| இது யாரெனத் தெரிகிறதா? ‘படிக்காத மேதை’ நம் பாரதப் பிரதமர் |
இந்த புத்தக தினத்தில் கோகுல் பிரசாத் தனது பேஸ்புக் பக்கத்தில் கலை என்பது காலங்காலமாக ஒரு மேற்தட்டு பொழுதுபோக்கு மட்டுமே, அதனால் மனித குலத்துக்கு எந்த மேன்மையும் இல்லை என ஒரு குறிப்பை மீள்பதிவு செய்திருந்தார்:
“விதிவிலக்குகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே கலை என்பது மேட்டுக்குடியினரின் ஈடுபாடு / செயல்பாடாகவே இருந்து வந்துள்ளது. பொருளாதார கவலைகள் அற்றவர்கள் அல்லது தன்னிறைவு அடைந்தவர்கள் தத்தம் உபரி நேரத்தில் அனுபவித்து மகிழ, வாழ்வைப் பயனுள்ளவாறு கழிப்பதாக நம்பி மகிழ்ச்சியில் திளைக்க, கலைச் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டன. அப்பட்டமாக சொல்வதென்றால் வெட்டியாக இருந்த பொழுதுகளில் உலகியல் அபத்தங்கள் பற்றிய கவலைகளில் தங்களை ஆழ்த்திக் கொண்டார்கள். ஞான விழிப்புணர்வு இன்றி ஆட்டு மந்தைகளாக மக்கள் வாழ்ந்து மாண்டு போவது குறித்து வருத்தப்பட்டார்கள். உயரிய நோக்கம் இல்லாமல் உழலும் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பு தமக்கிருப்பதாகக் கருதினார்கள்.
இந்த மேட்டுக்குடி வர்க்கமே பரவலாக கல்வி கற்றிருந்தது மற்றொரு காரணம். அவர்களில் சிலரே சிந்தனைப் போக்குகளை மடை மாற்றினார்கள். உரிமைகளுக்காக போராடினார்கள். தத்துவச் சிக்கல்களுக்கு உள்ளானார்கள். மாடியில் நின்றபடி மற்றவர்களை குனிந்து பார்த்தார்கள். ரூஸோ, நீட்சே, ஹெமிங்வே, மில்டன், தாகூர், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன், டா வின்சி என நாம் கொண்டாடும் பல மேதைகள் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். தனிப்பட்ட முறையில் ஆர்வமும் பொருளாதார வசதியும் இருந்ததால் வேறு கவலைகள் இன்றி விருப்பத்திற்குரிய விஷயங்களில் கவனம் செலுத்தினார்கள். ஜனநாயகமும் புரட்சியும் கூட இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் பெற்றுத் தரப்பட்டது தான்.
காஃபி ஹவுஸ்களிலும் சீட்டாட்டக் கிளப்களிலும் அமர்ந்து சிகரெட் ஊதியபடி இலக்கியம் பேசினார்கள். அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். மேன்மையான ஒன்றை இழக்கிறோமோ எனும் கவலை 'இல்லாதவர்களிடம்' குறைவு. புரிகிறதோ இல்லையோ 'இருப்பவருக்கு' இன்னும் இன்னும் வேண்டும் எனும் மனப்பான்மை.
உருஷ்யப் புரட்சிக்குப் பிறகு தான் மத்திய வர்க்கத்தினரும் வறுமையில் உழன்றவர்களும் கலை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். பொருளாதார சுதந்திரம் அற்றவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே சோர்ந்து வீழ்ந்தார்கள். விதிவிலக்குகளை விரல் விட்டு எண்ணி விடலாம். வரலாற்று நோக்கில் கலையின் பங்களிப்பு இன்றி நாம் இன்று அடைந்திருக்கும் மேன்மையை உரிமையை பண்புகளை பெற்றிருக்க மாட்டோம். ஆனால் அந்த குறிப்பிட்ட எழுத்தாளருக்கு ஓவியருக்கு இன்னபிற படைப்பாளிக்கு கலைச் செயல்பாடுகள் உதவுகின்றனவா என்பது லௌகீகப் பார்வையில் அளவிட முடியாததாகவே இருக்கிறது. முதலில் சோறு. அப்புறம் தான் மற்றதெல்லாம்.
தர்க்காவ்ஸ்கி இன்னும் ஒரு படி மேலே போய் கலையானது மனித குலத்தை எப்போதும் உய்விக்காது என்கிறார். நான்காயிர ஆண்டு கால வரலாற்றில் கலையினால் மனிதர்கள் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என அறிவிக்கிறார். கலை நம்மை மேன்மையுறச் செய்யும் என்பது உண்மையானால் இத்தனை போர்களும் கொலைகளும் வெறுப்பும் கீழ்மையும் எதற்காக எனக் கேட்கிறார். கலா இரசிகர்களும் சிருஷ்டி கர்த்தாக்களுமே தத்தம் கீழ்மைகளை உதறி எழ முடியாதவர்கள் எனும் போது கலைக்கும் மனித மனத்திற்கும் குறுக்கே வலுவான சுவர் இருக்கிறது என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.
