முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி பதிப்பகம்




தமிழில் நண்பர்களுக்காக பதிப்பகம் ஆரம்பித்தவர்கள் இருக்கிறார்கள்; சொந்த நூல்களை வெளியிட, தன் சித்தாந்தத்துக்காக, ஒரு த்ரில்லுக்காக, சம்பாதிக்கலாம் எனும் நப்பாசைக்காக, புரட்சிக்காக, உலக இலக்கியத் தரத்துக்கு தமிழ் இலக்கியத்தை உயர்த்தலாம் எனும் கனவுக்காக என பல நோக்கங்களுக்காக பதிப்பகங்கள் ஆரம்பித்தபடியே இருக்கிறார்கள். நான் ஒரு புதிய பதிப்பக நூலைக் கண்டதும் அதன் பதிப்புத் தரத்தைத் தான் கவனிப்பேன் - அட்டையில் இருந்து, வடிவமைப்பு வரை உள்ள கற்பனை, சிந்தனையோட்டத்தை, தாள்களின் தரத்தை, புதிதாக எதையாவது முயற்சி பண்ணுகிறார்களா என. ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவது வெறுமனே பதிப்பிப்பது மட்டுமல்ல என்பதை சில புத்தகங்களையாவது POD முறையில் கொண்டு வந்தவன் என்கிற முறையில் அனுபவரீதியாக அறிவேன். ஒரு புத்தகத்துக்கும் பிரிண்ட் அவுட் எடுத்து ஸ்பைரல் அட்டை போட்ட பிரதிக்குமான வித்தியாசமே அதற்கு நாம் பதிப்பில் அளிக்கிற புதிய தோற்றம், வண்ணம், உணர்வில் தான் இருக்கிறது. அது கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் பெற்று குளிப்பாட்டி சிங்காரித்து ஆடை அணிவித்து உலகுக்குக் காட்டுவதைப் போல.

 தலைப்புக்கான எழுத்துரு, எப்படியான வண்னங்களை அட்டையில் கொண்டு வர வேண்டும், அந்த வண்ணங்கள், shades, தோற்றத்தின் அரசியல் என்ன என்பதில் இருந்து முதல் பக்கத்தில் எதையாவது வித்தியாசமாகப் பண்ணுகிறோமா பின்னட்டையை எப்படி கொண்டு வருகிறோம், blurb எப்படி இருக்க வேண்டும் என்பது வரை ஒரு பதிப்பாளர் நிறைய மெனக்கெட வேண்டும். என்னுடைய Plop புத்தகத்தின் அட்டை வடிவமைப்பு நடந்த போது நீளத்தின் எந்த shade வர வேண்டும் என்பதை மாணவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் முழுக்க விவாதித்து பலரிடமும் காட்டி முடிவெடுத்தது நினைவுக்கு வர வருகிறது. நேற்று என்னுடைய புரூஸ் லீ புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்த போது சுமார் எட்டாண்டுகளுக்கு முன் அதன் எழுத்துரு, அதில் வரும் வண்ணம் எப்படி இருக்க வேண்டும் என நிறைய யோசித்து, மாதிரிகளை தரவிறக்கி மனுஷ்யபுத்திரனுக்கு அனுப்பி அவருடன் விவாதித்தது நினைவுக்கு வந்தது. அதனாலே இப்போது பார்த்தாலும் அதன் தோற்றத்தில் ஒரு புதுமை, தனித்துவம் இருக்கிறது. இதில் வடிவமைப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளனின் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்பது முக்கியம். ஒரு புதிய பதிப்பகம் தோன்றும் போது அதன் நூல்கள் வடிவமைக்கப்படுவதில் புதுமைகளைக் காட்ட வேண்டும்; அல்லாவிடில் அந்தப் பதிப்பகம் வெறும் ஜெராக்ஸ் கடையாக மட்டுமே செயல்படுகிறது என நினைப்பேன். இந்த புதுமைகள் உங்கள் பதிப்புக்குப் பின்னால் ஒரு தனி அரசியல், கருத்தியல், ஒரு நிலைப்பாடு, மனப்போக்கு இருக்கிறது என்பதைக் காட்டும். தமிழில் நிலைப்பட்ட ஒவ்வொரு நல்ல பதிப்பகமும் இதை செய்கிறது. கறுப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் லோகோவும் அவர்கள் ஷோபா சக்தியின் ஆரம்ப நாவல்களை புதுமையாகக் கொண்டு வந்த விதமும் உடனே நினைவுக்கு வருவது. உயிர்மையின் வெற்றிக்கும் அவர்கள் வடிவாக்கத்தில் காட்டிய மெனக்கெடலுக்கும் நிச்சயம் தொடர்புள்ளது (இதை மனுஷ் என் நண்பர் என்பதால் சொல்லவில்லை).
 தோற்றத்தில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்பீர்களானால் ஒன்றை சொல்வேன் - ஒரு புத்தகம் வெறும் தாள்களும் அதனுள் உள்ள எழுத்துக்களும் மட்டும் அல்ல. அந்த எழுத்துப்பிரதி ஒரு கலை வடிவம்; பதிப்பு அதன் மீது உருவாக்கப்படும் மற்றொரு கலை வடிவம். ஒவ்வொரு புத்தகமும் இரட்டைக் கலை வடிவம். அதனால் தான் சில புத்தகங்களை கையிலெடுத்து ரசித்து தொட்டுப்பார்த்து உணர்வோம். அதை கணினியில் படிக்கும் அனுபவமும் புத்தகமாக படிக்கும் அனுபவமும் இருவேறாக இருக்கும்

