கொத்துக்கொத்தாய் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதை ஆதரித்து எழுதுபவர்களைக் கண்டால் மூஞ்சியில் காறி உமிழத் தோன்றுகிறது (முடிந்தால் கொரோனா கிருமிகளுடன் சேர்த்து). நிறுவனத்துக்கு போதிய லாபம் இல்லை என்பதெல்லாம் ஒரு நியாயமான காரணமா சொல்லுங்கள்? ஒருவருக்கு வேலைத்திறன் இல்லை அல்லது அவர் ஒரு பெரும் குற்றத்தை (திருட்டு, பாலியல் அத்துமீறல்) செய்து விட்டார் எனும் காரணங்களுக்காக மட்டுமே ஒருவரை வேலை நீக்கம் செய்ய வேண்டும் எனும் கடுமையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டும். ஏதோ ஜெஸ்ஸி கார்த்திக்கை கழற்றி விடுவதைப்போல ஒரு ஊழியரை வீட்டுக்கு அனுப்புவது மனித உழைப்பை மலினப்படுத்தும் செயல்.
சிலர் பணம் முதலீடு செய்கிறவருக்கு தனது தொழிலை தன் விருப்பப்படி நடத்தும் உரிமை வேண்டும் என்கிறார்கள். ஒருவேளை எந்திரமயப்பட்ட சில தொழிற்சாலைகளுக்கு இது பொருந்தலாம். பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் அதில் எழுதுகிறவர், நிருபர், எடிட் செய்கிறவர், பிழை திருத்துகிறவர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் உழைப்பு தான் அதை உருவாக்குகிறது. இன்று அச்சு ஊடகம் இன்றி முழுக்க இணையத்திலே நீங்கள் செய்திப் பத்திரிகையை, பொழுதுபோக்கு சேனல் ஒன்றை நடத்த முடியும். அங்கு வேலை செய்ய ஆள், அவருக்கான கணினி, படக்கருவி தவிர வேறென்ன பெரிதாய் வேண்டும்? விகடனை எடுத்துக் கொண்டால் அந்த பிராண்ட் தவிர அந்த நிறுவனத்தின் பங்களிப்பு என ஒன்றுமேயில்லை. ஒரு கணினினியையும் ஐபோனையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட அவர்களின் எல்லா பணிகளையும் வீட்டிலிருந்தே ஒருவர் செய்ய முடியும் எனும் போது? விகடன் யுடியூப் தளத்தில் ஒரு காணொளியை பத்து லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்றால் அந்த காணொளி விகடன் நிர்வாகத்தின் மேலாளர்களாலா அல்லது சி.இ.ஓவாலா உருவாகிறது? இல்லை, அதில் பேசுபவர்கள், நடிப்பவர்கள், அதை எடிட் செய்கிறவர்கள், அதை திட்டமிட்டு படம்பிடிப்பவர்களால். அந்த காணொளியின் விளம்பரத்தால் கிடைக்கும் லாபம் முழுக்க முழுக்க அதற்காக ஊழியர்களால் செலுத்தப்படும் உழைப்பினால் தோன்றுவதே. முதலீடு செய்கிற ஒரு நிறுவனத்தின் ஒரே பங்களிப்பு அவர்கள் லாபம் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் பெயரில் இவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் தருகிறார்கள் என்பதே. அது கூட முதலாளியின் பணம் அல்ல, நீங்கள் சம்பாதித்துக் கொடுக்கிற லாபத்துக்கான முன்பணத்தின் சிறுபகுதி மட்டுமே.
அந்த சம்பளமும் இப்போது நிரந்தரமில்லை எனும் போது முதலாளி எனும் பெயரே அர்த்தமிழக்கிறது - உழைப்பின் பலனை (உபரியை) முழுக்க அவர்கள் உறிஞ்சி ஏப்பம் விடுகிறார்கள், இடைத்தரகரைப் போல செயல்பட்டு உங்கள் கோமணத்தை உருவி இளிக்கிறார்கள் என்பது தவிர. ஆனால் இந்த மேலாண்மை கொள்கை படித்த முதலாளித்துவ கூலிகளால் நாம் எந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்றால் இது ஒரு பகற்கொள்ளை என்பதே நமக்குப் புரிவதில்லை. பகற்கொள்ளையை ஒரு மேம்பட்ட சமூகப்பங்களிப்பாய், வணிக மேதைமையாய் காணத் தலைப்படுகிறோம். வேலை நீக்கம் நடக்கும் போது ஐயோ பாவம் அந்த முதலாளி, எவ்வளவு நஷ்டமடைந்திருந்தால் அவர் இப்படி செய்திருப்பார், அவரைப் போன்றவர்கள் இல்லாவிடில் நம் பொருளாதாரம் சரிந்து விடாதா? என்றெல்லாம் விசனிக்கிறோம். அட, வெங்காயமே!