மனத்தின் விந்தைகளுள் ஒன்றான Compartmentalization மேன்மையான கலையையும் மற்ற அன்றாட செயல்பாடுகளையும் தனித்தனியாக பிரித்து ஒன்றோடொன்று தொடர்பின்றி வெவ்வேறு தளங்களில் இயங்கக் காரணமாகிறது. இந்த வசதியினால் தூய்மையும் கயமையும் அருகருகே படர்ந்திருந்தாலும் மன சாட்சி, இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப சமாதானம் கொள்கிறது. உறுத்தல் எதுவும் இன்றி நிம்மதியாக வாழ வழி வகுக்கிறது. கலையினால் மனிதரை உய்விக்க முடியாது தான் போல. மகிழ்ச்சிக்காகவும் திருப்திக்காகவும் எதையோ தேடி அலைவுறுகிறோம் எனும் அகங்கார கொந்தளிப்புக்காகவும் நூல்களை வாசித்து - படங்களைப் பார்த்து விட்டு சாக வேண்டியது தான்.
உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்.”
இது ஒரு முக்கிய உரையாடல். கலைகள் யாருக்கானது எனும் கேள்விக்கான ஒரு பதில் இது - கலை எப்போதும் பணம் படைத்த உயர்த்தட்டினருக்கு, அன்றாட கவலைகள் இல்லாதவர்களுக்கானது என்பது. என்னால் சில விசயங்களில் கோகுலடன் உடன்பட முடியவில்லை.
இரண்டு விசயங்கள்:
1) அவர் சொல்வதைப் போல ஷேக்ஸ்பியர், ஹெமிங்வே, நீட்சே ஆகிய மேதைகள் செல்வ செழிப்பான பின்புலத்தில் பிறந்தவர்கள் அல்ல. மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தில் பிறந்து பின்னர் உழைப்பால் முன்னேறியவர்கள். சொல்லப்போனால் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் ஐரோப்பாவில் மத்திய வர்க்கமே இலக்கியம், கலைகள் நோக்கி நகர்ந்தது. இலக்கியம் கூட இடதுசாரிகள் பூர்ஷ்வா என அழைக்கும் ஒரு வர்க்கம் இவர்கள். இவர்கள் மேற்தட்டினர் மட்டுமல்ல, மத்திய வர்க்கமும் தாம்.
அச்சு எந்திரப் புரட்சி இதை ஐரோப்பாவில் சாத்தியமாக்கியது. நிறைய புத்தகங்கள், கிளாசிக்குகள் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது. பெருவாரியான மக்கள் கலையில் பங்கேற்க வெகுஜனக் கலைகள் வளர்ந்தன. உயர்கலை-வெகுஜனக்கலை எனும் இந்த இருமை கூட பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோன்றியது என ரொலன்ட் பார்த் சொல்கிறார் (வாசிக்க: The Writer on Holiday கட்டுரை). அதுவரை எல்லா கலைகளும் ஒன்றே. ஷேக்ஸ்ப்பியரை அவர் காலத்தில் யாரும் மேதையாக, கலைஞனாகக் காணவில்லை. பாமரர்கள் தாம் அதிகமும் அவரது நாடகங்களைக் காணக் குழுமினர். இன்னொரு பக்கம் உயர்த்தட்டினரும் இருந்தார்கள். ஷேக்ஸ்பியர் இருசாராருக்கும் திருப்தியளிக்கும்படி நகைச்சுவை, நடனம், கீழ்மட்டமான உரையாடல்கள், உயர்தரமான தத்துவக் கேள்விகள், இருப்பியல் பிரச்சனைகள், அன்றாட அரசியல் பிரச்சனைகள் என பல விசயங்களை தன் கதைகளுக்குள் கொண்டு வந்தார். இன்றைய உயர்தர மாஸ் சினிமாவாக அன்றைய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இருந்தன. பிரான்ஸிலும் ரஷ்யாவிலும் கூட கலை, இலக்கியம் வெகுமக்களுக்காகவே இருந்தது. தல்ஸ்தாயின் நாவல்கள் கூட பெருவாரியாய் விற்றன. விக்டர் ஹ்யூகோ மிக பிரபலமாக இருந்தார். எழுதியே வாழ்ந்தார்கள். எந்திரமயமாக்கல் வந்த பிறகு இலக்கிய வகைமை தனியாக பிரிக்கப்பட்டு அதற்கான வாசகர்களும் எழுத்தாளர்களும் தோன்றினார்கள். மேற்தட்டுக் கலை என இலக்கியம் / உலக சினிமா தோன்றியது இந்த காலகட்டத்தில் தான். அப்போதும் கூட ஜான் அபிரகாம் போன்றவர்கள் இதை வெகுமக்கள் தளத்துக்கு நகர்த்த முயன்றதுண்டு (“அம்ம அறியான்”).
