3) மினிமலிச எழுத்து என்றால் என்ன, நவீனத்துவ சிறுகதை, நாவலின் அழகியல் என்றால் என்ன, இருத்தலியல் என்றால் என்ன எனப் புரிந்து கொண்ட பின் அந்த சட்டகத்தில் வைத்துப் பார்த்தாலே அசோகமித்திரனின் தனித்துவமான பங்களிப்பு நமக்கு விளங்கும். அடுத்து அவர் வலியுறுத்திய அன்பு, கருணை மற்றும் மானுடநேயம். பெண்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவம். அசோகமித்திரன் சொல்ல வந்த சேதி இதில் தான் இருக்கிறது என நினைக்கிறேன். தன்னைப் பிறரிடத்தில் வைத்து பார்ப்பது, அன்றாட வாழ்வில் “தான்” அழிவது, “தான்-மற்றமை” என இருமையை கடப்பது - அவருடைய கணிசமான பாத்திரப் படைப்புகள் போய் சேர்வது இந்த இருமையற்ற, ஈகோவற்ற வெளியில் தான். அது குடும்ப பாசப்போராட்டங்களில், வேலைக்கான, உய்வுக்கான போராட்டங்களில் நடக்கலாம். சின்னச்சின்ன அன்றாடத் தேவைகளுக்கான பெரிய அலைச்சல்களில் நடக்கலாம். இந்த முதிர்ச்சியை அசோகமித்திரன் உருவகமாக சித்தரிப்பார் - தண்ணீருக்கான அன்றாடப் போராட்டம் வாழ்க்கையில் ஈரத்துக்கான தேடலாவது (“தண்ணீர்”), பிறரது தத்தளிப்புகள் மற்றும் இடறல்களை மதிப்பிடாமல் அப்படியே ஏற்பது, வாசலில் நின்று ஒட்டுக்கேட்கிற ஒருவனைப் போல (“ஒற்றன்”).
4) இந்த உருவக / குறியீடு பயன்பாட்டு விசயத்திலும் அசோகமித்திரன் தனித்துவமானவர் - அவர் இவற்றை உருவகம் / குறியீடு போலவே உணர விடுவதில்லை. நமது வாழ்வில் எப்படி பொருட்கள், நிகழ்வுகள், செயல்கள், புலனனுபவங்கள் வேறோ ஏதோ ஒன்றை மறைமுகமாக புலப்படுத்தியபடியோ இருக்கின்றனவோ (ஒரு குழந்தையின் மெத்து மெத்தென்ற கை நமக்கு வாழ்க்கையில் அப்படி எதையோ உணர்த்துகிறது, ஒற்றை ஒளிக்கதிர் இருளைப் பிளந்து வரும் போது அதன் அழகை மெய்மறந்து ரசிக்கிறோம், இருளற்றது அழகு எனும் உள்ளார்ந்த புரிதலினால்). இந்த மனநிலையில் தான் அசோகமித்திரன் உருவகங்கள் / குறியீடுகளை தன் கதைகளில் பயன்படுத்துகிறார். எந்த கட்டத்திலும் அவை எழுத்தாளனாய் உருவாக்கப்பட்டவை எனும் உணர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். அப்படி செய்து அவரது கதைகளை நிஜ அனுபவங்கள் போல தொனிக்க வைக்கிறார். இவ்விசயத்தில் அசோகமித்திரனை எந்த நவீன எழுத்தாளனுடனும் ஒப்பிட முடியாது என நினைக்கிறேன். ஹெமிங்வேயின் குறியீட்டுக் கதைகளில் கூட ஒரு வினோதத்தன்மை இருக்கும், ஆனால் அசோகமித்திரன் தன் குறியீடுகளை அவ்வளவு சாதாரணமாய் வைத்திருப்பார். “புலிக்கலைஞன்” நல்ல உதாரணம். நமக்கு அந்த கலைஞனிடத்து இரக்கம் ஏற்படும்படியாய் எழுதியிருப்பார். உருவகங்கள் மீது பொதுவாக வாசகனுக்கு இரக்கம் வராது. அசோகமித்திரன் இப்படி செய்து அவன் உருவகமே அல்ல என நினைக்க செய்வார் - அபாரமான சாதனை.
