப்போது அவனது/ளது தனிமை உணர்த்தப்படுவதை, சதா விடிகாலையின் இளநீல ஒளியை உணர்த்தும் லைட்டிங், இரவில் கார் வெளிச்சம் நோக்கி பீறிட்டு வரும் ஷாட்டுகள், சூழ்நிலையில் அகப்பட்டு வெளிவர முடியாது தன்னையே அழிக்கும் பாத்திரங்களை என பத்மராஜன் ஆர்ப்பரிக்கும் அலையைப் போல என் நினைவுகளின் கரையில் தோன்றிக் கொண்டே இருந்தார். பத்மராஜன் டுரோபால் மிகவும் தாக்கம் பெற்றிருக்கிறார் என அறிய இந்த படம் உதவியது. இனி “தூவானத் தும்பிகள்” (1987), “நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்” (1986) போன்றவற்றை பார்க்கும் போதெல்லாம் இந்த படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.
