முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசோகமித்திரனை வாசித்தல் (1)


இன்று வாசகசாலையின்முன்னோடிகள் வரிசையில்இன்று பேஸ்புக் லைவ்வில் அசோகமித்திரனின் எழுத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன். முதன்முதலில் லைவ்வில் பேசுவதால் நடுக்கமாய் இருந்தாலும் (கண்ணாடியைப் பார்த்துப் பேசுவதை விட மோசம்) ஓரளவுக்கு சமாளித்து விட்டேன். அடுத்த முறை பேசும் போது இந்த அனுபவம் கைக்கொடுக்கும். இந்த உரைக்கான என் குறிப்புகளை இங்கு பகிர்கிறேன்

1) அசோகமித்திரனை இலக்கிய வாசகர்களும் படிக்கலாம், பொழுதுபோக்கை நாடும் வாசகர்களும் படிக்கலாம். இது அவருடைய ஒரு தனித்துவம். அவருடைய பெரும்பாலான கதைகளுக்கு இது பொருந்தும். இந்த இயல்பை நீங்கள் அவரை சு.ரா, நகுலன், ,நா.சு, ஆதவன், மௌனி போன்றோருடன் ஒப்பிட்டால் இது துல்லியமாக விளங்கும். இலக்கிய எழுத்துக்கு என்று ஒரு தனி மொழி, தனி நுண்ணுணர்வு, வாழ்க்கை நோக்கு, நம்பிக்கைகள் இருந்தன. கதை என்பதை மொழிக்கும் மனத்துக்குமான ஒரு உறவாடல் என இலக்கியவாதிகள் பார்த்தனர்; கலை என்றால் அது பயிற்சியை, வாசிப்பை, மனநுட்பத்தைக் கோரும் ஒரு செயல்பாடு என நம்பினர். எப்படி ஒரு கார் வாங்கியவுடன் அதை ஓட்ட முடியாதோ (ஓட்டுநர் உரிமம், ஓட்டுவதற்கான பயிற்சி, இன்ஷுரன்ஸ் எடுக்க வேண்டும்) இலக்கியமும் உடனடியாய் யாரும் படிக்க முடியாது. .தா., சு.ராவின்பல்லக்குத் தூக்கிகள்கதையில் விவரணை, உரையாடல் என ஒவ்வொன்றும் குறியீட்டு தொனியை பெறுகிறது; அதிகாரம் எப்படி உடல் மற்றும் மொழி பரிவர்த்தனையில் உருக்கொள்கிறது என்பதை சித்தரிப்பதே சு.ராவின் நோக்கம், வெறுமனே ஒரு கதையை சுவாரஸ்யமாக நம்பும்படியாக சொல்வதல்ல. அக்கதையின் பல நிலையிலான அர்த்தக் கட்டுமானங்கள் நுட்பமான, பயிற்சி பெற்ற வாசகனுக்கே திறக்கும். அது அவ்வாறே கட்டப்பட்டுள்ளது. சு.ராவின் ஆரம்பகால கதைகளை அவரது எண்பது, தொண்ணூறுகளின் கதைகளுடன்  ஒப்பிட்டால் அவர் இலக்கிய கதையை ஒரு உயர் தொழில்நுட்ப சங்கதியாகக் கருதி வளர்த்தெடுத்து வந்துள்ளதை அறியலாம். கலையில் தொழில்நுட்பம் இப்படியென்றால், அதன் அரசியல், நம்பிக்கைகளும் பொதுநீரோட்டத்துக்கு எதிராகவே இருந்தது. இதுவும் பிரக்ஞைபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஜி.நாகராஜனின் நாவல்கள் இதற்கு ஒரு உதாரணம். அவரது கதையுலகம் தெளிவாகவே மத்திய வர்க்க விழுமியங்களில் இருந்து விலகி நின்றது. (ஜி.நாகராஜன் தன் வாழ்வையும் அவ்வழியில் செலுத்தியது வேறு விசயம்). இன்று வரை தொழில்நுட்ப ரீதியிலோ அரசியல் சார்ந்தோ இலக்கியத்தை தனித்த தடமாக காட்டுகிறவர்கள் சிறுகதையாளர்களில் சு.ராவின், ஜி.நாகராஜனின் வாரிசுகளாக பின்நவீன இலக்கியத்திலும் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன், தி.ஜாவைப் போல நடுநிலை இலக்கிய தரத்துக்கும் இன்று ஒரு தொடர்ச்சியைப் பார்க்கிறோம். இவர்களில் இருந்தெல்லாம் அசோகமித்திரன் விலகி தனித்து நிற்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படி?