5) கடைசியாக, அசோகமித்திரனின் இந்திய இருத்தலியம். இருத்தலியம் ஒரு மேற்கத்திய கோட்பாடு. ஆனால் நமது பண்பாட்டிலேயே அதற்கு வேர்கள் உண்டு. உ.தா., கர்ணனின் கதை. கர்ணனுக்கு இறுதி வரை காலமோ சமூகமோ நீதி வழங்குவதில்லை. அவனாகத் தான் அதைத் தேடிப்பெற்றுக் கொள்கிறான். அப்போதெல்லாம் காலம் அவனுக்கு இரு தேர்வுகளை அளித்து இரண்டையும் அவனுக்கு எதிரானதாக மாற்றி விடும் - அவன் அர்ஜுனனைக் கொன்று நண்பன் துரியோதனனைக் காப்பாற்றலாம், அல்லது அர்ஜுனனைக் கொல்லாமல் தான் உயிர்விட்டு தன் சகோதரனான அர்ஜுனனைக் காப்பாற்றி தாய்க்குக் கொடுக்க வாக்குறுதியை நிறைவேற்றலாம். ஆனால் அப்போது அவன் தன் நண்பனைக் காப்பாற்றத் தவறியிருப்பான். அவன் இரண்டாவதைத் தேர்கிறான். ஆனால் முதலாவதை தேர்ந்திருந்தாலும் அவனுக்கு நிம்மதி இருந்திருக்காது. இருத்தலியம் மனித வாழ்க்கையின் அபத்தமாக இதைத் தான் சுட்டுகிறது. Myth of Sisyphus கட்டுரையில் ஆல்பர்ட் காமு இதைத்தான் வாழ்வின் அபத்தமாகக் குறிக்கிறார் - கிரேக்க வீரனான சிசிபஸ் ஒரு சிகரத்தின் உச்சிக்கு ஒரு உருளைக்கல்லை உருட்டிக் கொண்டு போகிறான், ஆனால் மேலே போனதும் அது கீழே உருண்டு வந்து விடும். அவனால் தடுக்கவே முடியாது (அப்படி ஒரு சாபம்). ஆனாலும் அவன் விடாமல் போராடுகிறான். நவீன யுகத்தில் மனிதனுக்கு போராடுவது ஒன்றே தேர்வு, ஜெயிப்பது அல்ல என காமு சொல்கிறார்.
அசோகமித்திரனின் பெரும்பாலான கதைகளில் ஒரு இந்திய இருத்தலியம் உண்டு - இங்கு எளியோன் ஒருவன் பெரும் அமைப்புகளின் சந்து பொந்துகளில் புகுந்து ஓடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறான், அவன் தோற்கிறான், ஆனால் இந்த போராட்டத்தில் அவன் தன் துயரங்களை மறக்கிறான் - “பூனை” சிறுகதையில் பூனையிடம் இருந்து தன் தயிரைக் காப்பாற்ற வேண்டும் எனும் ஆவேசம் ஒரு ஏழை ஓட்டல் பணியாளனுக்கு வாழ்க்கையின் பெரிய அவலங்களில் இருந்து தப்பிக்க உதவுகிறது. ஆம், தயிருக்காக அவன் உயிர் விடுவது அபத்தமே, ஆனால் அதுவே அவனுக்குள்ள ஒரு தேர்வு. வேறு பல நவீனத்துவ எழுத்தாளர்கள் இத்தகைய அபத்தத்தை தத்துவார்த்தமாக / இலக்கியத்தனமாக கையாண்ட போது (சு.ராவின் “ஜன்னல்” / “பல்லக்குத்தூக்கிகள்”), அசோகமித்திரன் அன்றாட தமிழ் வாழ்வின் எளிய சித்திரங்களைக் காட்டுவதன் வழி இருத்தலியத்தை இந்திய கோணத்தில் புதிதாக உருவாக்கினார் - இந்தியர்கள் கல்லை சிகர உச்சிக்கு உருட்டுவதைப் போன்ற பெரிய காரியங்களைப் பண்ணுவதில்லை; ஒரு குடம் தண்ணீருக்காக காத்திருப்பதே அவர்களுக்கு ஒரே கனவு. அந்த தண்ணீர் கழிவு நீர் எனத் தெரிய வரும் போது கோபப்படாமல், கவலையில் சரியாமல் அதைக் கொட்டி விட்டு அடுத்த குடத்துக்காக காத்திருப்பது அசோகமித்திரனின் கதைகளில் அவர்கள் இருத்தலியல் சிக்கலை எதிர்கொள்ளும் முறை. இந்த காத்திருப்பினூடே அவர்கள் தம் இருப்பை மறக்கிறார்கள். குடும்பத்தினரின், நண்பரின், அந்நியரின் துயரங்களை அறிந்து கைகொடுப்பதனூடே அவர்கள் இருப்பின் அபத்தத்தை கடக்கிறார்கள் என அசோகமித்திரன் காட்டினார். இதை அவர் தத்துவத்தின் வழியாக அன்றி கதைமொழியின் ஊடே செய்தார் என்பது தான் சிறப்பு.
