ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான ஒரு நன்னெறி, விழுமியம், உள்ளது. சில படங்கள் இந்த விழுமியத்தை நேரடியாக தலைப்பிலே கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின் “திருடாதேவின்” விழுமியம் எந்த சந்தர்பத்திலும் திருடக்கூடாது என்பது, காசை மட்டுமல்ல, தான் எடுத்து வளர்த்த குழந்தையை கூட, பாசம் காரணமாய், சொந்த பெற்றோரிடம் இருந்து பறித்து விடக்கூடாது என்பது. மிஷ்கினின் “அஞ்சாதேவும்” இப்படியான தலைப்பு அமைந்த படமே. இப்படி எந்த படத்திலும் ஒரு பாத்திரமோ / பார்வையாளனோ இறுதியில் கற்றுணர்வதற்கான ஒரு பாடம் இருக்கும். ஆனால் இது தலைப்பு, கதையமைப்பு, இறுதியில் கிளைமேக்ஸ் என சீராக வெளிப்படும் போதே அப்படம் ரசிக்கப்படும். யாரும் “திருடாதே” / “அஞ்சாதே”வை திருடக்கூடாது, துணிச்சலாக இருத்தல் வேண்டும் என போதிக்கிற படமாகப் பார்க்கவில்லை. ஏனெனில் இந்தக் கருத்தை ஒரு சிக்கலான கதைக்களத்தில் வைத்து உணர்ச்சிகரமாய் இப்படங்கள் சித்தரித்த போது நாம் ஒரு மாபெரும் விசயத்தை எதிர்கொண்ட திகைப்பை, உணர்ச்சி மேலிடலை அடைந்தோம். இப்படி ஒரு கருத்தை கதையாக்கி அதை ரசிக்க வைக்க திரைக்கதை அமைப்பில் கிளைமேக்ஸும் மிகவும் முக்கியம். அது கதையின் மையப் பிரச்சனைக்கு ஒரு அர்த்தபூர்வமான பதிலை, நிறைவான தீர்வை அளிக்க வேண்டும். மிஷ்கினின் “அஞ்சாதேவை” வைத்து இதை பரிசீலிப்போம்.
அஞ்சாதே”வின் மையக் கருத்தோட்டம் (controlling idea) என்ன? இரு உற்ற நண்பர்களில் போலீசாக வேண்டியவன் குற்றவாளியாகவும் குற்றவாளியாக வேண்டியவன் போலீசாகவும் சந்தர்ப்பவசத்தால் ஆகி விட்டால் என்னவாகும்? இக்கேள்வி தான் மொத்தப் படத்தையும் செலுத்துகிறது (“தங்கப்பதக்கம்” நினைவுக்கு வருகிறதா?)
ஆனால் படத்தின் தலைப்புக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லையே. சரி இப்போது மையக் கருத்தோட்டத்தை (controlling idea) பகுத்து நோக்குவோம்:
“போலீசாக வேண்டியவன் குற்றவாளியாகிறான், குற்றவாளி ஆக வேண்டியவன் போலீசாகிறான். ஏன் மற்றும் எப்படி? எப்படி என்பதற்கு விடை ‘சந்தர்ப்பவசத்தால்’. ஏன் என்பதற்கு விடை ஒருவன் (சத்யா) வாழ்க்கையை அஞ்சாமல் அதன் போக்கில் எதிர்கொள்கிறான்; மற்றவன் (கிருபா) தன் மூளையால் வாழ்க்கையை எதிர்கொள்கிறான். சமூகம் இட்ட பாதையில் பயணிப்பதே சரியானது என கிருபா நினைக்கிறான்; ஆனால் தன் இதயம் சொல்லுகிறதைக் கேட்பதே சரியானது என சத்யா நம்புகிறான். முதலாவது வாழ்க்கைக்கு அஞ்சி நடக்கும் மனப்பான்மை என இப்படம் வகுக்கிறது; இரண்டாவது அச்சமற்ற மனநிலை என்கிறது (பாரதியார் ஆத்திச்சூடியில் குறிப்பிடுவதைப் போல). இந்த “ஏன்” எனும் கேள்வியின் பதில் தான் இப்படத்தின் விழுமியம். இது தான் இப்படத்தின் “போதனை”. இது தான் இப்படத்தை மேலான சினிமாவாக்குகிறது. நம் நெஞ்சை விம்ம வைக்கிறது. கண்களில் கண்ணீரைத் துளிர்க்க செய்கிறது. வெளியாகி பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்க முடியாததாக்குகிறது.