அசோகமித்திரன் தான் கலையைப் படைப்பதாகக் கோரியதில்லை. தான் வாழ்ந்ததை எழுதியதாகவே திரும்பத் திரும்ப கூறி வந்தார். அவருடையதண்ணீர்நாவலைப் பற்றி அவரிடம் பேச முயன்றால் சென்னையில் நிகழ்ந்த தண்ணீர்ப் பஞ்சத்தின் போது கிடைத்த அனுபவங்களையே எழுதியிருக்கிறேன் எனக் கூறுவார். தண்ணீர் ஒரு குறியீடு எனும் வாதத்தையே அவர் விரும்ப மாட்டார். அவரதுபுலிக்கலைஞன்கதையையும் அப்படியே அவர் முன்வைத்தார். அவரது கதைகளை அவர்இது கலைஎனும் தோரணையின்றிஇது நான் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரு எளிய அனுபவம்எனும் தோரணையுடன் சித்தரிக்க முன்னெப்போதும் இல்லாத ஒரு வெளிச்சம், புழங்கும் இடம் வாசகனுக்கு அவரது கதைகளில் கிடைத்தது. அது நேர்மையான வெளிப்படையான கதைகூறல் என்பதாலே பொது வாசகர்களுக்கு அசோகமித்திரனை அணுகுவதில் எந்த தடையும் என்றும் இருந்ததில்லை. அறிமுக வாசகர்களை நான் எப்போதும் அசோகமித்திரனை வாசிக்கும்படி கோருவேன். அவர்களை அவர் ஒருபோதும் ஏமாற்றமாட்டார். அவர் உணர்த்துகிற நுட்பமான ஒரு சிக்கலும் அவர்களுக்குப் புரியும், அவரது நகைச்சுவையும் ரசிக்கத்தக்கதாக இருக்கும், முக்கியமாய் தாம் ஒரு அசல் கதையை படித்ததாய் அவர்கள் நம்புவார்கள்

2) அசோகமித்திரனின் கதை வடிவம் தனித்துவமானது என்றாலும் அதற்கு ஒரு மரபு உள்ளது - அமெரிக்க மினிமலிச எழுத்து மற்றும் ஐரோப்பிய இருத்தலிய இலக்கியம் அவரை பெருமளவு பாதித்தது. ஆனால் தன்னுடைய சமகால நவீனத்துவ எழுத்தாளர்களைப் போலன்றி அவர் மினிமலிச, இருத்தலிய எழுத்தை பிரதியெடுக்கவோ அப்படியோ பின்பற்றவோ இல்லை. அவர் அதன் அழகியல் மற்றும் தத்துவத்தை இந்திய சூழல், பண்பாடு, தன்னுடைய அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டார். அவர் ஒரு இந்திய இருத்தலிய கதையை உருவாக்கினார். இது ஐரோப்பிய இருத்தலிய எழுத்தில் இருந்து, இந்திய நவீனத்துவ எழுத்தில் இருந்து தனித்திருந்தது. 2012இல் நான் இதைஅசோகமித்திரனிடம் வன்முறை உண்டா?” எனும் கட்டுரையில் (“அம்ருதாஇதழில் வெளியானது) விவாதித்தேன். அதை அசோகமித்திரன் படித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். தன்னுடைய பாணியில் “V.Good - A. Mitran” என. பின்னர் அவரை நான் சந்தித்து உரையாடிய போது அக்கட்டுரையை பாராட்டினார். முன்பு ஒருமுறை சு.ரா அசோகமித்திரனை விமர்சிக்கையில் அவருடைய எழுத்தில் தீவிரம் போதவில்லை, “வன்முறைகாத்திரமாக இல்லை எனக் கூறியது அவரைக் காயப்படுத்தியது. அதனாலே அவர் அன்று ஒரு மனநிறைவை அடைந்தார் என நினைத்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...