இதை எல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் எஸ். செந்தில்குமாரின்கழுதைப்பாதைநாவலை இன்று கையில் எடுத்த போது ஏற்பட்ட அந்த உணர்வு தான் - புத்தகம் அவ்வளவு ரசனையாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது! ஒரு கலைப்படைப்பை கையில் எடுத்துப் பார்ப்பதாக இருக்கிறதே என சிலாகித்தேன். அதன் அட்டைப்படத்தின் நவீன ஓவியத் தோற்றம், வித்தியாசமான வழவழ உணர்வு, லாமினேஷன், பதிப்பக லோகோவை முன்னட்டையில் போடாமல் ஸ்பைனில் மட்டும் போட்டிருப்பது, கிட்டத்தட்ட எடையற்றது போன்ற உணர்வு (300க்கு மேல் பக்கமுள்ள நாவல் ஏதோ காற்றைப் போல் கனக்கிறது; அதிக ஆங்கில பேப்பர் பேக் நாவல்களிலே நான் கண்டிருக்கிறேன்). யார் பதிப்பாளர் எனப் பார்த்தால் எழுத்து பிரசுரம். யார் இது புதிதாக இருக்கிறதே என்றால் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் தமிழ் பதிப்பின் பெயர்
இந்த புத்தகக் கண்காட்சியில் அவர்களின் ஆங்கில மொழியாக்க நூல்களைப் பெற்று வாசித்து மிகவும் வியந்து போனேன். ஜீரோ டிகிரி பதிப்புக்கு என ஒரு தனியான feel இருக்கிறது என்பது என்னை மிகவும் கவர்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் அந்தளவுக்கு மெனக்கெட்டு உழைக்கிறார்கள். இந்த நாவலில் உள்ள நாட்டார் வழக்காறு சொல்களுக்கு என சொற்பொருள் பட்டியலை (glossary) இறுதியில் தந்துள்ளதை .தா சொல்லலாம். இது ஜெயமோகனின் கணிசமான நாவல்களுக்கு இருந்தால் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என உடனே தோன்றியது (ஆனால் அதுவே பல பக்கங்கள் செல்லுமே!). எத்தனை பதிப்பாளர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்துகிறார்கள் சொல்லுங்கள்

சாருவின் வாசகர் வட்டத்தை நான் ஆரம்பத்தில் நிறைய கலாய்த்திருக்கிறேன். அது ஒரு வெட்டி கும்பல் என்கிற மனப்பதிவு எனக்கு இருந்திருக்கிறது. ஒரு clique போல, ஒரு cult போல இருக்கிறார்கள் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது அங்கிருந்து தோன்றியுள்ள இந்த பதிப்பக முயற்சியை எண்ணி சாரு நிச்சயம் பெருமைப்படலாம். ஒரு புத்தகம் வந்ததும் அதை கவனம் பெற செய்கிறார்கள். குறிப்பாக தமிழ் நாவல்களை ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லும் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என சாருவை கண்காட்சியில் நேரில் கண்டு சொன்னேன். தஞ்சைப் பிரகாஷின் நாவலொன்றின் ஆங்கில மொழியாக்கத்தை பிரசித்த ஆங்கில இந்திய நாவலாசிரியர் அனிதா நாயர் வாசித்து விட்டுப் பாராட்டினார் என பதிப்பாளர் காயத்ரி சொல்லிக் கேட்ட போது மகிழ்ந்தேன். மலையாளிகள் தம் மொழிக்கு இத்தனை நாளாய் செய்ததை நாம் இப்போது தமிழுக்கு செய்து அதை ஒரு மலையாளி எழுத்தாளரைக் கொண்டே பாராட்ட செய்கிறோம் பாருங்கள்.  
ராம் மற்றும் காயத்ரிக்கு என் வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு: 1) காலச்சுவடு கண்ணனின் முயற்சியில் நிறைய காலச்சுவடு படைப்பாளிகளின் நூல்கள் அண்மையில் மலையாளத்துக்கு செல்கின்றன. ஆங்கிலத்தில் செல்கிற அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் பாராட்டத்தக்கதே. பெருமாள் முருகனின் நாவல்கள் ஆங்கிலத்தில் மிக அழகாக வெளிவருவதையும் நாம் இப்போது பொறாமைப்படாமல் பெருமைப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
2) உயிர்மை வழியாக என்னுடைய ஆங்கில நூல்கள் இப்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. மனுஷ்யத்திரன் கவிதைகளின் என்னுடைய ஆங்கில மொழியாக்கமும் மார்ச் மாதம் வெளியாகிறது

3) சாரு, இமயம் உள்ளிட்ட மேலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உதிரியாக ஆங்கில மொழியாக்கத்தில் வந்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக அசோகமித்திரனின் கதைகளும் நாவல்களும் நல்ல மொழியாக்கத்தில் ஆங்கில வாசகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளன. அம்பையின் ஆங்கில புத்தகங்களைப் பற்றி குறிப்பிடவே தேவையில்லை.
அடுத்த கால் நூற்றாண்டில் தமிழ் நாவல்கள் பெருமளவில் ஆங்கிலத்துக்கு செல்லும் என்பது என் கணிப்பு. அதற்கான முதல் காலடிகளாக இவற்றைப் பார்க்கிறேன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...