ஆனால் இந்த “போதனை” என்பது ஒலிபெருக்கியை எடுத்து பிரசிங்கிக்கிற போதனை அல்ல, நுணுக்கமாக சினிமா மொழியுடன் பின்னிப்பிணைந்த “போதனை”.
“அஞ்சாதேவின்” முதல் காட்சியிலே நமக்கு இது தெரிந்து விடுகிறது – தன்னை அடிக்கிற ரௌடிகளைக் கண்டு கிருபா விலகி செல்கிறான்; அவர்களுடன் வம்பு ஏற்பட்டு அது வழக்கமானால் தன்னுடைய போலீஸ் கனவு நிறைவேறாமல் போய் விடுமே எனும் கவலை அவனை நடத்துகிறது. ஆனால் சத்யா அப்படி அல்ல. அவன் நேரடியாக ரௌடிகளை போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறான். அவனுக்குப் பின்னர் போலீஸ் ஆகும் ஆசை வந்ததும் அதையும் அவன் அதிகம் மூளையைக் குழப்பிக் கொள்ளாமல் தனக்குத் தெரிந்த வகையில் (மாமாவைப் பிடித்து அவரது செல்வாக்கை பயன்படுத்தி) வேலையை வாங்கிக் கொள்கிறான். கிருபாவின் நேர்த்தியான சமூக வழிமுறைகளுக்கு உகந்த முயற்சிகள் தோல்வி அடைகின்றன. இப்போது அவன் மனம் உடைந்து ஒரு ரௌடியாகவே மாறி விடுகிறான். “ரௌடியான” சத்யாவின் முன்பு குற்றங்கள் நடக்கும் போதும் அவன் தன் இதயம் சொல்கிற படியே நடந்து கொள்கிறான். ஆஸ்பத்திரியில் கிடக்கும் ஒரு ரௌடியைக் கொல்வதற்காக வாடகைக்கொலையாளிகள் வரும் போது காவலுக்கு இருக்கும் போலீஸ்காரர்கள் “கவனமாக”, “புத்திசாலித்தனமாக” அச்சத்துடன் நடந்து கொள்கிறார்கள்; ஆனால் சத்யா சுய-அக்கறையற்று, மூளையால் சிந்திக்கும் ‘புத்திசாலித்தனமற்று’, தன் துப்பாக்கியைக் கூட கீழே வீசி எறிந்து விட்டு அச்சமற்று நடந்து கொள்கிறான். வெல்கிறான். கிருபாவோ கொள்ளைக்கும்பலுடன் சேர்ந்த பின்னர் அவர்களின் சட்டதிட்டங்களை ஒட்டி “அச்சத்துடன்” நடந்து கொள்கிறான். அவன் திருந்தி “அச்சமற்றுப்” போவது கிளைமேக்ஸில் சில நிமிடங்களின் போது மட்டுமே – கரும்புக்காட்டில் கடத்தி வைக்கப்பட்ட ஐ.ஜியின் குழந்தைகளிடத்து அவன் கருணை காண்பிக்கிற இடத்தில். ஆனால் அவர்களை தப்பிக்க விட்ட பின் அவன் பணப்பையுடன் ஓடிச் செல்லும் போது மீண்டும் கொள்ளைக்காரனின் விதிமுறையையே பின்பற்றுகிறான், தன் இதயம் சொல்வதை அல்ல. இப்படி “அஞ்சாதே” படத்தை முழுக்க இதயத்தின் உணர்ச்சிகளுக்கு அஞ்சுவது / இதயம் சொல்வதற்கு அஞ்சாமல் உடன்பட்டு போராடுவது என எதிரிடைகளாகப் பிரித்து அதன் படி காட்சி அமைப்பை நாம் பகுத்துப் பார்க்க முடியும்.
(மேலும் படிக்க: https://bit.ly/2A2eHON)
