நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல; கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, ஒரே துண்டை பலர் பயன்படுத்தாமல் இருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே. ஆனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமது மருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன்.
ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல. மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்ட நாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும். சமூக இணக்கத்தை ஒழிக்கும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அடுத்து, எந்த ரத்த பரிசோதனையும் செய்யாமல் ஒருவேளை யாருக்கு வேண்டுமெனிலும் கொரோனா தொற்று இருக்கலாம் எனும் கற்பனையின் அடிப்படையில் இந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோருவது ராத்திரியானால் ரத்தக்காட்டேரி உலவுகிறது, அதனால் பன்னிரெண்டு மணிக்கு மேல் வெளியே வராதீர்கள் என சில கிராமங்களில் நிலவும் நம்பிக்கையை போல உள்ளது.
WHO பரிந்துரைக்கும், ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் - வீட்டுக்குள்ளே மக்கள் பரஸ்பரம் தொடாமல் புழங்காமல் பல அடிகள் விலகி இருப்பது, வெளியிலும் யாரும் யாரிடத்தும் நெருங்காது வாழ்வது, நோய்த்தொற்று வெளியே தெரிந்தால் மக்கள் வெளியே வராதிருக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு போடுவது, வெளியே வந்தால் சிறை, அபராதம் போன்ற தண்டனைகள் - இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கு பொருந்தி வராது என நம்புகிறேன்.
முதலில், இந்த தொற்று ஏற்பட்டால் அது வெளியே தெரிய மூன்று வாரங்கள் ஆகும். அதற்காகத் தான் இப்போது ஒரு மாதம் நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்கின்றன; கல்லூரி, பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த ஒரு மாதத்தில் ஏற்கனவே நோய்த்தொற்றியவர்கள் புலப்பட ஆரம்பிப்பார்கள். அவர்களை, அவர்களிடம் புழங்கியவர்களை, அவர்கள் பயணித்த இடங்களில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை பண்ணி சிகிச்சை கொடுக்கலாம் என்பது திட்டம். ஆனால் இது ஒரு கற்பனையான கருதுகோளை முன்வைத்த நடவடிக்கை - அதாவது இம்மாத துவக்கத்தில் இருந்து நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் எனும் ஒரு கருதுகோள். ஒருவேளை இந்த மாதத்தில் வெளிப்படாத சிலரின் உடம்பில் இன்னமும் வைரஸ் இருந்து கொண்டிருந்தால்? அது அடுத்த மாதம் வெளிப்பட்டால்? அடுத்த மாதமும் மக்களை வீட்டுக்குள் சிறைவைப்பார்களா? அதற்கு அடுத்த மாதமும் வைரஸ் இருப்பதாகத் தோன்றினால் அதற்கு அடுத்த மாதமும் சிறைவைப்பார்களா? அப்படி நடக்காது என்றாலும் கேட்கிறேன் - வைரஸ் தொடர்ந்து வெளிப்பட்டபடியே இருந்தால்?
இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் மிக மிக சொற்பமாகவே இப்போதைக்குத் தெரியும். அதற்கான சிகிச்சை கூட சளி, ஜுரத்துக்கான சிகிச்சையான அறிகுறிகளை கட்டுப்படுத்துவது தானே ஒழிய வைரஸை ஒழிப்பது அல்ல. ஆக மக்களை விட அதிகம் கைவிடப்பட்ட நிலையில் நமது மருத்துவர்களும், அவர்களை நம்பியிருக்கும் அரசு எந்திரமும் உள்ளது. ஆகையால் அவர்கள் பேயோட்டுக்கிற சாமியார்களைப் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்; “அந்த பயங்கரமான வைரஸ் நம்மை நோக்கி அதோ வந்து கொண்டிருக்கிறது; எல்லாரும் ஓடுங்க ஓடுங்க” என டிவி டிவியாகத் தோன்றி கையை ஆட்டி சொல்கிறார்கள். வைரஸாக வந்து சிலரைக் கொன்று விட்டு மறைந்து விடும் என மருத்துவர்களும் ஆட்சியாளர்களும் நம்புகிறார்கள், பழைய காலத்தில் அம்மை பாதித்து மக்கள் சாகும் போது அது தெய்வகோபம் என நம்பியதைப் போல. இப்போது தெய்வகோபத்துக்குப் பதில் வைரஸின் கோபம். பலிகொடுக்கப்படும் ஜனங்களின் எண்ணிக்கையை முடிந்தளவுக்கு குறைக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இதெல்லாம் ஒரு கற்பனையின் அடிப்படையில் தான் நடக்கிறது - நம்மிடம் எந்த ஆதாரபூர்வமான தகவல்களும் இல்லை; நாம் இன்னமும் மக்களிடம் ரத்த பரிசோதனை பண்ணி அறியவில்லை. ஆக, பிரதமர் மோடியைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் 1326 மில்லியன் ஜனங்களும் கொரோனா வைரஸ் தொற்று கொண்டவர்களே. அத்தனை பேரையும் வீட்டுக்குள் பூட்டி வைக்கலாம் என்பது தான் அவருக்கு நம்முடைய மகத்தான மருத்துவர் குழு அளித்துள்ள பரிந்துரை என நினைக்கிறேன். அடக்கடவுளே!
வரும் மாதங்களில் நம்மால் வேலைக்கு செல்லாமல் சோற்றுக்குப் பணமில்லாமல், வாடகை கொடுக்க வழியில்லாமல் சமாளிக்க முடியுமா? சத்தியமாக முடியாது. இந்த ஒரு மாத கட்டாய விடுமுறை, கட்டாய சமூக விலக்கம் நமது பொருளாதாரத்துக்கு ஏற்படுத்துகிற பாரதூரமான விளைவுகளில் இருந்து நாம் மேலெழ எவ்வளவு காலம் எடுக்கும்? மூன்று நான்கு அல்லது ஆறு ஏழு மாதங்கள் இந்த தேசத்தால் வேலையே இன்றி ஓய்வில் இருக்க முடியும் என நான் நம்பவில்லை. அப்படியான நடவடிக்கை மற்றொரு டீமானிடைசேஷனாக நம் முதுகெலும்பை உடைத்து விடும்.
ஓரளவு முன்னெச்சரிக்கையுடன் நாம் மீண்டும் உற்பத்தியிலும் வணிக பரிவர்த்தனைகளிலும் ஈடுபவடுவதே இப்போதைக்கு நலம். அதற்கு முன் இந்த ‘ஊழிக்கால’ பிரச்சார மருத்துவர்களின் வாயில் யாராவது பிளாஸ்திரியைப் போட்டு ஒட்ட வேண்டும். சமூக வலைதளங்களிலும் டிவியிலும் இவர்கள் செய்கிற அலப்பறைகள் தாங்கவில்லை.