இன்று ஊடகங்களில் என்ன நடக்கிறது? எடிட்டர்களும் நெறியாளர்களுமாக வலதுசாரிகளுக்கு எதிராக சமூகவலைதளங்களில் எழுதுகிறவர்களை குறிவைத்து சங்கிகள் நிர்வாகங்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்து அவர்களை வேலையில் இருந்து தூக்க செய்கின்றன. ஒரு ட்வீட்டுக்காக மக்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவது எல்லாம் நடப்பது இப்படித்தான். இதன் மூலம் சங்கிகளுக்கு ஆதரவாக இயங்கும்படி ஊடகங்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இப்படி, நான் அறிந்தவரையில், 90% வேலை நீக்கங்கள் ஒன்று நிர்வாகத்தின் தவறான முடிவுகளால் நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டத்துக்கு ஈடுகட்டவோ அல்லது அற்ப அரசியலுக்காகவோ தாம் நிகழ்கின்றன, ஒரு ஊழியருக்குத் திறனில்லை, அவர் ஒழுங்கீனமாக இருக்கிறார், நிறுவனம் லாபமின்றி அல்லாடுகிறது என்பதற்காக அல்ல.
எந்த நிறுவனமும் ஒரு சமூக இயக்கம். முதலீட்டினால் அல்ல உழைப்பினாலே ஒரு நிறுவனம் வளர்ந்து லாபம் கொழிக்கிறது எனும் போது அதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். வெளியில் இருந்து இதைப் பார்ப்பவர்களும் இது ஏதோ முதலாளி தன் வைப்பாட்டி குடும்பத்தை கையாள்வது போன்ற அந்தரங்க விசயம் என நோக்குவதை நிறுத்த வேண்டும். இது ஒரு சமூகப்பிரச்சனை. வேலை நீக்கம் என்பது உழைப்பாளியை அவனது உழைப்பிடம் இருந்து பிரிக்கிற விசயம், ஒரு தாயை தன் குழந்தையிடம் இருந்து பிரிப்பதைப் போல. ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு காரணத்துக்காக ஒரு ஊழியரை விலக்குவதை எப்போதுமே நாம் ஆதரிக்கக் கூடாது. தனியார் என்றாலே இப்படித்தான் என கண்டுகொள்ளாமல் விடவும் கூடாது. இந்த சமூகம் எப்படி இயங்குகிறது எனப் புரிந்து கொள்ளாத ஒரு முட்டாள் மட்டுமே இதை தாராளவாத பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ரிஸ்க் என சொல்லுவான்.
ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அதை வைத்து எவ்வளவு பக்கங்கள் எழுதி பஞ்சாயத்து பண்ணுகிறோம். திரையரங்கில் எழுந்து நின்று கத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மீம்ஸ் போடுகிறோம். நியாயமற்று வேலையில் இருந்து ஒருவர் நீக்கப்படுவதை மட்டும் ஏன் ‘தோசை ஆறிப்போய் விட்டது’ எனும் கணக்கில் விட்டு விடுகிறோம்? உன்னை ஒரு இயக்குநர் ஏமாற்றி விட்டார், உன் எதிர்பார்ப்பை அவர் நிவர்த்தி செய்யவில்லை, உன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பது உன் கோபம் என்றால், வேலை நீக்கத்தின் போது ஒரு சகமனிதனின் திறன், அவனது அந்தஸ்து, கடமையுணர்வு, உழைப்பு எல்லாமே ஏமாற்றப்படுகின்றன, அவமதிக்கப்படுகின்றன அல்லவா? அதற்குத் தானே நீ நியாயமா கோபப்பட வேண்டும்?