2) கலை, இலக்கியம் மக்களை உய்விப்பதற்காக எனப் பேசியவர்கள் மானுடவாதிகள் (humanists) மட்டுமே. அது பெருவாரியான பார்வை அல்ல. அரிஸ்டாட்டில் தனது Poetics நூலில் கலை (துன்பியல் நாடகம்) மனிதனுக்கு நெருக்கடி, துயரத்தில் இருந்து ஒரு தற்காலிக உளவியல் விடுதலை அளிக்கும், ஆனால் அவனை மேம்படுத்தி உயர்த்தாது என்றார். அரிஸ்டாட்டிலைப் பின்பற்றியே இருபதாம் நூற்றாண்டு வரை பல்வேறு விமர்சகர்கள் இலக்கியத்தை வடிவம் சார்ந்து பரிசீலித்து கோட்பாடுகளை வகுத்ததால் “உய்வித்தல்” எனும் ஒழுக்க நோக்கம் பெருவாரியாக கலைகளுக்கு அளிக்கப்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் கலை மகிழ்ச்சி அளிப்பதற்கு, மனம் இளைப்பாறுவதற்கு, மதப்பிரச்சாரத்துக்கு, ஒழுக்க அறிவுறுத்தலுக்கு என பார்க்கப்பட்டது. அதன் பிறகு பிராயிடும், மார்க்ஸும் பிரசித்தமாக கலையின் உளவியல், சமூக பொருளாதார விடுதலை சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. அடுத்து பெண்ணியம், மொழியியல், சமூகவியல், இருத்தலியல் என விமர்சனம் வளர்ந்தது. இந்த பின்னணியில் கலை மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பது மதத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றிய ஒரு பார்வையே: விஞ்ஞானம் மற்றும் உளவியலால் மக்கள் மதத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள். “கடவுள் இறந்து விட்ட” நிலையில் மக்கள் தறிகெட்டுத்திரிவார்கள் என பயந்த மானுடவாதிகள் மக்களை உய்விக்கும் ஒரு (மதத்துக்கான) பதிலியாக கலை, இலக்கியத்தை முன்னெடுத்தனர். கடவுளுக்கு நிகராக எழுத்தாளனை உயர்த்த நினைத்தனர். இந்தியா போன்ற காலனிய நாடுகளில் ஆங்கில இலக்கியம் படிப்பது பாமரர்களுக்கு உயர்பண்பாட்டை போதிக்கும் என மெக்காலே போன்றவர்கள் பரிந்துரைத்தது இந்த பின்னணியிலே. இன்றும் கூட ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாடினால் அவர் படித்தவர், நாகரிகமானவர், பண்பட்டவர் என நினைக்கும் போக்கு உள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மானுடவாதிகள் முன்னெடுத்த அந்த “ஏழைகளுக்கு இலக்கியம் கற்பித்து உய்ய வைப்போம்” புரோஜெக்டின் ஒரு மோசமான விளைவு தான். இங்கிலாந்தில் அந்த காலத்தில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் மதம் மட்டுமல்ல புதிய லிபரல் படிப்புகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. அதை எதிர்க்கிறவர்கள் இலக்கியத்தை ஏன் கற்பிக்கணும் போன்ற கேள்விகளை ஏழுப்ப அதற்குப் பதிலாக கலைகள் மனிதனை உய்விக்கும் எனும் நியாயத்தை முன்வைத்தனர் கல்வியாளர்கள். அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப் பட்டு மனிதக் கலையியல் (humanities) பாடங்கள் அங்கு மட்டுமல்ல உலகம் முழுக்க ஏற்றுமதியாயின. இளங்கலை இலக்கியம், இசை, ஊடகம், வரலாறு போன்ற படிப்புகள், அவற்றுக்கு நேரடியான பொருளியல் உற்பத்தி மதிப்பு இல்லையெனினும், பரவலாயின.
அப்படித் தான் கலை இன்றிருக்கும் கலையானது. இலக்கிய எழுத்தாளன் மக்களிடம் இருந்து தனிமையானான். இலக்கிய படைப்புகளைக் கண்டு மக்கள் விலகிச் சென்றனர். அவர்களை வெகுஜன கலைவடிவங்களும், பின்னர் சமூகவலைதளங்கள் மற்றும் போதை வஸ்துக்கள் இழுத்து தம் வசம் வைத்துக் கொண்டன.
அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள்!